search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly by election"

    அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளன. நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.

    தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.


    மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது. ஜூன் 3-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று துரைமுருகன் கூறி இருந்தார். ஆனால் அதுபோல் எதுவும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று நான் கூறி இருந்தேன்.

    துரைமுருகன் சொல்வது போல் நடக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.

    அவர் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. எனவே, துரைமுருகன் தனது பதவியில் இருந்து விலகுவாரா?

    தினகரனை பொறுத்தவரை மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தமிழக திட்டங்கள் பற்றி மேற்கொண்ட தவறான பிரசாரமும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

    எதிர் காலத்தில் இந்த தேர்தல் கூட்டணி தொடருமா என்பது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது கட்சியின் கொள்கை சார்ந்த முடிவாகும்.

    பா.ஜனதாவுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க. தோற்றதா? என்பது போன்ற யூகமான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    8 முறை வென்ற அ.தி.மு.க.வை வீழ்த்தி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றது. மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடைசி வரை பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளில் டாக்டர் சரவணன் 85 ஆயிரத்து 434 வாக்குகள் பெற்றார்.

    எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி 83 ஆயிரத்து 38 ஓட்டுகளும், அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 31 ஆயிரத்து 199 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல் 12 ஆயிரத்து 610 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி 5 ஆயிரத்து 467 ஓட்டுகளும் பெற்றனர்.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 2 ஆயிரத்து 396 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி வாகை சூடினார்.

    ஓட்டு எண்ணிக்கையின்போது இந்த தொகுதியில் 22 சுற்றுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 8 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அ.தி.மு.க.வை விட கூடுதல் வாக்குகளை பெற்று வந்தார்.

    9 முதல் 11 சுற்றுகள் எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி கூடுதல் வாக்குகளை பெற்றார். அதுபோல 12 முதல் 16 சுற்றுகள் வரை ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூடுதல் வாக்குகளை பெற்ற வண்ணம் இருந்தனர். மாறி மாறி முன்னிலை வகித்ததால் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே அவ்வப்போது சலசலப்பும், பரபரப்பும் நிலவியது.

    அடுத்ததாக 17 முதல் 19 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார். 20-வது சுற்றில் மீண்டும் அ.தி.மு.க. பக்கம் முன்னிலை கிடைத்தது. ஆனால் 21, 22 ஆகிய சுற்றுகளில் தி.மு.க. கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

    திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரை அ.ம.மு.க. 31 ஆயிரத்து 119 வாக்குகளை பெற்றுள்ளது. இது அ.தி.மு.க.வின் வெற்றியை தடுத்து விட்டதாக அ.தி.மு.க.வினரே கூறுகின்றனர். ஆனாலும் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் கிடைத்த திருப்பரங்குன்றம் வெற்றிக்கனி பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொகுதியில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்று அ.தி.மு.க. தனது கோட்டையாகவே வைத்திருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வுக்கு கிட்டவில்லை.

    கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இது தி.மு.க.வினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், வாக்குகள் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதால் அ.தி.மு.க.வினரும் வெற்றியை தவற விட்டதில் சோகமாகவே உள்ளனர்.
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், மக்கள்நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம், நாம் தமிழர் வினோதினி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் திருவாரூர் திரு.வி.க.கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திரு.வி.க. கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணியளவில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வந்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 4 சுற்று முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம்:-

    பூண்டி கலைவாணன் (தி.மு.க.)-18,891

    ஆர்.ஜீவானந்தம் (அ.தி.மு.க.)-9,892

    எஸ்.காமராஜ் (அ.ம.மு.க.)-3166

    அருண் சிதம்பரம் (மக்கள் நீதி மய்யம்):-538

    வினோதினி (நாம் தமிழர்):-1249

    மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    திருவாரூர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
    நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. கடந்த 19-ந் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது.

    ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

    ஒரு மையத்துக்கு 14 மேஜை என்ற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

    சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, லயோலா கல்லூரி (மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வட சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (தென் சென்னை) ஆகிய 3 மையங்களில் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை மையங்களில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிப்பர். பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுவார்கள்.

    வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்துக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (வி.வி.பி.ஏ.டி.) என்ற வகையில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.



