search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiagarajar"

    • மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
    • நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

    இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.

    மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    ×