search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tonk"

    • டேனிஷ் அலியை மத ரீதியாக ரமேஷ் பிதுரி தாக்கி பேசினார்
    • டோங்க் மாவட்டத்தில் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 தொடங்கி 21 வரை நடைபெற்றது.

    இத்தொடரில் 21 அன்று, பா.ஜ.க.வை சேர்ந்த தெற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி (62) அவையில் நடந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அம்ரோகா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கன்வர் டேனிஷ் அலி (48) என்பவரை மத ரீதியாக தாக்கி பேசினார். அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ரமேஷ் பிதுரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆளும் பா.ஜ.க., ரமேஷிடம் இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியிருந்தது; ஆனால், கட்சியை விட்டு நீக்கவில்லை.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள டோங்க் மாவட்டத்திற்கு பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.

    சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான கபில் சிபல், தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:

    பா.ஜ.க. வெறுப்பு பேச்சிற்கு வெகுமானம் அளிக்கிறது. ரமேஷ், வெளியில் கூற முடியாத வார்த்தைகளால், டேனிஷ் அலியை மத ரீதியாக மக்களவையிலேயே தாக்கி பேசினார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார்கள். டோங்க் பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதமாகும். இது அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலைத்தான் குறிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொயித்ரா, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் ரமேஷின் நியமனத்தை விமர்சித்துள்ளனர்.

    ×