என் மலர்
நீங்கள் தேடியது "TNGovernor"
- தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
- மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு
கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.
மேலும், மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
- தமிழக ஆளுநர் அவருடைய ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க கூடாது என்றார்.
உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை, சீர்குலைக்க ஆளுநர் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும் ? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல.
இதுவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அளவிற்கு மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில் மத்திய அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, பல்வேறு மாநில வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உயர்கல்வியை பொறுத்தவரையில் பல்கலைக்கழங்களுடைய செயல்பாடு தமிழக அரசை விரும்பி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் அதில் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள்.
அப்படி தொடர்ந்து திமுக அரசு அமையும்போதெல்லாம் உயர்கல்வியில் அக்கறை காட்டிய காரணத்தால் தான் கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையை எட்டி இருக்கிறோம்.
இதை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் பணிகளையும், அரசின் பணிகளையும் குறிக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்.
எனவே தான், நேற்று ஆளுநர் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க வேண்டாம் என்ற நிலையில் கருத்து தெரிவித்திருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.
- அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது.
உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள வழக்கின் விசாரணை தொடர்பாக உண்மைக்கு புறம்பாக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் கூறயப்பட்டுள்ளதாவது:-
உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாளிதழ் கொண்ட பார்வையின் போர்வையில், இன்று தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.
இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை அப்பட்டமாக மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து முற்றிலும் பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது.
தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.
- தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?
தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையை அவமதிக்காதீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆளுநரின் கருத்துகள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றன. அவரது சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தால் எழுப்பப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து இந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது.? முதலமைச்சர் தனது X தள ட்வீட் பதிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை.
இருப்பினும் பதிலடி என்ற போர்வையில், பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டில்லியில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது ட்வீட் ஆளுநராக அவரது கண்ணியம் இல்லாததை வெளிப்படுத்துகிறது மேலும் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை அரசியல்மயமாக்கிக் கொண்டுள்ளார் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
தி இந்து பத்திரிக்கையானது நன்மதிப்பை பெற்ற செய்தித்தாள். அதன் வரலாறு முழுக்க சுதந்திரமான மற்றும் அதீத நேர்மையை கடைபிடித்து ஒருமைப்பாட்டினை காக்கும் வகையில் இருந்துவருகிறது. சாவர்க்கரையும் கோட்சேவையும் பின்பற்றுபவர்களுக்கு நேர்மை என்பது அந்நியமானதாக இருந்தாலும், மாநில ஆளுநர் பத்திரிகைகளை அவமதிக்க கூடாது என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்ப்பர்.
கவர்னர் தனது ட்வீட்டில் எந்த ட்விட்டர் கணக்குகளை குறிப்பிட்டு இணைந்துள்ளார் என்பதை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஒருவேளை அவர் அந்த தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா.? அவர் தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?
அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழ்நாட்டு மக்களைப் புரிந்துகொள்வதை பற்றி ஆளுநர் பேசுகிறார். அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்.? அவர் பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.
தமிழ்நாட்டு மக்களையும் திமுகவினையும் உண்மையிலேயே ஆளுநர் புரிந்து கொள்ள விரும்பினால் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து அவரே தேர்ந்தெடுக்கும் ஏதாவதொரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கிறோம். நோட்டாவிற்கு கீழ் வாக்குகள் வாங்குவதையாவது தவிர்ப்பாரா என்று பார்ப்போம்.
கவர்னர் அவர்களே, ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த விரிவுரைகளும் தேவையில்லை. இந்த மாநிலம் கல்வியில் #1 இடத்தில் உள்ளது.
தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பிற நல்லாட்சி குறியீடுகளில் முன்னணியில் உள்ளது. நீங்கள் வருவதற்கு முன்பே நாங்கள் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளோம்.
தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்.
மாறாக தமிழ்நாட்டு மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை மத்திய பாஜக அரசு.
- கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்ததே அப்போதைய கழகத் தலைவரும் முதலமைச்சருமான தலைவர் கலைஞர்தான்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. 'கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப் பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். 1974 தவறுக்கு அப்போது மத்தியில் கூட்டணியில் இருந்த இன்றைய மாநில ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு' எனத் துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2024-ஆம் ஆண்டில் 528 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 53 மீனவர்கள் கைதானார்கள்.
முதலமைச்சர் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியும் , திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தும் தமிழக மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஒன்றிய பாஜக அரசு.
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசின் இயலாமையை மறைக்க ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு மீது வீண் அவதூறு பரப்பி வருகிறார்.
