search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupavai"

    • கண்ணன் வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
    • தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

    அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • உன்னை தலைவனாக பெற்று புண்ணியம் செய்து இருக்கிறோம்.
    • இனிமையான அமுதம் போன்றவனே!

    திருப்பாவை

    பாடல்

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

    அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்

    பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

    குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

    சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,

    இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    கோவிந்தா! நாங்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். கட்டுச்சோறு கட்டிக்கொண்டு பசுக்களின் பின்னாலே காட்டுக்குள் சென்று சாப்பிடுவோம். படிப்பறிவு இல்லாதவர்களாகிய நாங்கள், விரதமிருக்கும் முறை பற்றி அறியாதவர்கள். ஆயர் குலமாகிய எங்கள் குலத்தில் வந்து நீ பிறந்தாய். உன்னை தலைவனாக பெற்று புண்ணியம் செய்து இருக்கிறோம். குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. ஏதும் அறியாத சிறு பிள்ளைகளான நாங்கள், அன்பினால் உன் பெருமையை மறந்து, 'கண்ணா! கோவிந்தா!' என்று உன் பெயரைச் சொல்லி சாதாரணமாக அழைத்துவிட்டோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் நோன்பை அன்புடன் ஏற்று அருள்புரிய வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    முந்திய முதல்நடு இறுதியு மானாய்

    மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

    பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்

    பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே

    செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

    திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி

    அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்

    ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    இனிமையான அமுதம் போன்றவனே! உலகில் அனைத்து பொருட்களுக்கும் முன்பு தோன்றி முதல் பொருளாகவும், இடைப்பட்டதாகவும், முடிவாகவும் ஆனவனே! பிரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்கள்! வேறு யார் உன்னை அறிவார்? பந்தினை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும், நீயும் உன்னுடைய அடியார்களுக்கு அருள, அவர்கள் வீடுகள் தோறும் எழுந்தருளியவனே! சிவந்த நெருப்பை போன்ற உன் திருமேனியையும், திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தண வேடத்தையும் காட்டி என்னை ஆட்கொண்டவனே! படுக்கையில் இருந்து பள்ளி எழுந்தருள்வாயாக!

    • பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா!
    • உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே!

    திருப்பாவை

    பாடல்

    கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

    நாடு புகழும் பரிசினால் நன்றாக,

    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

    பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

    ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவார

    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா! உன்னை வாயாரப்பாடி அருள் பெறவந்தோம். எங்கள் நோன்புக்கு மகிழ்ந்து ஏதாவது பரிசு கொடுக்க விரும்புவாயானால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டு மக்கள் புகழும்படியாக வளையல்களையும், காதில் அணியும் தோடுகள் மற்றும் பெண்கள் கால்களில் அணியும் சிலம்புகள், மேலும் பல அணிகலன்களையும் வழங்க வேண்டும். நோன்பு முடிந்த பிறகு நாங்கள் எல்லா அணிகலன்களையும், புத்தாடைகளையும் அணிந்து கொள்வோம். அதன்பிறகு பால் சோற்றில் நெய்யினை ஊற்றி அந்த நெய் முழங்கை வரை வழியும்படியாக கூடியிருந்து சாப்பிட்டு அனைவரும் மகிழ்ந்திருப்போம்.

    திருவெம்பாவை

    பாடல்

    அதுபழச் சுவையென அமுதென அறிதற்

    கரிதென எளிதென அமரரும் அறியார்

    இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே

    எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்

    மதுவளர் பொழில்திரு வுத்தர கோச

    மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    திருப்பெருந்துறை மன்னனே! சிவானந்தம் எப்படி இருக்கும்? அது பழச்சுவை போன்றது என்றும், அமுதத்தை போன்றது என்றும், அறிந்துகொள்ள எளிமையானது என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை தேவர்கள் கூட அறிய மாட்டார்கள். இப்படித்தான் நீ இருப்பாய். இதுதான் நான் என்று சொல்லும்படி எங்களுக்கு கருணையுடன் உணர்த்தினாய். தேன் நிறைந்த பூக்களை உடைய சோலைகள் சூழ்ந்த உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே! நீ எங்களுக்கு இடும் கட்டளைகளை கூறினால் அதை ஏற்று நடப்போம். எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

    • ஆல் இலையில் குழந்தையாக பள்ளி கொண்டவனே!
    • முக்தி பேற்றினை தரப்போகும் தலைவனே!

