search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thrown out"

    இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க மோடி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. மாநில மாநாட்டில் வைகோ பேசினார். #MDMK #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க. மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து உள்ளது. பல தேசிய இனங்களை கொண்ட நாடு. இந்த ஒருமைப்பாடு நிலைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மதவாத, சங்பரிவார இயக்கங்களின் கொட்டம் 2019-ம் ஆண்டுக்கு பிறகும் தொடருமானால் நாடு ஒருமைப்பாட்டுடன் நிலைக்குமா? என்பது கேள்விக்குறிதான். இதை சொல்கிற துணிச்சல் ம.தி.மு.க.வுக்கு உண்டு. இங்கே நீங்கள் இந்த மாநாட்டில் பார்க்கின்ற கூட்டம் தங்கள் கைக்காசுகளை போட்டு வந்திருக்கிறது. மிக நலிந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதுதான் எங்களது வலிமை. எங்களிடம் வாக்கு வங்கியான வலிமை குறைவுதான். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், வாக்குகளை விற்பனை செய்யாமல் லட்சியத்துடன் நாங்கள் வாழ்கிறோம்.



    1962-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி ராஜ்ய சபாவில் அறிஞர் அண்ணா பேசும்போது நான் இந்திய யூனியனில் உள்ள திராவிட நாட்டில் இருந்து வருகிறேன். திராவிடன் என்று என்னை அழைப்பதில் பெருமை கொள்கிறேன். திராவிடர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று கூறினார்.

    அப்போது அவர் பேச்சை முடித்த பின்பு, பாபு ஜெகஜீவன்ராம் அண்ணாவின் கையை பிடித்து நான் பீகாரில் இருந்து வந்திருக்கும் திராவிடன் என்று கேட்டார். தனி நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிய அறிஞர் அண்ணா, சீன போரின்போது அந்த கொள்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். அதை அவர் தெளிவாகவும் கூறி இருக்கிறார். அவர் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை 1967-ம் ஆண்டு ஏற்றபோது தாய்க்கு பெயர் வைத்ததுபோன்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டினார். சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கினார்.



    1978-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி ராஜ்யசபையில் எனது கன்னிப்பேச்சை மாநில சுயாட்சிக்காக வழங்கினேன். அந்த பேச்சின் முடிவில் என் லட்சியத்துக்காக நான் கொண்ட கட்சியின் கொள்கைக்காக உயிர் பிரிந்தாலும், உறுதியுடன் இருப்பேன். இந்த வாய்ப்பை தந்த கலைஞருக்கு நன்றியையும் தெரிவித்து பேசினேன்.

    பின்னர் கலைஞரை பார்க்க வந்தேன். அவர் என்னை காரில் அழைத்து சென்றபோது இங்கே சட்டமன்றத்தில் நான் இல்லாதபோது உன்னை பற்றி தவறாக பேசினார்கள். பாராளுமன்றத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக நீ பேசியதாக குற்றம் சாட்டினார்கள். உடனே பேராசிரியர் அன்பழகன் அதற்கு பதில்அளித்தார். நான் அந்த வேளையில் அவையில் இல்லை. இருந்திருந்தால் வேறுமாதிரியாக பேசியிருப்பேன், என்றார்.

    நீங்கள் இருந்தால் என்ன அண்ணா பேசியிருப்பீர்கள் என்று கேட்டேன். என் தம்பி மாநில சுயாட்சி வேண்டாமென்று கூறிஇருப்பான். ஆனால் தமிழ்நாட்டை தனி நாடாக கொடுங்கள் என்று கேட்டிருப்பான். அந்த அளவுக்கு என் மீது அன்பு வைத்திருந்தவர். 3 முறை என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர். அவரை சிறு துரும்புக்கூட தொட அனுமதிக்காமல் மெய்க்காப்பாளர் படையை உருவாக்கியவன் நான். அவரை உயிராக நேசித்தேன்.

