search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumurthi Hills"

    • தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன.
    • யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன வில ங்குகள் நீர், உணவு தேடி மலையடிவார பகுதி கிராம ங்களுக்கும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முன்தினம் அதிகாலை, குட்டியுடன் கூடிய, யானை க்கூட்டம் திருமூர்த்தி மலை, கன்னிமார் ஓடை வனப்பகுதி வழியாக திருமூர்த்தி நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

    வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் 250 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்ப ட்டிருந்த கம்பி வேலி, 50க்கும் மேற்பட்ட வேலி கற்களை உடைத்து, உள்ளே நுழைந்த யானைக்கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தி குருத்துகளை உண்டுள்ளன. தொடர்ந்து உடுமலை - திருமூர்த்திமலை ரோட்டை கடந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், பயிர்கள் மற்றும் குழாய், மோட்டார், போர்வெல் உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை சேதப்படு த்தியுள்ளன.இது குறித்து தகவல் கிடைத்ததும், உடு மலை வனத்துறையினர் ஆய்வு செய்ததோடு, யானைக்கூட்டத்தை மீண்டும் வனத்திற்குள் விரட்ட பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகை யில், பெரிய தந்தங்களுடன் கூடிய ஆண் யானை, சில மாதங்களே ஆன குட்டியுடன் கூடிய பெண் யானை கொண்ட கூட்டம், விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.பல ஆண்டுகளுக்கு பின் தற்போது திருமூர்த்திமலை கோவில், நீச்சல் குளம், ஆய்வு மாளிகை பகுதிகளில் யானை கூட்டம் வந்துள்ளன. குட்டியுடன் உள்ளதால் அது பெரிதாகும் வரை அவற்றை விரட்ட முடியாது.விவசாய பயிர்கள், கட்டமை ப்புகள் சேதம டைவதோடு உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • மனதை கொள்ளை கொள்ளும் அழகையும் சுற்றுச்சூழலையும் சமமான சீதோஷ்ண நிலையையும் பெற்றுள்ளது திருமூர்த்திமலை.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அதனைச் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது.

    உடுமலை :

    வானமும் பூமியும் ஒன்று சேர்ந்து நமக்கு அளிக்கும் சீதனம் மலையும் மலை சார்ந்த இடமும், அதனுள் உற்பத்தியாகின்ற ஆறுகளும் உயிர்வாழ் வனவிலங்குகளும்தான். இயற்கையோடு இரண்டறக் கலந்த ரம்மியமான ,எழில் மிகுந்த ,மனதை விட்டு நீங்காத சூழல் மண் மற்றும் மூலிகை நிறைந்த காற்றை சுவாசித்து அனுபவிப்பதற்கு இத்தலைமுறையில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இதனால் தான் சுற்றுலா என்றதும் ஒவ்வொருவரின் முதல்,முதன்மை, முத்தான தேர்வாக சட்டென நினைவில் வருவது மலை வாழிடங்கள்.

    சுற்றுலாக்களில் பலவகை இருந்தாலும் அதில் இயற்கை சுற்றுலாவே முதலிடம் பிடிக்கிறது.அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனைத்து வளங்களையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத மனதை கொள்ளை கொள்ளும் அழகையும் சுற்றுச்சூழலையும் சமமான சீதோஷ்ண நிலையையும் பெற்றுள்ளது திருமூர்த்திமலை. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்து அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அதனைச் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது.

    தென்கையிலாயம் என்று அழைக்கப்படும் தோணிநதி தவழ்ந்து வருகின்ற பாலாற்றின் கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள குன்றில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகிய கடவுள்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். படைத்தல்,காத்தல், அழித்தல் என்ற முத்தொழில் புரிந்து வரும் மும்மூர்த்திகள் ஒருசேர சுயம்புவாக அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசய அற்புதக் காட்சியாகும். குன்றின் மீது உப்பு,குருமிளகு, சந்தனம் வீசி பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.1968-ம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்ற இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளிலும் அபிராமி,மகேசுவரி, கௌமாரி,காளி, வாராகி,அயிராணி,இந்திராணி ஆகிய சப்த கன்னிகள் ஒரே கல்லில் ஒன்றாக அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு முன்பு கார்த்திகை திருவிழாவன்று ஜோதி ஏற்றக்கூடிய 30 அடி உயரம் கொண்ட ஜோதிக்கம்பம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இதன் அடிப்பாகத்தில் அஷ்ட திக்குகளையும் நோக்கியவாறு பத்திரகாளி, வனதுர்க்காதேவி, விசாலாட்சி ஆகிய மூன்று சக்தி மூர்த்தங்களும் கூத்தாண்டவர், அகோரவீரபத்திரர் ஆகிய சிவ மூர்த்தங்களும் ராம அவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் மூன்று வைணவ மூர்த்தங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது சமய ஒற்றுமை சைவ, வைணவ ஒற்றுமையை குறிக்கும் சான்றாக பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு முன்பு வரலாற்றை விவரிக்க கூடிய அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் எழுந்தருளி இருக்கும் எட்டுகால் மண்டபமும் பக்தர்கள் தங்கி இளைப்பாறும் வகையில் கட்டப்பட்டுள்ள ஆயிரங்கால் மண்டபமும் இன்றளவும் தன்னிலை குறையாது கம்பீரத்துடன் காட்சி அளித்து வருகிறது.