    திருப்பாவை

    பாடல்

    மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

    ஞாலத்தை யெல்லாம் நடுங்கமுரல்வன

    பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே

    போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

    சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

    கோல விளக்கே, கொடியே, விதானமே,

    ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    திருமாலே! மணிவண்ணனே! மார்கழி மாதத்தில் நோன்பு நோற்கும் முறைகளை பற்றி நமது முன்னோர்கள் கூறி உள்ளனர். அதற்கான பொருட்களை கேட்பதற்காக வந்தோம். பூவுலகம் நடுக்கம் கொள்ளும்படி முழங்கும் வெண்நிறத்தையுடைய உனது பாஞ்சசன்னியம் என்று சொல்லப்படும் சங்கும், அதைப்போன்ற பிற சங்குகளும் வேண்டும். நீண்டதூரம் சென்று ஒலிக்கின்ற பெரிய முரசுகளும், திருப்பல்லாண்டு பாடுவதற்கு பாடகர்களும் வேண்டும். அழகு பொருந்திய விளக்குகளும், கொடிகளும்,விமானத்தில் கட்டுவதற்கான துணியும், பொருட்களும் வேண்டும். ஆல் இலையில் குழந்தையாக பள்ளி கொண்டவனே! இவற்றையெல்லாம் எங்களுக்கு தந்து நீ அருள்புரிவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்

    பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்

    மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

    வணங்குகின் றார் அணங் கின்மண வாளா

    செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

    இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    விளக்கம்

    உமையம்மையின் கணவனே! செம்மை நிறம்கொண்ட தாமரை மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! சாதாரண மக்களும், தவம் செய்து அருள் பெற்றவர்களும், ஆசைகளைத் துறந்தவர்களும், பந்தபாசமே வேண்டாம், அவனே கதி என சரணம் அடைந்தவர்களும், உன்னை உணர்ந்த உன் அடியார்கள் பலரும் கோவிலில் கூடி நிற்கிறார்கள், மனித இயல்புக்கு ஏற்ப மையிட்ட கண்களுடைய பெண்களும் உன்னை வணங்கி நிற்கிறார்கள். இந்த பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி பேற்றினை தரப்போகும் தலைவனே! எம்பெருமானே, நீ உன் திருப்பள்ளியில் இருந்து எழுந்து எங்களுக்கு அருள்புரிவாயாக.

    • பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே!
    • திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே!

    திருப்பாவை

    பாடல்

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

    வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    வாசுதேவனின் மனைவியான தேவகிக்கு நீ மகனாக பிறந்தாய். அதே இரவில் ஆயர்பாடியில் நந்தகோபனுக்கும் யசோதைக்கும் மகனாகி மறைந்து வளர்ந்தாய். இவைகளை தாங்கிக்கொள்ள முடியாத கம்சன், உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். அவனுடைய தீய எண்ணத்தை அழித்து நெருப்பாக நின்று அச்சத்தை ஏற்படுத்தினாய். பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே! நீயே சரண் என்று உன்னை வணங்கி உன் அருள் தேடி வந்துள்ளோம். நாங்கள் நினைத்த வரத்தை அருளினால் அதனைப் பெற்று உயர்ந்த அருட்செல்வத்தால் உன் பெருமைகளை பாடித்துதிப்போம். எங்கள் எல்லா துயரங்களும் மறைந்து விடும்!

