என் மலர்
நீங்கள் தேடியது "Tindivanam"
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக 2 கார்களில் எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, பாபு மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் திண்டிவனம்-மரக்காணம் சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 21 கேன்களில் 735 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைதொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (50), ராவணாபுரத்தை சேர்ந்த தாமோதரன்(32), ஆறுமுகம்(30), முருகன்(32), கீழ்இடையாளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(50) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரிசாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 735 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.
இதையொட்டி திருமண ஏற்பாடுகளில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் தாசில்தார் கீதா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் ஊரல் கிராமத்துக்கு விரைந்து சென்று மணமகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறினர்.
இதனையேற்ற மணமகளின் பெற்றோர், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறியதோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியை மீட்டு சமூக நலத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதன் மூலம் இன்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 35). சாராய வியாபாரியான இவர் மீது சாராயம் விற்பனை செய்தல், கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த மாதம் மயிலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக பிரேம்நாத்தை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் சாராய வியாபாரி பிரேம்நாத்தை மயிலம் போலீசார் நேற்று தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். #Tamilnews
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த ஆணைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 57). இவரது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
அந்த திருமண பத்திரிகையை சென்னையில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக பீர் முகமது தனது உறவினர்களான அகமது உசேன்(65), அப்துல் ரகுமான்(27) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.
காரை அப்துல் ரகுமான் ஓட்டினார். அந்த கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது கார் அப்துல் ரகுமானின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதுவதுபோல் சென்றது. அந்த பஸ் மீது மோதாமல் இருக்க காரை அப்துல்ரகுமான் வலதுபக்கமாக திருப்பினார். அப்போது அங்கிருந்த சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்தது.
இதில் அப்துல்ரகுமான் மற்றும் அகமது உசேன் ஆகியோர் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பீர்முகமது பலத்த காயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த பீர்முகமதை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் இன்று காலை 6 மணி அளவில் திண்டிவனம் அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 60 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் சைக்கிளில் கீரைக்கட்டுகளை ஏற்றிக்கொண்டு அங்குள்ள வளைவில் திரும்பினார். அப்போது அவர் மீது அரசு பஸ் மோதியது.
இதில் முதியவர் உடல்நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்திவருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 வழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க விபத்து நடைபெறும் இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள், மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் உள்ள 191.20 கிலோ மீட்டர் சாலையில் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர் மின்கோபுரங்கள், சர்வீஸ் சாலைகளில் வேகத்தடைகள் போன்ற பணிகள் விரைந்து மத்திய அரசின் அனுமதி பெற்று செய்து தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்கள் சிவாஜி, நாராயணன், ரிலையன்ஸ் மேலாளர் முத்துகுமார், மண்டல போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (தேன்கனிக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.