என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Thiruvengidam Venkadajalapathi Temple"
- அன்னை பகவதி வேங்கிடத்தம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது.
- மூலவராக வெங்கடாஜலபதி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள திருவேங்கிடம் என்ற இடத்தில், திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கேரள மாநில மக்கள், இந்த ஆலயத்தை 'கேரள திருப்பதி' என்று கொண்டாடுகிறார்கள்.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வழிபாட்டு தலத்தில், மூலவராக வெங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். இவர் ஆந்திர மாநிலம் திருமலை - திருப்பதியில் வழிபடப்படும் வெங்கடாஜலபதியின் அம்சம் என்கிறார்கள்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9218793-newproject2.webp)
தல வரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர், திருமலை - திருப்பதி திருக்கோவிலின் தீவிர பக்தரான ஒரு முனிவர், 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் குருவாயூரில், கிருஷ்ணருக்கும், பார்த்தசாரதிக்கும் தனித்தனி கோவில்கள் இருப்பதைக் கண்டார்.
அதோடு குருவாயூர் பகுதி மக்களுக்கு குருவாயூரில் இருந்து திருமலை - திருப்பதி சென்று வருவது மிகவும் கடினமான பயணமாக இருந்ததையும் உணர்ந்தார். எனவே, திருமலை -திருப்பதி தலத்திற்கு ஈடாக குருவாயூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என்று விரும்பினார். அதற்கான வேண்டுகோளை, பெருமாளிடமே வைத்தார்.
பின்னர் அந்த முனிவர் குருவாயூர் அருகே தற்போது இருக்கும் கோவிலுக்கான இடத்தை தேர்ந்தெடுத்தார். அதன்பின், திருப்பதியில் இருந்து ஒரு கருங்கல் சிலையைக் கொண்டு வந்து, இந்த தலத்தில் நிறுவி பிரமாண்ட கோவிலை உருவாக்கினார்.
இக்கோவில் குருவாயூரில் உள்ள திருவேங்கடம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பெரும்பாலான கேரள கிராமங்கள் உள்ளது போல, இக்கோவிலின் பெயரும், இந்த கிராமத்தின் பெயரும் ஒன்றாகவே உள்ளது.
இக்கோவில் இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. எனவே இக்கோவிலை இங்குள்ள மக்கள், 'கேரள திருப்பதி' என்று போற்றி வழிபட்டனர்.
முனிவரால் அர்ப்பணிப்பு உணர்வோடு எழுப்பப்பட்டு, அப்பகுதி மக்களால் போற்றப்பட்ட இக்கோவில், அன்னிய படையெடுப்புகளால் சேதமடைந்தது. மூலவர் சிலையும் சிதைக்கப்பட்டது.
இதன் காரணமாக பல ஆண்டுகாலம் இக்கோவில் வழிபாடின்றி கிடந்தது. 1974-ம் ஆண்டிற்கு பின்பு சிலரால் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், இந்த கோவில் மூலவர் ஸ்ரீ வெங்கடாஜலபதி என்பதும், இதை ஒரு முனிவர் கட்டியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கோவில் மீண்டும் கட்டப்பட்டு, 1977-ம் ஆண்டு திருப்பதியில் இருந்து மூலவர் ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கான ஒரு புதிய திருவுருவக் கற்சிலை கொண்டு வரப்பட்டு, உரிய வழிபாடுகளுடன் முறைப்பட நிறுவப்பட்டது.
இக்கோவிலில் கேரள வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது. குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் தலைமை அர்ச்சகரே, இந்த கோவிலின் அர்ச்சகராகவும் உள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9218794-newproject3.webp)
ஆலய அமைப்பு
இவ்வாலயத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு வாசல்கள் உள்ளன. ஆலயம் செல்வதற்கு மேற்கு வாசல்தான் பிரதானமாக இருக்கிறது. இதன் அருகில் ராமானுஜர் சன்னிதி உள்ளது. இவரது சன்னிதி, மூலவர் வெங்கடாஜலபதியை வழிபடும் வகையில் இருக்கிறது.
அதையொட்டி அலுவலக கட்டிடம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நன்கொடையாக அளித்த திருமண மண்டபம் அமைந்துள்ளன. அதன் எதிரில் சிறிய அளவிலான 'தாழந்தே காவு பகவதி' ஆலயம் இருக்கிறது.
ஆலயத்தின் கருவறையில் மூலவராக வெங்கடாஜலபதி அருள் பாலிக்கிறார். இவர் திருமலை - திருப்பதி பெருமாளை நினைவூட்டும் வகையிலும், அதேநேரம் எளிய வடிவத்திலும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இக்கோவிலில் அன்னை பகவதி வேங்கிடத்தம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. இது ஆலயத்தின் தெற்கிழக்கில் மேற்கு நோக்கிய சன்னிதியாக அமைந்துள்ளது. இந்த பகவதியை பரதேவதையாகவும், சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தங்கள் குடும்பத்தின் அன்பான அன்னையாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இந்த தேவிக்கு முக்கியமான வழிபாடு 'பூ மூடல்' மற்றும் ஆலப்புழா ஆலயத்தைப் போல 'முட்டறுக்கல்' ஆகும்.
பூ மூடல் வழிபாடுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்பதே, இந்த அன்னையின் மகிமையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. தவிர கணபதி, ஐயப்பன், நாகராஜா, பிரம்மராட்சசு போன்ற துணை சன்னிதிகளும் அமைந்துள்ளன.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9218835-newproject4.webp)
இக்கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு முக்கியமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஒன்று 'மகரச் செவ்வாய்' என்று அழைக்கப்படும் திருவேங்கிடத்தம்மா தேவியின் திருவிழா. இது கேரளாவில் மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தின் முதல் செவ்வாய் அன்று கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவிற்கு முன்பாக ஆலய வளாகத்தில் இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை 41 நாட்கள் வெள்ளரி பூஜை நடைபெறும். இரண்டாவதாக பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.
இதன் 10-ம் நாளில், 'பர புறப்பாடு' என்று அழைக்கப்படும், தாயார் வீதி உலா முக்கியமானது. அப்போது கிராமம் முழுவதும் சுற்றி வந்து அம்மன் அருள்புரிவார். பிரமோற்சவத்தில் அனைத்து நாட்களிலும் ஆன்மிக சொற்பொழிவுகள், அன்னதானம் நடைபெறும்.
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணப்பேறு, குழந்தைப்பேறு சிறப்பாக அமைய இவ்வாலய பெருமாளும், தாயாரும் அருள்புகிறார்கள். இவ்வாலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இருந்து கிழக்கே சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருவேங்கிடம் வெங்கடாஜலபதி கோவில். குருவாயூர் ரெயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் ரயில்வே மேடையில் இருந்தே இக்கோவிலை எளிதாகக் காண முடியும்.