    திருவெம்பாவை

    பாடல்

    பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

    கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

    சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

    சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்

    தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    விளக்கம்

    குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நீ பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஒவ்வொன்றிலும் நிறைந்து இருக்கிறாய். இருந்தும் உன்னை பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் புகழ்ந்து கூறி ஆடிப்பாடுகின்றனர். உன்னை கண்டறிந்தவர்கள், யார் என்று கேட்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. சிந்தனைக்கு எட்டாதவனாக இருந்தாலும் எங்கள் முன் நேரில் தோன்றி நாங்கள் செய்கின்ற தவறுகளையும், குற்றங்களையும் மாற்றி அமைப்பவன் நீ நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களுக்கு அருள்வாயாக! எம்பெருமானே பள்ளியெழுந்து வந்து அருள்புரிவாயாக.

    • வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம்.
    • திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!

    திருப்பாவை

    பாடல்

    அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,

    சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,

    பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,

    கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,

    குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,

    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,

    என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

    இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம். சீதையை மீட்க இலங்கை சென்று ராவணன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த உன் திறமையை போற்றுகிறோம்! சக்கர வடிவத்தில் உன்னை கொல்வதற்கு வந்த சகடாசுரனை கொன்றாய். உன் புகழை வணங்குகிறோம். வண்டு வடிவில் வந்த வத்சாசூரனை தடியால் அடித்துக்கொன்றாய். உன் திருவடியை வணங்குகிறோம். கோவர்த்தனம் எனும் மலையை குடையாக்கி கோகுலத்தை காப்பாற்றினாய். பகைவர்களை வெற்றி கொள்ளும் உன் வேலையும் போற்றி வணங்குகிறோம். உன் பெருமைக்குரிய செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி எங்கள் நோன்புக்குரிய வேண்டுதல்களை பெற்றுக்கொள்ள வந்துள்ளோம். உன் அருளைப் பெற வந்த எங்களுக்கு மனம் இறங்கி அருள்புரிய வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

    துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

    சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

    என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பொழுது விடிந்தது! உன்னை வணங்குவதற்காக வீணை மற்றும் யாழ் கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஒரு பக்கம் உள்ளனர். வேத மந்திரங்கள் ஒதுவோரும், தமிழ் தோத்திரப் பாடல்கள் பாடுவோரும், மலர் மாலையை கையில் ஏந்தி கொண்டு இருப்பவர்களும் உன் சிறப்பை பாடிக்கொண்டு உள்ளனர். உன்னை தொழுபவர்களும், அருள் வேண்டி அழுபவர்களும், துன்பத்தில் துவண்டவர்களும், நீயே சரணாகதி என்று தலையில் கைவைத்து வணங்குபவர்களும் உன்கோவிலில் சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் நான் சாதாரணமானவன். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டு அருள்பவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து அருள்புரிவாயாக.

    • காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே!
    • உதய காலத்து வெளிச்சம் தோன்றியது.

    திருப்பாவை

    பாடல்

    மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

    சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,

    வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

    மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

    போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்

    கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

    சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த

    காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

    விளக்கம்:

    வீரமுடைய ஒரு சிங்கம் மழைக்காலத்தில் வெளியே வர முடியாமல் மலையில் உள்ள குகையில் நீண்ட காலம் படுத்து தூங்குகிறது. மழைக்காலம் முடிந்த பின் திடீரென விழித்தது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்க பிடரி சிலிர்த்து நான்கு புறமும் திரும்பிப்பார்த்து கர்ஜனை செய்து குகையில் இருந்து வெளியே புறப்படுகிறது. அந்த சிங்கத்தைப் போல் காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே! நீயும் உன் திருக்கோவிலில் இருந்து நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளைக்கேட்டு அருள் செய்ய வேண்டும். எங்கள் வாழ்விற்கு வேண்டிய நல்லவை. கெட்டவை அறிந்து அருள்புரிவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    கூவின பூங்குயில் கூவின கோழி

    குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

    ஓவின தாரகை யொளிஒளி உதயத்

    தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்

    தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

    யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    விளக்கம்

    அழகிய குயில்கள் கூவின. கோழிகள் கூவின. மற்ற பறவைகளும் ஒலி எழுப்பின. சங்குகள் முழங்கின. வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் ஒளி மறைந்தது. உதய காலத்து வெளிச்சம் தோன்றியது. தேவாதி தேவனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! எமக்கு அன்புடன் உன் வீரக்கழல் அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி அருள வேண்டும். யாராலும் அறிய முடியாத தன்மை உடையவனே! எளிமையானவனே! எம்முடைய தலைவனே! துயில் நீங்கி எழுவாயாக!

    • எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.
    • அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே!

    திருப்பாவை

    பாடல்

    அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான

    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

    சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

    கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,

    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

    திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

    அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    இந்த பூமியை ஆட்சி செய்த பல அரசர்கள், நீ பள்ளிகொண்டிருக்கும் கட்டில் அருகே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போன்றே நாங்களும் உன் அருளை நாடி வந்து நிற்கிறோம். கிங்கிணி வாயைப்போல மலர்ந்திருக்கும் தாமரைப் பூ மெதுவாக மலர்வதைப் போல உன் சிவந்த கண்களை சிறுகச்சிறுக திறந்து எங்களைப் பார்த்து அருளக்கூடாதா? சூரியனையும், சந்திரனையும் இருவிழிகளாக கொண்டவனே! சூரியனைக் கண்டவுடன் மலரும் தாமரை போல உன் திருக்கண் பார்வையால் எங்களைப் பார்த்தால் எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்

    அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்

    கருணையின் சூரியன் எழஎழ நயனக்

    கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்

    திரள் நிரை அறுபதம் முரல்வன இவையோர்

    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

    அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே

    அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கு திசையில் வந்துவிட்டான். இருள் விலகி ஒளி பரவிவிட்டது. சிவபெருமானே! உன் திருமுகத்தில் தோன்றும் கருணையைப் போல் சூரியன் மெல்ல மெல்ல மேலே எழுகின்றான். உன் தோட்டத்து மலர்கள் எல்லாம் உன் அழகிய இதழ் விரிவதைப்போல மலர்கின்றன. வண்டுகள் இசை பாடு கின்றன. அந்த வண்டுகள் மலரில் உள்ள தேனை பரிசாகப்பெறும் அடியார்களும் உன்னைப்பாடி துதிக்கிறோம். அருள்நிதியை அருள வேண்டும். திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே! எல்லை இல்லாத அலைகள் வீசும் பெருங்கடல் போன்றவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து வருவாயாக!

    • துன்பத்தை போக்கும் திறன்கொண்ட கண்ணபிரானே!
    • உன் பொற்பாதங்களை வணங்குகிறோம்.

    திருப்பாவை

    பாடல்

    முப்பத்து மூவர் அமரருக்கு முன்சென்று

    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

    செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

    இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    முப்பத்து மூன்று கோடி தேவர்களின் துன்பத்தையும், அவை வருவதற்கு முன்பே ஓடோடிச் சென்று துன்பத்தை போக்கும் திறன்கொண்ட கண்ணபிரானே! துயில் எழுவாய்! செழுமையுடையவனே! பகைவர்களை வெல்பவனே! பகைவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்கின்ற தூய்மையானவனே! துயில் நீங்கி எழுந்து வர வேண்டும். பொன்னால் ஆன கலசம் போன்ற மார்பினையும், பவளம் வளம் போன்ற சிவந்த வாயினையும், சீர்மிகு சிற்றிடையை உடைய நப்பினையே! திருமகள் போன்றவளே! பாவை நோன்பு நோற்பதற்கு தேவையான விசிறி, முகம் பார்க்கும் கண்ணாடி இவைகளையும் உன்னுடைய கணவனாகிய கண்ணனையும் எங்களுக்கு வழங்கி, இப்போதே எங்களை நீராட்டுவாயாக! நாங்கள் நோன்பு நோற்ற பலனை அடைந்து மகிழ்ச்சி அடைவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

    போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

    போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

    போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

    போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

    போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

    போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

    போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    எங்கள் இறைவனே! உன் சிறப்பு வாய்ந்த ஒளிவீசும் திருவடிகளை எங்களுக்குத் தந்து அருள்புரிய வேண்டும். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமான உன் பொற்பாதங்களை வணங்குகிறோம். பாதுகாக்கின்ற உனது திருவடிதான் சகல உயிர்களின் தோற்றமும் முடிவுமாக உள்ளன. அனைத்து உயிர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக விளங்கும் உன் திருவடிகளைப் போற்றுகிறோம்! பிரம்மனும், திருமாலும் காண முடியாத உன் திருப்பாதங்களை வணங்குகிறோம். நாங்கள் முக்தி அடையும் படியாக எங்களை ஏற்று அருளும் பாதங்களை போற்றுகிறோம். இத்தனை சிறப்புகள் மிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பாடி புகழ்ந்து வணங்கி, அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தில் திளைத்து மார்கழி நீராடுவோம்.

    • குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது.
    • எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது.

    திருப்பாவை

    பாடல்

    குத்துவிளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

    மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

    தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது. யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலில் போடப்பட்ட குளிர்ச்சியான படுக்கையில் படுத்திருக்கும் கண்ணபிரானே! கொத்தான மலர்களைச் சூடிய கூந்தலை உடைய மனைவி நப்பின்னையின் மார்பின் மீது துயிலுகின்றவனே! எங்கள் குரல் கேட்டு வாய் திறந்து பேசமாட்டாயா? மை தீட்டப்பட்ட அகன்ற கண்களுடைய நப்பின் னையே! நீ உனது கணவன் கிருஷ்ணன் எவ்வளவு நேரம் தூங்கினாலும் எழுப்பி விடமாட்டாயா? நீ அவனை ஒரு நிமிடம் கூட பிரிய மறுக்கிறாயே.. இது உனக்கே சரியா? நாங்கள் கூறுவது தத்துவம் அல்ல. இது சரி அன்று! அவனை எழுப்பி விடு.

    திருவெம்பாவை

    பாடல்

    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்

    றாங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

    எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்

    எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

    எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

    கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க

    இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

    எங்கெழிலென்ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    சிவபெருமானே! உன்னிடம் ஓர் விண்ணப்பம் செய்கிறோம், கேட்டருள்வாயாக! 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற பழமொழி உண்டு. அது சிறிதும் மாறிவிடாதபடி அருள்செய்! எங்களுடைய மார்பகங்கள் உனது அடியார்களின் தோள்களைத் தவிர பிறர் தோள்களை தழுவாமல் இருக்க அருள்செய்வாய்! எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது. அடியார்களாகிய எங்கள் கண்கள் இரவும், பகலும் உன்னைத் தவிர வேறு எதையும் காணாமல் இருக்க நீ அருள்புரிய வேண்டும். இறைவா.. எங்களுக்கு இந்த வரத்தை அருள்வாயானால் சூரியன் எந்த திசையில் உதித்தால்தான் என்ன? எங்களுக்கு என்ன குறை? கவலையற்றவர்களாக உன் நினைவாகவே சிந்தித்து இருப்போம். உன்னை உணர்ந்து நீராடிப் பாடுவோம்.

    • நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே!
    • திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமான்.

