என் மலர்
நீங்கள் தேடியது "Thirumurugan"
- 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று திருமுருகன் பதவியேற்றுக்கொண்டார்.
- பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.