என் மலர்
நீங்கள் தேடியது "TN Governor RN Ravi"
- சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா.
- சுவாமி சகஜானந்தா திருவுருவச் சிலைக்கு கவர்னர் மலரஞ்சலி.
சிதம்பரம்:
சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 135-வது பிறந்த நாள் விழா சிதம்பரத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள சுவாமி சகஜானந்தா நினை விடம் மற்றும் அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் திருக்கோஷ்டியூர் உ.வே.ஸ்ரீ மாதவன் சுவாமி, சிதம்பரம் அணி வணிகர் எஸ்.ஆர்.ராமநாதன், அர்ச்சனா ஈஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மதியம் 12.50 மணிக்கு சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கவர்னர் சிதம்பரம் வருவதை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சுவாமி சகஜானந்தா நினைவிடத்திற்கு கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அன்சர்ரி, காங்கிரஸ் கட்சி மக்கின், ஜெமினிராதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் ஒளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சிதம்பரம் மேலவீதியில் கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா?
- இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.
செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்)
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை கண்டிக்கும் வகையில் கவர்னரின் குடியரசு தின வரவேற்பு தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பார்கள்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடு களையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக் காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கவர்னராக நீடிக்கிற தகுதியை இழந்து விட்டார். ஆகவே கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு)
சட்டசபையில் நிறை வேற்றி அனுப்பும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில உரிமையை மறுத்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான சிந்தனைகளை கவர்னர் திணித்து வருகிறார். எனவே கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது.
கு.கா.பாவலன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர்)
தமிழ்நாட்டிற்கு கவர்னராக வருகின்றவர்கள் மாநில சுயாட்சி நிலைப் பாட்டிற்கும், இருமொழி கொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆகவே மக்களின் நலன் கருதி கொள்கை அளவில் கவர்னரோடு முரண் நடவடிக்கைகளில் தலைவர் திருமாவளவன் தலை மையில் வி.சி.க. ஈடுபட்டு வருவதால் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.
(மனித நேய மக்கள் கட்சி)
கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது. சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது, சட்டமன்றத்தின் மரபைப் பேணாமல் வெளி நடப்பு செய்வது பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது என்று தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோத மாக நடந்து கொண்டிருக்கும் கவர்னரின் செயல்பாடு களுக்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.
கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா? என்பது இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
- வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநர் மாளிகை நேற்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.
அதில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."
"பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."
"இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் மரபு மீறவில்லை. காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் வழக்கம். இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்..
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
- முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா, சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆகியவை நடந்தது. முன்னதாக திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதனை கைவிட வேண்டும்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டப்பேரவையை அவமதித்து வருகிறார். கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பாதி உரையை படிக்காமல் சென்றார். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என கூறுகிறார்.
பேரவையின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு என்பது கவர்னருக்கு தெரியும். இருந்தாலும் ஏதாவது குறைகூறி சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்.
பா.ஜ.க. தலைவர்கள் தேசியத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். தேசியத்திற்கு எதிராகவும், அரசியல் அமைப்புக்கு விரோதமாகவும் செயல்படும் பா.ஜ.க. கட்சி, அதை மூடி மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி போடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவையில் இருந்து வெளியேறினார்.
- பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றே நிமிடங்களில் அவர் அவையில் இருந்து வெளியேறினார்.
சட்டசபையில் கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்டாததை எதிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது.
மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது.
இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தவறான வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார்.
- தி.மு.க.வுக்கு பாடம் நடத்துகின்ற தகுதி கவர்னருக்கு கிடையாது.
சென்னை:
அமைச்சர் சிவசங்கர் இன்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். பாரம்பரியமாக தமிழ்நாடு சட்டசபையில் என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறதோ அதே நிகழ்வு தான் தொடர்ந்து நடைபெறுகிறது. அதை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் கவர்னர் இருக்கிறார்.
அது நடக்காது என்ற காரணத்தினாலும், ஆளுனர் உரையை வாசித்தால் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டிய சூழல் வரும் என்கிற காரணத்தினாலும், இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது என்கிற எண்ணத்தினாலும் தான் அவர் இன்று அப்படி நடந்து கொண்டார்.