    திருப்பாவை

    பாடல்

    உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

    நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

    கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்;

    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

    பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

    செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

    வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    மதயானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத வலிமையான தோள்களை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னையே? நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே! கதவைத் திறப்பாயாக! பொழுது புலர்வதற்கு அறிகுறியாக கோழிகள் கூவும் சத்தம் எங்கும் கேட்கிறது. குருகத்தி கொடி பந்தல் மேலே அமர்ந்து, குயில்கள் கூவிக்கொண்டு இருக்கின்றன. மென்மையாக பந்து விளையாடும் அழகிய விரல்களை உடையவளே! உன் கணவனின் புகழ்பாட வந்துள்ளோம். நீ கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலி செய்ய, செந்தாமரை மலர் போன்ற சிவந்த கரங்களால் கதவைத் திறப்பாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

    விண்ணோர் முடியின் மணித்தொகைவீறற்றாற்போல்

    கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

    தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

    பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

    விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

    கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்

    பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமானின் திருவடிகளை ரத்தின கற்கள் பதித்த மகுடத்தோடு தேவர்கள் பணிந்து வணங்கினர். இறைவனின் ஒளிக்கு முன்னர் அவர்கள் அணிந்துள்ள ரத்தினங்கள் ஒளியை இழந்தன. அதைப்போல வானில் சூரியன் தோன்ற அதன் கதிர்களால் இருள் நீங்கியது. நட்சத்திரங்கள் தனது ஒளியை இழக்கும் காலை வேளையில், ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும், வானாகவும், மண்ணாகவும், உலகம் கடந்த பொருளாகவும், அடியார்களுக்கு அமுதமாகவும் விளங்கும் இறைவனின் திருவடிகளை பாடிக்கொண்டே பூக்கள் நிறைந்த பொய்கையில் பாய்ந்து நீராடுவோம்.

    • உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா!
    • நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக!

    திருப்பாவை

    பாடல்

    அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

    எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;

    கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

    எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

    அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

    உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

    உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    உடுக்க உடையும், குடிப்பதற்கு நீரும், உண்பதற்கு உணவும் கேட்டவர்களுக்கு, அவர்களின் மனம் நிறைவடையும்படி அவற்றை அளிக்கும் எம்பெருமானே! உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா! நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக! பெண்களுக்கெல்லாம் கொழுக்கொம்பாக உதவி நிற்கின்ற இளகிய மனம் கொண்ட யசோதையே! எங்கள் தலைவியே! எழுந்த ருள்வாயாக! வாமன அவதாரத்தின் போது வானத்தைப் பிளந்து உயர்ந்து நின்று, உன் திருவடிகளால் உலகத்தை அளந்த தேவதேவனே! கண்ணா! நீ தூக்கம் நீங்கி கண்விழிக்க வேண்டும். வீரக்கழல் அணிந்த செல்வனே பலராமா! நீயும் உன் தம்பி கண்ணனும் துயில் எழுந்து வந்து எங்களைக் காத்தருள வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்

    எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்

    கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

    இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

    செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை

    அங்கண் அரசே அடியோங்கட் காரமுதை

    நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

    பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    தேன் சிந்தும் மலர்களை அணிந்துள்ள பெண்ணே! சிவந்த கண்களுடைய திருமால், நான்கு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களை கொண்ட பிரம்மா, தேவலோகத்தில் வாழும் தேவர்கள், இவர்களிடம் இல்லாத ஓர் இன்பநிலை நமக்குக் கிடைத்துள்ளது. தலைவனாகிய சிவபெருமான் நமது வேண்டுதலை நிறைவேற்றுபவர். அவர் சிவந்த தாமரை மலர் போன்ற பாதங்களைக் கொண்டவர். இவர் நம் வேண்டுதலுக்கு இணங்க நமது வீடுகள்தோறும் எழுந்தருள் கிறார். அழகான கண்களைக் கொண்ட சிவனடியார்களின் நோய் தீர்க்கும் அரு மருந் தாக இருப்பவன், அமுதம் போன்றவன் என்றும் சிறப்புமிக்க அந்த இறைவனைப் போற்றிப் புகழ்வோம். அழகிய மலர்கள் நிறைந்த குளத்தில் மூழ்கி நீராடுவோம். நம் குற்றங்கள் நீங்க ஆடி மகிழ்ந்து பாடுவோம்.

    ×