    ஒவ்வொரு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

    தபால் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் மேஜை போடப்பட்டு அவை எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் துரிதம் காட்டுவதைவிட, துல்லியமாகவும், சரியாகவும் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் நடந்ததுபோல, இந்த முறை விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.

    ஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் எந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் எண் ஆகியவற்றை காட்டிய பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

    வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே, தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்கு பிறகுதான் அறிய முடியும். இறுதி முடிவைப் பெறுவதற்கு இரவு ஆகலாம் என்றே தெரிகிறது.

    இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்க இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் முடிந்துவிடும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் தொகுதிக்கு 5 வி.வி.பி.ஏ.டி. ஒப்புகை சீட்டு எந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் (ஒப்புகை சீட்டு) உள்ள சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்படும்.

    ஒரு ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம். அதைவைத்து பார்க்கும்போது 4½ மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். எனவே, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும்.

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இதேபோல் காலதாமதம் ஏற்படும். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிக்கு ஒரு வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு எந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. அதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும்.

    வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதிலுள்ள பேட்டரி மாற்றப்படும். அதன்பிறகும் பிரச்சினை இருந்தால் வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்இவ்வாறு அவர் கூறினார்.
    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவுடன் நடக்கிறது.

    4 தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் 4 தொகுதிகளிலும் அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து இன்று காலை முதல் அரசியல் கட்சியினர் இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


    பிரதான கட்சியினர் தங்களது தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை மூலம் வேட்பாளரை முன்னிலைப்படுத்தி சிறு குறும் படங்களாகவும், எதிர் தரப்பினரின் குறைகளை சுட்டி காட்டியும் வீடியோ தயாரித்து யூடியூப், முகப்புத்தகம், வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவ விட்டு ஆதரவு திரட்டினர். இதன் உச்சக்கட்டமாக தற்போது, கரூர் மாவட்டம் முழுவதும் மக்களின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. சம்பந்தப்பட்ட நபர் அந்த அழைப்பினை ஏற்றதும், மறுமுனையில் நான் உங்கள் வேட்பாளர் பேசுகிறேன், எனக்கு ஆதரவு தாருங்கள் என்கிற ஒலிப்பதிவு சில நிமிடங்கள் வரை கேட்கிறது. பின்னர் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

    பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து வெளியூர் நபர்கள் 4 தொகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியூர் நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள்.

    அரவக்குறிச்சி தொகுதியில் போலீஸ் குழுவினர் ஆங்காங்கே பிரிந்து சென்று இன்று மாலை 6 மணிக்கு மேல் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடு உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்துகின்றனர். அப்போது வெளி நபர்கள் யாரும் இருப்பின் அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் தேர்தல் விதிகளை மீறி தொகுதிக்குள் இருக்கும் வெளிநபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து 2 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என போலீஸ் துறையினர் தெரிவிக்கின்றனர்.

    பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்க கூடும் என்பதால் அதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
    சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
    சென்னை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    கடந்த ஏப்ரல் 22-ந்தேதி முதல் 29-ந்தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ந்தேதி வெளியிடப்பட்டது. 4 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செர்வம் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து பொது மக்களிடம் குறை கேட்டார்.

    அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.

    தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து விவரங்கள் நாளை மாலை தெரிவிக்கப்படும்.
    தமிழகத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் தான் நல்லாட்சி வழங்கமுடியும் என்று ஒட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி பேசினார்.
    ஒட்டப்பிடாரம்:

    தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஒட்டப்பிடாரம் சந்தை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுச்சேரியில் மொத்த மக்கள் தொகை 14 லட்சம் தான். இதில் ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என சொன்ன மோடி அரசு எதனையும் செய்யவில்லை. மோடி ஆட்சியில் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பணக்காரர்களுக்கு தான் மோடி ஆட்சியில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நூலுக்கான வரி முழுவதும் ரத்து செய்யப்படும்.

    மோடியின் அடிமை ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. மோடியின் மக்கள் விரோத ஆட்சி 23-ந் தேதிக்கு பின்னர் முடிவுக்கு வரும். மோடியின் தம்பிகளான ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். ஆட்சியும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மூன்றாண்டு காலம் மத்தியில் மோடி அரசையும், மாநிலத்தில் கிரண்பேடியையும் சமாளித்து ஆட்சியை நடத்திவருகிறேன். புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டத்தை நான் எதிர்த்து போராட்டம் நடத்தினேன். அங்கு அனுமதிக்க மாட்டோம். ஏன் தமிழகத்தில் முதல்வர் எதிர்க்கவில்லை.

