search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN local body election"

    மாநில தேர்தல் ஆணையம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வார்டு மறுவரையறை செய்யாமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த அப்போதைய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டனர். 

    ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, ஆகஸ்டு 6-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

    எனினும், ஆகஸ்ட் 6-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கு கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

    உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை  அறிக்கை ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாகவும், அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட 3 மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும்   மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்யப்படும் வார்டு மறுவரையறை பரிந்துரைகளை அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘அறிக்கை கிடைத்த பின்பு தான் அதுகுறித்து முடிவு செய்யப்படும்’ என தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.

    வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது. வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக தான் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.

    ‘பலமுறை அவகாசம் வழங்கிய போதிலும், 2019-ம் ஆண்டுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டீர்கள் போல’ என நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார். 

    இதனை அடுத்து, மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    ×