search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchi District"

    திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    திருச்சி:

    மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வை மாணவ-மாணவிகள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடம் தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. இதேபோல இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, முசிறி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை, அயிலாபேட்டை, சோமரசம்பேட்டை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், இனாம்குளத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல வையம்பட்டி, மணப்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, துவரங்குறிச்சி, மண்ணச்சநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புள்ளம்பாடி, பெருவளப்பூர், தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-1 மாணவர்களும் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி காணொலி மற்றும் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட உள்ளது. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் சேரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×