    குருமலை வனப்பகுதியில் உற்பத்தியாகும் தோணிநதி தென்னாறு,பாலாறு ஆகியவற்றுடன் இணைந்து உழுவியாறு,கொட்டையாரு,பாரப்பட்டி யாரு,உப்புமண்ணம்ஓடை,கிழவிபட்டி ஓடை உள்ளிட்டவற்றை உள்வாங்கி தவழ்ந்து வந்து பஞ்சலிங்கங்கள் எழுந்தருளியுள்ள கூடுதுறையில் ஒன்றிணைந்து நீர்வீழ்ச்சியாக உருமாறி மூலிகைத் தண்ணீரால் எண்ணற்றோரின் மனப்பிணி,உடல் பிணியைப் போக்கி மும்மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் குன்றை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைகின்றது பஞ்சலிங்க அருவி.

    பஞ்சபூதங்களும் ஒன்றாக இணைந்து பஞ்சலிங்கேஸ்வரராக காட்சியளிக்கும் மலைமீது உள்ள பஞ்சலிங்கங்களை வழிபட்டால் திருவையாறு, திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வழிபட்ட பாக்கியத்தை பெறலாம்.பஞ்சலிங்கங்களை வழிபடுவதற்கு மாதந்தோறும் வருகின்ற பிரதோஷ தினத்தன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.பஞ்சலிங்க அருவியும் அதன் பராமரிப்பும் இன்று வரையிலும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    மும்மூர்த்திகள் குன்றில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளதால் கோபுரம் அமைக்கப்படவில்லை.இதனால் கோபுர வடிவில் செய்யப்பட்ட சப்பரத்தை மாசி மாத மகாசிவராத்திரியன்று பூலாங்கிணர் பகுதியில் இருந்து கிராமங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குன்றின் மீது வைக்கப்பட்டு விடிய விடிய ஆன்மீகம்,கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் விழா நடத்தப்படுகிறது.அதுதவிர பிரதோஷம், கிருத்திகை,ஆடி,தை புரட்டாசி உள்ளிட்ட விசேச அமாவாசை நாட்கள், தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அமாவாசை நாட்களில் பாலாற்றின் கரையில் பொதுமக்கள் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு வருகின்ற வழியில் சிறுவர்பூங்கா,நீச்சல் குளம்,வண்ணமீன் காட்சியகம்,படகு இல்லம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் சுதந்திரபோராட்ட வரலாற்றை நினைவு கூறத்தக்க வகையில் தளி பாளையப்பட்டு அரசர் எத்தலப்ப நாயக்கரின் திருவுருவங்களும் போர் முறைகளும் காண்டூர் கால்வாய் அருகே சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.இங்கு தமிழக அரசால் எத்தலப்ப நாயக்கருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.மேலும் கடந்த 2013 - ம் ஆண்டு முதல் தமிழர்களின் வீரம்,கலை,கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாகவும் அரசுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையும் இணைந்து ஆடிப்பெருக்கு விழாவை நடத்தி வந்தது.கொரோனாவிற்கு பின்பு விழா நடத்தப்படவில்லை.

    பல்வேறு சிறப்புகளும் பெருமையும் வாய்ந்த திருமூர்த்தி மலையில் இன்றளவும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2000 ல் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அதன் பின்பு நடவடிக்கை எடுக்கவில்லை.ஆனாலும் 2006-ம் ஆண்டு சுற்றுலாத் துறையின் சார்பில் 2.5 லட்சமும் கோவில் நிர்வாகம் சார்பில் 2.5 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பாதை மற்றும் பக்கவாட்டு இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டது.மேலும் பஞ்சலிங்க அருவிக்கு முன்பு 1991-ம் ஆண்டில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் சேதம் அடைந்து உள்ளது. அதனுடன் சேர்த்து அருவிக்கு செல்லும் பாதை, பக்கவாட்டு கம்பி வேலி, இரும்புகைப்பிடி, சுகாதார வளாகம் கட்டுவதற்கு கருத்துரு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.அனுமதி கிடைத்த பின்பு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.அதுதவிர கோவில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி,புறக்காவல் நிலையம்,பேருந்து நிறுத்தம்,பார்க்கிங் வசதி,ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாக உள்ளது.இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைவது மூலமாக குருமலை, குளிப்பட்டி,பூச்சகொட்டாம்பாறை, திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள்,பொதுமக்கள்,சுற்றுலாபயணிகள் பயனடைவார்கள்.

    சிறுவர்களைக் கவரும் விதமாக அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவும் அதில் உள்ள பொழுதுபோக்கு உபகரணங்கள், விலங்குகளின் சிலைகள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழிந்தும் வருகின்றது. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை.அதே போன்று 1991-ம் ஆண்டு தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட படகுத்துறையும் அணைப்பகுதியில் இயங்கி வந்த படகும் பல்வேறு காரணங்களால் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து காட்சிப் பொருளாக மாறி உள்ளது. அதை புதுப்பித்து இயக்குவதற்கு தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அதற்கு விரைவில் செயல் வடிவம் கொடுத்து படகு சவாரியை துவக்க வேண்டும்.

    அதே போன்று சுற்றுலா பயணிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது தொலைத்தொடர்பும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியும். இதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியமாகும். மேலும் பொதுப்பணித்துறை சார்பில் திருமூர்த்தி அணையின் நுழைவு வாயிலில் இருந்து ஷட்டர்கள் வரையிலான 2 கிலோ மீட்டர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.அதுவும் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. நாடி வந்து வணங்குவோர்க்கு முக்தியளிக்கும் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள திருமூர்த்திமலையை சுற்றுலா தளமாக அறிவித்து அனைத்து தரப்பட்ட மக்களையும் கவரும் விதம் அங்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

    ×