59 பக்கத்துக்கு கவர்னர் உரை தமிழக அரசின் சாதனைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை முழுவதுமாக விவரிக்கின்ற வகையில் இருக்கிறது. அதை படிப்பதற்கு தயங்கிக் கொண்டுதான் இன்றைக்கு இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்.
கடந்த முறை தமிழ்நாட்டின் தலைவர்களின் பெயரை சொல்லாமல் மறைத்தவர் இன்றைக்கு ஒட்டு மொத்தமாக கவர்னர் உரையை புறக்கணித்து சென்றுள்ளார். அதற்கு அவர் சொல்ல இருக்கின்ற காரணம் தேசிய கீதம் பாடப்படவில்லை, நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்று சொல்கிறார்.
ஏதோ தேச பக்திக்கு ஒட்டு மொத்த குத்தகை அவர்தான் என்பது போல் அவர் கூறுகிறார். தேச பக்தியில் தமிழக மக்களை மிஞ்ச முடியாது.
இந்த தேசத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பலரும் சுதந்திர போராட்டத் தில் ஈடுபட்டு தங்கள் உயிரை அர்ப்பணித்து இருக்கிறார்கள். இவருக்கு முன்பாக இருந்த கவர்னர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தியாகி என்று அழைக்கப்படுகிற நிலையில் கவர்னராக இருந்திருக்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்த கூற்றை முன்வைக்கவில்லை. ஏதோ இவருக்கு மட்டும்தான் தேச பக்தி வந்தது போல தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று சொல்கிறார்.
இதுவரை எத்தனை கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள், எத்தனை முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் இந்த எண்ணம் கிடையாதா? தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடி விட்டுத்தான் அவை முடிகின்றபோது தேசிய கீதத்தை பாடுவது இயல்பாக இருந்தது.
இன்றைக்கும் அப்படித்தான். இன்றைக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி கவர்னர் உரையை தமிழில் அவைத் தலைவர் வாசித்த பிறகு இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அனைவரும் எழுந்து நின்று முறையாக அதற்குரிய மரியாதையை செலுத்தினார்கள்.
எனவே தேசிய கீதத்துக்கு தமிழ்நாடு மக்கள் எந்த வகையிலும் அவமரியாதை செய்பவர்கள் கிடையாது. தமிழ்நாடு சட்டசபை அவமரியாதை செய்வது கிடையாது.
எனவே இந்த தவறான வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். இதற்காக கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் முதலமைச்சருக்கோ, தி.மு.க.வுக்கோ பாடம் நடத்துகின்ற தகுதி கவர்னருக்கு கிடையாது.
தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் தான். தேசிய கீதம் பாடுகின்ற வரை இருக்காமல் உடனடியாக அவர் வெளிநடப்பு செய்துள்ளார். கடந்த முறையும் இதைத்தான் செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபா நாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
- அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட் டம் வருகிற 6-ந்தேதி கூடுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்கு வந்து உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வாசலில் நின்று வரவேற்று பூங்கொத்து வழங்கி சட்ட சபைக்குள் அழைத்து வருவார்கள்.
சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அரசின் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அதை தமிழில் வாசிப்பார்.
கடந்த ஆண்டு சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி அரசின் முழு உரையையும் வாசிக்காமல் முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.
அவரது சொந்த கருத்தையும் சேர்த்து பேசியதால் பிரச்சனை ஏற்பட்டது. அவர் கூட்டம் முடியும் முன்பே பாதியிலேயே வெளியே சென்று விட்டார்.
அதன் பிறகு அரசுக்கும் அவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் இணக்கமான சூழல் உருவானது.
இப்போது 2025-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் உரையாற்ற வருமாறு கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகா் அப்பாவு இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.
- மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்.
- கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே இராராமுத்திரைக் கோட்டை ஊராட்சியில் இன்று புதிய பொது விநியோக கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவர்னர்களுக்கும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது கவர்னரின் நோக்கமாக உள்ளது. இது ஒருபோதும் நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு துணைவேந்தர் பணி நியமனம் செய்யபடும்.
மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர் மட்டும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
- தமிழக ஆளுநர் அவருடைய ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க கூடாது என்றார்.
உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை, சீர்குலைக்க ஆளுநர் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும் ? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல.
இதுவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அளவிற்கு மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில் மத்திய அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, பல்வேறு மாநில வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உயர்கல்வியை பொறுத்தவரையில் பல்கலைக்கழங்களுடைய செயல்பாடு தமிழக அரசை விரும்பி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் அதில் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள்.
அப்படி தொடர்ந்து திமுக அரசு அமையும்போதெல்லாம் உயர்கல்வியில் அக்கறை காட்டிய காரணத்தால் தான் கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையை எட்டி இருக்கிறோம்.
இதை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் பணிகளையும், அரசின் பணிகளையும் குறிக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்.
எனவே தான், நேற்று ஆளுநர் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க வேண்டாம் என்ற நிலையில் கருத்து தெரிவித்திருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது.
- நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்..
தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசு நியமித்த தேடுதல் குழுவின் யுஜிசி பிரதிநிதி இல்லாமல் இருப்பது விதிகளுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், துணை வேந்தரை தேர்ந்தெடுக்க பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியையும் தேடுதல் குழுவில் சேர்த்து ஏற்கனவே நான் பிறப்பித்து உத்தரவை அமல்படுத்துங்கள் என்று தமிழக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Raj Bhavan Press Release : 53 #AnnamalaiUniversity #ViceChancellor #SearchCommittee pic.twitter.com/mBDi5Z8FyA
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 18, 2024
- சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
- பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூருக்கு தமிழக கவர்னர் ஆா்.என். ரவி, தனது மகன் ராகுல்ரவியுடன் நேற்று வந்தாா்.
சுற்றுலா மாளிகையில் தங்கிய இருவரும் தஞ்சாவூா் அரண்மனைக்குச் சென்றனா். அங்கு கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார்.
பின்னா் அரண்மனை வளாகத்திலுள்ள சந்திரமௌலீசுவரா் கோயிலுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா். இதையடுத்து, அருகிலுள்ள சரசுவதி மகால் நூலகத்திலுள்ள பழங்கால ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்டாா்.
மாலையில் தஞ்சாவூா் பெரிய கோயிலுக்குச் சென்றாா். அங்கு அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கவிதா உள்ளிட்டோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
வராஹி அம்மன், மராட்டா விநாயகா், பெருவுடையாா், பெரியநாயகி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டாா்.
பின்னா், தாண்டவ மாடியின் மீது ஏறி பாா்வையிட்ட அவா், மகா நந்திகேசுவரரை வழிபட்டு, சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டாா்.
இதையடுத்து, காா் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார்.
இதற்கிடையே தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவியை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த ஜாபர்தீன் (வயது 35) என்பதும் ஆர்வமிகுமியால் கவர்னரை பின்தொடர்ந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர்தீனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
- மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி
- பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இன்று 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலைக்கழகம் மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என மொத்தம் 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே கடந்த 2 பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்க வில்லை. தொடர்ச்சியாக இன்று கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் காரணமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கொடைக்கானல் வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை இங்குள்ள சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். செயலாளர் சந்திரமவுலி கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொருளாளர் ராமசுப்பிரமணியம், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார்.
அதன் பின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றி பேசியதாவது:-
தோல்வியை கண்டு துவளாமல் பின் வாங்கிச் செல்லாமல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதனையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளராக ஜொலிக்க முடியும்.
வெற்றிக்கு முதல் காரணமாக மாணவர்கள் நேர மேலாண்மை , கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இயற்பியல் பாடத்தை இயற்கை மற்றும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.
எனது வெற்றிக்கு முதல் காரணம் என் தாயின் அறிவுரைகள் தான். எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலும் அதற்கு பிறகும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு உயர்வானதாக இருந்தால் உங்கள் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும்.
இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்சாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.