search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruttani Temple"

    • திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.
    • சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன.

    திருத்தணி:

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகப் பெருமானின் 5-ம் படை வீடாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    திருத்தணி மலைக்கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இங்கு தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்கள் வைத்திருக்கும் பழம் உள்ளிட்ட பொருட்களை பறித்து செல்வதும், பல நேரங்களில் பக்தர்களை கடித்த சம்பவமும் நடந்து உள்ளது.

    இதனால் திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் சுற்றித் திரிந்த சில குரங்குகள் பிடிக்கப்பட்டன. ஆனாலும் அதன் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. குரங்குகளின் எண்ணிக்கை சில மாதங்களிலேயே மீண்டும் அதிகரித்து விட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சுமார் 50 குரங்குகள் கூட்டமாக கோவிலுக்குள் புகுந்தன. குரங்குகள் பக்தர்களை மிரட்டியபடி அட்டகாசம் செய்தன. இதனால் பக்தர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

    அப்போது சில குரங்குகள் மூலவர் சன்னிதானம் செல்லும் வழி வரை சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூடுதல் கோவில் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவிலுக்குள் புகுந்த குரங்குகளை விரட்ட தொடங்கினார். ஆனால் குரங்குகள் அங்கும், இங்கும் தாவி ஊழியர்களுக்கு போக்கு காட்டியது.

    சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கோவிலுக்குள் இருந்த குரங்குள் அனைத்தும் வெளியே விரட்டப்பட்டன. இதன் பின்னரே கோவில் ஊழியர்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர்.

    குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பக்தர்கள் தரிசனம், அபிஷேகம் ஆகியவை சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் திருத்தணி மலைக்கோவில் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    திருத்தணி கோவிலில் குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×