    இந்துக்கள் தேசம், இந்துக்களின் நாடு, முஸ்லிம்களை வெளியேறுங்கள் என்று சொல்லும் ஆதிக்க சக்திகள், சங்பரிவார சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும். மதச்சார்பின்மை அழிந்து விட்டது, தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. மக்களுக்காக போராட வேண்டிய எடுபிடி அரசு ஊழல் அரசாக உள்ளது. அண்ணாவின் பெயரை சொல்லக்கூட தகுதி இல்லாத அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வின் எடுபிடியாக இருக்கின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை எப்படியும் திறப்பதற்காக கபட நாடகம் ஆடுகிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். நடக்கப்போவதை சொல்கிறேன். எப்படியும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிடுவார்கள். ஆனாலும் நான் தன்னலமற்று போராடிக்கொண்டு இருக்கிறேன்.

    தமிழக அரசு தூக்கி எறியப்பட வேண்டிய அரசு. மணல், குட்கா, ஒப்பந்த பணிகள் என அனைத்திலும் ஊழல். மத்திய அரசுக்கு குற்றேவல் செய்யும் அரசாக இருக்கிறது. இந்தநிலையில் சமூக நீதி, இடஒதுக்கீடு, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மத்தியில் இருக்கும் நரேந்திரமோடியின் கூட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்.

    தமிழ் ஈழம் மலர்ந்து ஐ.நா.சபையில் தமிழர் நாட்டுக்கு என்று பிரதிநிதி வேண்டும். என் இதயத்தில் பதிந்த பிரபாகரன் என்ற ஓவியத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இன்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டு 7 நாட்டு படைகள் உதவியுடன் விடுதலை புலிகளை அழித்தோம் என்று கொக்கரிக்கிறான் ராஜபக்சே. அந்த 7 நாட்டு படைகள் உதவி இல்லாமல் இருந்தால், சிங்கள படையை வைத்துக்கொண்டு விடுதலை புலிகளை ராஜபக்சேவால் வென்றிருக்க முடியாது. ஹிட்லரை விட கொடுமைகள் செய்தவன் ராஜபக்சே.

    என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு நரேந்திர மோடியுடன் கூட்டணி வைத்தது. ஆனாலும், அவர் பதவியேற்பு விழாவில் ராஜபக்சேவை அழைத்தபோது, அவர் வரக்கூடாது மீறி வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று உடனடியாக வெளியேறினோம். பதவிகள் கிடைக்குமென்று அங்கே இருக்கவில்லை. பிரபாகரன் தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர். அவருடைய படையில் உள்ள வீரர்களும் ஒழுக்கம் மிக்கவர்கள். அவர்களால் எந்தவொரு சிங்கள பெண்ணுக்காவது பாலியல் தொல்லை இருந்தது என்று யாரும் சொல்ல முடியாது.

    எனவேதான் எங்கள் ரத்தத்திலும், தொண்டர்களின் ரத்த அணுக்களிலும் ஈழ விடுதலை என்ற உணர்வு கலந்து உள்ளது. மதவாத ஆட்சி அகல வேண்டும். மத்தியில் கூட்டணி தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி அமையும்.

    தமிழகத்தில் இந்த அரசு அகற்றப்பட வேண்டும். தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்கிற உறுதியை எடுத்துக்கொண்டு கூட்டணியை அறிவித்தோம். என் மீது விமர்சனங்களை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். எனக்காக பலர் உயிர்விட்டது போதும். நான் நாணயமாக இருக்கிறேன். நான் நேர்மையாக இருக்கிறேன். எனது லட்சியத்துக்காக வாழ்கிறேன். எனக்கென்று இருக்கின்ற குடும்பம் தொண்டர்களாகிய உங்கள் குடும்பம் தான். உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி. நாம் நல்ல இடத்திற்கு செல்வோம். நீங்கள் மகிழ்கிற நாள்தான் எனக்கும் மகிழ்ச்சியான நாள்.

    இவ்வாறு வைகோ கூறினார். 
    ×