என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Theipirai Ashtami"
- இந்த கோவிலில், சுப்பு (எ) சுப்புலட்சுமி என்ற பெண் நாய் வளர்ந்து வருகிறது.
- சுப்புலட்சுமியை கால பைரவராகவே பக்தர்கள் கருதுகின்றனர்
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், காசிக்கு அடுத்த மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தட்சிண காசி காலபைரவர் கோவில் உள்ளது.
சுமார் 1500 ஆண்டு பழமையான இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை நாளில், அஷ்டமி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்கள். காலையில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகத்தை காண, பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம்.
இது தவிர, ராகுகால பூஜை, மாலை 6 மணிக்கு மிளகாய் வற்றல் மூலம் நடத்தப்படும் யாகம், எதிரிகளை ஒழிக்கும் சத்ரு சம்ஹார யாகம், குருதியாகம் ஆகியவை இங்கு நடத்தப்படுகிறது.
இந்த பூஜைகளில் வெளி மாநில விஐபி பக்தர்கள் கலந்து கொள்வர். இங்கு நடக்கும் பைரவர் ஜெயந்தி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
விழாக்காலத்தின் போது, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இந்த காலபைரவர் கோவிலில், சுப்பு (எ) சுப்புலட்சுமி என்ற பெண் நாய், கடந்த 6 வருடமாக வளர்ந்து வருகிறது. கோவில் பக்தர்கள் கொடுக்கும் பிஸ்கெட், பால் போன்றவற்றையும், ஊழியர்கள் தரும் பால் சாதத்தை மட்டும் சாப்பிடுகிறது. அசைவ உணவை சாப்பிடுவதில்லை.
மேலும், கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதும் கிடையாது. இந்த நாய் காலையில் 6 மணிக்கு நடை திறக்கும்போது அய்யருக்கு முன்னால் உள்ளே சென்று விட்டு திரும்பும்.
இதேபோல் மாலை 4 மணிக்கு நடை திறந்ததும் உள்ளே சென்று கால பைரவரை பார்த்துவிட்டு திரும்பும். சில நாட்களில் அடிக்கடி கோவில் உள்ளே சென்று விட்டு திரும்புகிறது. அதன் பின்னர் கோவில் வளாகத்திலோ அல்லது அறநிலையத்துறை செயல் அலுவலர் அறையிலோ படுத்துக் கொள்வது வழக்கம்.
காலபைரவரை தினமும் நாய் வழிபடும் அதிசயம், வேறு எங்கும் இல்லை என்பதால், இந்த காட்சியை பார்க்கும் பக்தர்கள் மெய்சிலிர்த்து போகின்றனர்.
இதுபற்றி கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் கூறுகையில், கடந்த 6 வருடமாக சுப்பு இங்கே வளர்ந்து வருகிறது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும்.
தினமும் கோவில் நடை திறக்கும் சத்தம் கேட்டதும், கருவறைக்குள் சென்று மூலவரை சுற்றி வந்து, பின்னர் கோயில் வளாகத்தில் படுத்துக்கொள்கிறது.
கோவிலை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. இதற்கு முன்பு பல நாய்கள் இங்கு வளர்ந்த போதும், சுப்பு மட்டுமே பைரவரை தினமும் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
எனது அறையில் படுத்திருக்கும் சுப்பு வெளியறினால் நல்லது என நாம் நினைத்தால், உடனே அறையை விட்டு வெளியேறி விடும். அந்த அளவிற்கு நாம் நினைப்பதை உணரும் சக்தியும் இந்த சுப்புக்கு உண்டு. சுப்புலட்சுமியை கால பைரவராகவே பக்தர்கள் கருதுகின்றனர் என்றார்.
- சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலை 11 முறை சுற்றி வந்து வழிபட்டனர்.
குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழமை வாய்ந்த காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. நாய் வாகனம் இன்றி, மேற்கு நோக்கி அமைந்த இந்த கோவிலில் பைரவரின் சூலாயுதம் கிடைத்ததால் ஆனந்தகால பைரவராக வீற்றிருப்பதாக புராணம் கூறுகின்றது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பைரவருக்கு பால், திரவிய பொடி, மஞ்சள், விபூதி, பன்னீர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால்
சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பாகற்காய் தீபம், தேங்காய், பூசணிக்காய், ஆகியவற்றில் தீபமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். குறிப்பாக வேலை கிடைக்க வேண்டி முந்திரி பருப்பு மாலையை பைரவருக்கு அணிவித்து காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலை 11 முறை சுற்றி வந்து வழிபட்டனர்.
- சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சாமிக்கு சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பால், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என சரண கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து அரளி பூக்களால் பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்புவை அடுத்த அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால ைபரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுக்காம்பட்டி துரைஆதித்தன் சித்தர் சுவாமிகள் தலைமையில் நடந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம், தயிர், நெய் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். சாவடி பஜாரில் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்தநாள்.
- நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள்.
அஷ்டமி என்பதே பைரவருக்கு உகந்த நாள்தான். அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு மிக மிகச் சிறப்புக்கு உரிய தினம்.
கலியுகத்தில், காலபைரவரே கண்கண்ட தெய்வம் என்று சொல்லுவார்கள். விரதம் இருந்து காலபைரவரை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார். கடன் அனைத்தையும் தீர்க்க வழிகிடைக்கும். எதிர்ப்புகள் யாவும் தவிடுபொடியாகும்.
சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு உரிய நன்னாளில், விரதம் இருந்து அவரை வணங்கிட மனதில் இருக்கிற தேவையற்ற பயமெல்லாம் விலகிவிடும். இந்தநாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!
பைரவர் என்பவரை மகா வலிமை கொண்டவர் என்றும் தீயசக்திகளையும் தீயவர்களையும் துவம்சம் செய்வார் என்றும் அநீதியை அழித்தொழித்து தர்மத்தை நிலைநாட்டுவார்.
பைரவரை தொடர்ந்து வணங்கிவந்தால், மனக்கிலேசம் விலகும் என்றும் மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் விலகும் என்றும் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதேபோல், இந்த நாளில் பைரவருக்கு வடைமாலை சார்த்தியும் வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள்.
இன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பு. முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் பலமிழப்பார்கள். தீயசக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருநாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.
முக்கியமாக, ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.
- பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூம்புகார் சாயாவனத்தில் சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நேற்று அஷ்டமியையொட்டி இக்கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் பைரவருக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, இனிப்பு பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களை சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.
* திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும். வழக்கில் வெற்றி கிட்டும்.
* திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.
* செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
* புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
* தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயாசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
* சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயாசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
இழந்த பொருட்களை மீண்டும் பெற:- பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
குழந்தைச் செல்வம் பெற:- திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.
சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:- சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.
தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:- ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
பின்னர் காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து அவர்கள் கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பைரவருக்கு தீபமேற்றி வழிபட்டால், சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
- பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும்.
பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். சொர்ண ஆகர்ஷண பைரவரை விரதம் இருந்து தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும். பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்சினைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!
தேய்பிறை அஷ்டமி நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சாத்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
நாளை மாலை வேளையில் காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மலர் மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி காலபைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. '
மேற்கண்ட முறையில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவரை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் பணவரவு பன்மடங்கு அதிகரிக்கும். பிறருக்கு கொடுத்த கடன் தொகைகள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நீண்ட நாட்களாக உடலையும் மனதையும் வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் மந்த நிலை நீங்கி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு தீபமேற்றி வழிபட்டால், சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
- நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
- கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.
காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் விரதம் இருந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல பாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை விரதம் இருந்து வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.
தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.
பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், ஸ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்
"ஓம் கால காலாய வித்மகே
கால தீத்தாய தீமகீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"
என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட்டால், எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- பைரவர் காவல் தெய்வம் போன்றவர்.
- பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி.
கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவ வழிபாடு செய்யச் செய்ய, வாழ்வில் உள்ள தடைகள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
பைரவர் பன்னிருகரங்களுடன் நாகத்தை முப்புரிநூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்தும், சூலாயுதம் ஏந்தியும் பாசக் கயிற்றைக் கையில் கொண்டும், அங்குசம் போன்ற ஆயுதங்களை தரித்தும் வீரமான திருக்கோலம் கொண்டு அருள்கிறவர். நாயை வாகனமாகக் கொண்டவர். பைரவர் அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கியே நின்றருள்வார். பைரவரே சிவாலயக் காவலர். தினமும் ஆலயத்தைப் பூட்டி சாவியை பைரவர் சந்நிதியில் வைத்துச் செல்வர்.
பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களில் ஒன்றான சனியின் குரு. குருவை வணங்கினால் சீடன் மகிழ்வார் என்பது இயல்பு. பைரவரை வழிபடுவதன் மூலம் சனி பகவானை குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும்.
பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கி நகரும் நாட்கள் தேய்பிறை காலம் என்போம். இந்த தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதி என்பது பைரவருக்கானது என்கிறது புராணம். எனவே தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவது மிகுந்த பலனைத் தந்தருளும் என்பது உறுதி.
பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி. சிவாலயங்களில், பைரவருக்கு சந்நிதி இருக்கும். பொதுவாகவே, சந்நிதி என்று இல்லாமல், பைரவரின் திருவிக்கிரகம் மட்டுமே இருக்கும். இந்தநாளில் அருகில் உள்ள சிவாலயத்துக்கு மாலையில் சென்று, பைரவரைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
எதிரிகளால் தொல்லை என்று கலங்குவோர், எந்தக் காரியம் செய்தாலும் தடையாக இருக்கிறதே எனப் புலம்புவோர், கடன் தொல்லையில் இருந்து மீளவே முடியவில்லையே என்று கண்ணீர் விடுவோர், தீய சக்திகளின் தாக்கம் இருப்பதாக வருந்துவோர்... மறக்காமல் பைரவரை நினைத்து பூஜிக்கலாம். பைரவாஷ்டகம் பாராயணம் செய்வதும் செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவதும் மகத்துவம் வாய்ந்தது. ராகுகாலத்தில் இந்தப் பூஜைகளை மேற்கொள்வதும் நாய்களுக்கு உணவளிப்பதும் மகோன்னத பலன்களை வழங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
வீட்டில் இருக்கும் சிவபெருமான் படத்துக்கு முன்னால் நெய்விளக்கேற்றுங்கள். சிவப்புநிற மலர்கள் கிடைத்தால் அதைச் சாத்தி வழிபடுங்கள். சிவனே பைரவர் ஆதலால் தவறாமல் சிவபுராணம் படியுங்கள். ஆதிசங்கரர் அருளிய காலபைரவாஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். இவையெல்லாம் மனதுக்கு மிகுந்த வலிமையைத் தரும். மேலும், எளிமையாக ஏதேனும் ஒரு பிரசாதம் செய்து நிவேதனம் செய்யுங்கள். குடும்பத்தில் அனைவரும் கூடி நின்று இந்த வழிபாட்டைச் செய்யும்போது அந்த கால பைரவரின் அருள் நம் குடும்பத்தை எப்போதும் காக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
மேலும் தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் ஆதரவற்றோருக்கும் பக்தர்களுக்கும் விநியோகம் செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு உணவோ பிஸ்கட்டோ கொடுப்பது கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி.
- பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
- பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.
பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.
பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.
ஞாயிறுக்கிழமை
சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடை பெறும்.
திங்கட்கிழமை
கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
செவ்வாய்க்கிழமை
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
புதன்கிழமை
மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.
வியாழக்கிழமை
தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை
ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக்கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சனிக்கிழமை
மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்