கச்சத்தீவு தொடர்பாகக் கழகத்தின் மீது வீண் அவதூறு பரப்பும் விஷமிகளுக்குக் கழக மூத்த முன்னோடிகளும், முதலமைச்சர் அவர்களும் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டனர்.
இருந்தாலும் எத்தனை விளக்கம் கூறினாலும் விளங்காத ஆளுநர் ரவிக்கு மீண்டும் சொல்கிறேன். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்ததே அப்போதைய கழகத் தலைவரும் முதலமைச்சருமான தலைவர் கலைஞர்தான்.
அதோடு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து அவையை விட்டு வெளியேறியது திமுக. அதுமட்டுமல்லாது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அப்போதைய திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த வரலாற்று உண்மைகள் எல்லாம் வரலாற்றைப் படிப்பவர்களுக்குத் தெரியும் ஆனால் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியில் வரும் வதந்திகளை வரலாறாக நினைத்துப் படிக்கும் ஆளுநர் ரவிக்கு இதெல்லாம் தெரியாதுதான்.
கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கச்சத்தீவு பற்றி ஒரு RTI ஆவணம் வெளியாகி உள்ளதாகச் சொல்லி புரளியைக் கிளப்பி குறளி வித்தை காட்டினார் அண்ணாமலை.
அதனைப் பிரதமர் மோடி முதல் வெளியுறவுத் துறை அமைச்சர் வரை உண்மையாக்க முயன்றார்கள். கச்சத்தீவு பற்றிக் கடந்த 10 ஆண்டுகளாகப் பேசாத மோடி, திடீர் புரட்சியாளராக மாறி தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனாலும் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோற்றுப் போனது.
புஸ்வாணம் ஆன விவகாரத்தை இப்போது ஆளுநர் ரவி தூக்கிக் கொண்டு வந்து கலர் மத்தாப்பு காட்ட முயல்கிறார். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியா முழுமையும் வஞ்சிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய விவகாரம் இந்திய முழுமைக்கும் பேசு பொருளாகியிருக்கிறது.
தெலங்கானா, கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன. எங்கே இந்திய முழுமைக்கும் அது எதிரொலித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில் அதனைத் திசை திருப்ப ஒன்றிய அரசின் அஜெண்டாவை நிறைவேற்றக் கச்சத் தீவைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர் ரவி.
1974-ல் போன கச்சத் தீவைப் பற்றி கவலைப்பட்ட பிரதமர் மோடி அவர் கண் முன்னே இந்தியாவின் 2000 சதுர கி.மீ பகுதிகள் சீனா ஆக்கிரமித்த போது அமைதியாக இருந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், 'அறிவியல் பூர்வமாகவும், சட்டப்படியும் அணுகி கச்சத்தீவைக் கண்டிப்பாக மோடி அரசு மீட்கும்' என்று சொன்னவர்கள் எங்கே போனார்கள்? தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத் தீவு கேடயத்தைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், இப்போது தொகுதி மறுசீரமைப்பில் பாஜகவின் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகக் கச்சத் தீவை மீண்டும் கிளப்புகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி ஆளுநருக்கு நினைவு இருக்கிறதா? அப்படியான பதிலடியைத் தொகுதி மறுசீரமைப்பிலும் கிடைக்கும்.
கச்சத் தீவு பற்றிய கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே! இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுதலை செய்ய உங்கள் எஜமானர் மோடியிடம் கோரிக்கை வையுங்கள். அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் அவரோடு போட்டியிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம்.
- சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.
சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் சிந்து நாகரிகம் குறித்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வேதங்களின் மூலம் சிந்து நாகரிகம் பெற்ற ஞானம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதம் மற்றும் அதன் கலாசாரத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும், படைப்பின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் தொடர்ந்து நம்மை ஈர்த்து, நமது தோற்றத்தை தனிப்பட்ட அளவிலும் உலகளவிலும் எவ்வாறு வரையறுத்து வருகின்றன.
ஆரிய படையெடுப்பு மற்றும் ஆரிய இனம் பற்றிய கோட்பாடுகளை பொய்யாகப் பரப்பிய மார்க்சிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்தங்களைத் தழுவியவர்கள் உள்பட ஐரோப்பிய காலனியவாதிகள், நீண்ட கால அறிவுசார் மற்றும் அரசியல் வன்முறை துணையுடன் மேற்கொள்ளும் வரலாற்றுத்திரிபுகள் மற்றும் தவறான உள்அர்த்தம் கற்பிக்கும் செயல்பாடுகளில் இருந்து இந்த நாகரிகத்தை பங்கேற்பாளர்கள் மீட்க வேண்டும்.
செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அணு இயற்பியல் உள்ளிட்ட நவீன அறிவியல், சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்பது முழு பாரதத்தையும் தழுவிய வேத நாகரிகம் என்ற வரலாற்று உண்மையை அறிவியல்பூர்வமாக நிறுவியுள்ளது.
