search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "things to share with children"

    • குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது.
    • குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.

    குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது. ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் அன்பும், உணர்ச்சியும் கலந்த வலுவான பந்தத்தை கட்டமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வேலை, தொழில் நிமித்தமாக குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவளிக்க முடிவதில்லை.


    எவ்வளவு பிசியானவராக இருந்தாலும் தூங்கச் செல்வதற்கு முன்பாவது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போது சில விஷயங்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    வலுவான பந்தம்

    பெரும்பாலானவர்களுக்கு இரவில் தூங்க செல்வதற்கு முந்தைய நேரம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஏற்புடையதாகவே இருக்கும். அந்த நேரத்தை டி.வி. பார்ப்பது, செல்போன் பார்ப்பது போன்ற வேறு வகையில் செலவிடாமல் குழந்தைகளுடன் பேசி மகிழ்வது வலுவான பந்தத்தை ஏற்படுத்தும்.

    அதேநேரத்தில் நேர்மறையான விஷயங்களை மட்டுமே குழந்தைகளிடம் பேச வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் தூக்கத்தை பாதித்து, மன ரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.

    எதிர்கால கவலை

    தூங்கச் செல்வதற்கு முன்பு பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதிர்கால கவலைகளை பற்றி பேசக்கூடாது. அது அவர்களை கவலையடைய செய்வதுடன் தூக்கத்தையும் பாதிக்கும்.

    தண்டனை

    தூங்கும் முன்பு குழந்தைகளை தண்டிப்பதையும், அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அவர்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர செய்யும் விதமாக நேர்மறையான கருத்துக்களை பேச வேண்டும்.


    ஒப்பிடுதல்

    தூங்கும் முன்பு குழந்தைகளுடன் பேசும்போது தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. அது தன்னை தானே தாழ்த்திக்கொள்ள வழிவகை செய்துவிடும்.

    மற்றவர்களுடன் ஒப்பிடாமல் அவர்களின் தனித்துவமான தனித்திறன்களைப் பற்றி பேச வேண்டும். அதனை மெருகேற்றுவதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். அவர்களின் திறமைகளை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.


    பொய் வாக்குறுதி

    பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வேலையை கொடுத்து அதனை நிறைவேற்றிக்கொடுத்தால் பரிசு தருவதாக தவறான வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது. அவர்களை நம்ப வைத்து வேலை வாங்குவதும், அந்த வேலையை செய்து முடித்த பின்பு எதுவும் வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றுவதும் தவறான பழக்கம்.

    பெற்றோர் பிள்ளைகளிடத்தில் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் குழந்தைகளும் அதையே பின்பற்றத் தொடங்கி, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.


    எதிர்மறையான விஷயங்கள்

    தூங்கும் முன்பு குழந்தைகளின் மனதில் நேர்மறையான வார்த்தைகளை பதிய வைக்க வேண்டும். எதிர்மறையான விஷயங்களை சொல்வது அவர்களை மன வேதனைக்குள்ளாக்கும்.

    தங்களை தாங்களே கேள்வி கேட்டு தேவையற்ற மனக்குழப்பத்திற்கு ஆளாவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் நேர்மறையான கருத்துக்களை வழங்குவதும் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கியம்.

    ×