என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Fishermen arrest"

    • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
    • தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை 27.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சைவார்த்தை நடத்திட ஏற்பாடு செய்யவும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (27.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் 27.03.2025 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினர் கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சூழலில், 2024 டிசம்பர் மாதம் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்சனையை இலங்கை அதிபரிடம் தனிப்பட்ட முறையில் எழுப்பியதாகவும், இந்திய மீனவர்களின் நலனை உறுதியாகக் காப்பதில் ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது 09.02.2025 நாளிட்ட கடிதத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதை தனது கடிதத்தில் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனவே, நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும், தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு விடுத்த தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சட்ட உதவிகளை வழங்குமாறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். #TNFishermen #SrilankanNavy
    ராமேஸ்வரம்:

    இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TNFishermen #SrilankanNavy
    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. #TNFishermen #SrilankanNavy
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 136 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரத்தினம்மாள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆனந்தராஜ் (வயது 22), விஷ்வா (23), அஜித் (22), வினோத் (21), ஆனந்தபாபு (35), இளங்கோவன் (30) ஆகிய 6 பேரும், ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ரத்தினவேல், செல்லத்துரை (70), முருகன் (45) ஆகிய 3 பேரும் நேற்றிரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களையும் விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை 2 விசைப்படகுகளுடன் இலங்கையில் உள்ள காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் சிலரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் ஆகும். மீன்பிடி தொழிலுக்காக ஜெகதாப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை செலவுக்காக அவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அதில் வரும் வருமானத்தை வைத்து சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட இருந்தனர்.

    இன்று காலை அவர்கள் கரை திரும்ப வேண்டும். பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SrilankanNavy
    ×