நமது விரிவான தேசிய மறுமலர்ச்சி காலத்தில், சரஸ்வதி-சிந்து நாகரிகத்தின் வரலாற்று ரீதியிலான சரியான தகவல்களை பங்கேற்பாளர்கள் பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ் இலக்கிய அறிவை, தமிழகத்திற்கு அப்பால் கொண்டுச் செல்ல வேண்டும்.
- சில மாநிலங்கள் தமிழ் மொழியை பள்ளிகளில் மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வம்.
சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதன் இயக்குநர் இரா. சந்திரசேகரன், காணொலி காட்சி மூலம் ஆளுருக்கு விளக்கினார். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆய்வு வசதிகளை ஆளுநர் பார்வையிட்டார்.

அப்போது பேசிய ஆளுநர், இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ் மொழியின் வளம், இந்திய நாகரீக வளர்ச்சியின் பிரதிபலிப்பாயிருக்கிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியத்திலுள்ள அறிவு, தமிழ் கலாச்சார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்றுக் கொள்ள வழிவகை செய்து, தமிழகத்திற்கு அப்பால் கொண்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழி பெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும், பிற மாணவர்களுக்கு எளிய வழி தமிழ் கற்றல் அணுகு முறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது ஆக்கப் பூர்வமாகவும் எளிதாகவும், தமிழ் அல்லாதவர்களைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.
- ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்பு.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார்.
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் திமுக வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கற்றனர்.
- தமிழக ஆளுநர்கள் யாரும் சர்ச்சை கருத்துகளை சொல்லியது இல்லை.
- புத்தகங்களை ஆளுநர் வாசித்தாலே உண்மையை புரிந்து கொள்ளலாம்.
ஆரியர், திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.மான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் சர்ச்சை கருத்துகளைப் பொது வெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைச் சொன்னார். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை திமுக சார்பில் நான் அளித்தேன். இந்த நிலையில், திராவிடர் குறித்து ஆளுநர் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600-ம் ஆண்டு என வைத்துக்கொண்டால், அதற்கு முன்னதாக திராவிடம் என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா?, இல்லை என்று ஆளுநர் சொல்கிறாரா? இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்?.
ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் எல்லாம் எப்போது உருவானது என்பது குறித்து மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் பல நூறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். அது குறித்து ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் வாசித்தாலே ஆரியர் - திராவிடர் என்ற உண்மையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
திராவிடம்' என்பது இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப்பெயராக இருந்தது. வடக்கு-தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்தது. ஆரியன்-திராவிடன் என்ற இனப்பாகுபாடாக இருந்தது. தமிழ்-சமஸ்கிருதம் என்ற மொழிப்பாகுபாடாக இருந்தது.
இப்படி காலம்காலமாக இருந்த இன-இட-மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழர் தம் அரசியலை-முன்னேற்றத்தை-எழுச்சியை உருவாக்க முனைந்தது தான் திராவிட இயக்கம். கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருக்கிறது.
ஆயிரமாண்டு பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வருகிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் திராவிடம் என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதி தான் கவர்னரின் பேச்சில் வெளிப்படுகிறது. கடந்த கால வரலாற்றுக்கு கற்பனை முலாம் பூசி, உண்மையான பிரச்சினைகளை திசை திருப்ப முன்வர வேண்டாம்.
கவர்னர் ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம்கூட ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டவைதான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின்போது, அரசியல் சட்டத்தின்மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் முதல் முறையாக இன்று சென்னையில் உள்ள 12 ஆதரவற்ற பள்ளிகளை சார்ந்த 517 மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து இன்று தீபாவளியை கொண்டாடினர்.
இதற்காக 12 பள்ளிகளிலிருந்து 517 மாணவ, மாணவிகள் கவர்னர் மாளிகைக்கு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கவர்னர் மாளிகையில் உள்ள குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடம், பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் தர்பார் அரங்கம், மான்கள் சுற்றித் திரியும் பரந்த புல்வெளி, வனப்பகுதி மற்றும் போலோ விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இங்குள்ள புல்வெளியில் சுற்றித்திரியும் பல வகைகளான மான்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றனர். மேலும், மாணவ-மாணவியர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடிடும் வகையில் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ப்பட்டிருந்தன.

பிறகு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து, தர்பார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு வந்திருந்த 517 மாணவ-மாணவிகளுக்கும் ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கணக்கிடும் கருவியை (Calculator) பரிசாக வழங்கி தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் என கவர்னர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNGovernor #Diwali #RajBhavan #RajBhavanDiwali