    தமிழகத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் தான் நல்லாட்சி வழங்கமுடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. ஒரே வரியாக்கப்படும். புதியமுத்தூர் பகுதி குட்டி ஜப்பானாக தொழில் வளத்தில் சிறப்பாக இருந்தது. இப்போது அந்த பகுதியில் வேலை வாய்ப்பில்லாத நிலை உருவாகியுள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் வேலை வாய்ப்பு போய்விட்டது.

    வருடத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என மோடி அறிவித்து இருந்தார். அப்படி பார்த்தால் 5 ஆண்டுகளில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மோடியும், எடப்பாடியும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    புளியங்குளம் பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். புளியங்குளத்தில் நடந்த திண்ணை பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    நான் கலைஞரின் மகன். சொன்னதைதான் செய்வேன். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றித்தரப்படும். தி.மு.க. என்றைக்கும் மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனை பேணுகின்ற இயக்கம்தான் தி.மு.க.

    புளியங்குளத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    தி.மு.க. ஆட்சியில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி தந்தது தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களால் எந்த அளவுக்கு மக்கள் பணி செய்ய முடியுமோ அந்த வகையில் பணியாற்றி வருகிறோம்.

    விரைவில் தமிழகத்தில் விடிவுகாலம் பிறக்க உள்ளது. அதற்கு திருப்பரங்குன்றத்தில் சூரியன் உதிக்க வேண்டும். எனவே நீங்கள் எல்லோரும் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்கிற நரேந்திர மோடியும், மாநிலத்தை ஆளுகின்ற எடப்பாடியும் எதிராக செயல்படுகிறார்கள்.

    பிரதமர் மோடி வெளி நாட்டுவாழ் பிரதமர் போல இருக்கிறார். அவருக்கு இந்தியா மேல் அக்கறை இல்லை. தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் மோடி ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுகிறார்.

    உலகம் சுற்றும் நரேந்திர மோடி இதுவரை வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற 23-ந்தேதிக்கு பிறகு மத்தியில் பிரதமராக மோடி இருக்க மாட்டார். அதுபோல தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்க மாட்டார்.

    மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற நல்லாட்சி அமையும். மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்த கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.

    அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.

    அரவக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது தேர்தல் பிரசாரத்துக்கு குறைந்தது 5 நாட்களுக்கு தடை செய்ய வேண்டும், கமல் மீது வழக்கு பதிவு செய்யவும், மேலும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும் அவர் அளித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
    இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். #TNByPolls
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 6-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் அவர் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் 2-வது கட்ட மாக பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து வடபழஞ்சி தனக்கன்குளம், ஹார்விபட்டி, நிலையூர், கைத்தறி நகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.  #TNByPolls
    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சவுரிராஜனும் ஒட்டப்பிடாரம் தொகுதி பார்வையாளர்களாக ஆர்.தங்கவேலு, ஜான்சன் தங்கவேலு, ஜே.எபினேசர், கே.பிரபு ஆகியோரும் திருப்பரங்குன்றம் தொகுதி பார்வையாளர்களாக கே.குருவைய்யா, வி.அண்ணாமலை, வி.ஷாஜி, ஜே.விஜய்பாஸ்கர் ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்.

    சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக செயற்குழு உறுப்பினர் சினேகனும் தேர்தல் பார்வையாளர்களாக ஆர்.மூகாம்பிகா, சிகே.அருண், ஆர்.சுதாகரன், எம்.பிரபு மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்காக தேர்தல் பொறுப்பாளராக ஏ.சந்திர சேகரனும் தேர்தல் பார்வையாளர்களாக தருமபுரி ராஜசேகரன், ஆர்.ஹரிஹரன், பூவை.ஏ.ஜெகதீஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.’

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MakkalNeedhiMaiam
    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை பிரசாரம் செய்கிறார். #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
    கோவை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

    சூலூர் தொகுதியில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை(1-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். திறந்தவேனில் நின்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் கோவை வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மீண்டும் வருகிற 14-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் 2-வது கட்டமாக பிரசாரம் செய்கிறார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந்தேதிகளில் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

    சூலூர் தொகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சூலூர் பகுதியில் தேர்தல் களைகட்டியுள்ளது. #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
    ×