search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirupparankundram Temple"

    • தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • தேரோட்டத்தால் கிரிவலப்பாதை, கோவில் வீதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தினமும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், வெள்ளிபூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அட்சதை தூவி சுவாமியை வழிபட்டனர். பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர்.

    இரவில் 16 கால் மண்டபம் அருகே பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. தெய்வானையுடன் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். திருமணத்தை நடத்தி வைத்து அது சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பிறகு சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் அங்கிருந்து விடைபெற்று இருபிடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் வெள்ளை வீசியதை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சிறிய தேரில் விநாயக பெருமான் புறப்பட்டார். அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது.

    தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தேர் கிரிவலப்பாதையில் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. கிரிவலப் பாதையில் வழிநெடுங்கிளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கிரிவலப்பாதையில் தேர் தங்கு தடையின்றி செல்ல வசதியாக சாலைகள் சீரமைக்கப்பட்டிருந்தன. சாலையோர ஆக்கிரமிப்புகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதனால் கிரிவலப்பாதையில் தேரை பக்தர்கள் எளிதாக இழுத்து சென்றனர். தேரோட்டத்தால் கிரிவலப்பாதை, கோவில் வீதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் மற்றும் கிரிவலப்பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் வாகனத்தில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தீர்த்தவாரியுடன் நாளை நிறைவடைகிறது.

    ×