search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourism locations"

    ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப் படுகிறது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்டவை இருக்கின்றன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    ஆனால் புதிதாக வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் எந்தெந்த இடங்களில் சுற்றுலா தலங்கள் இருக்கின்றன என்பது தெரியாமல் வாகனங்களில் தேடி அலையும் நிலை இருந்தது. இதனால் சிலர் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களை காண முடியாமல் தவித்தனர். மேலும் சிலர் சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியோடு சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகள் எளிதில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் புகைப்படங்களுடன் கூடிய வழிகாட்டி பலகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன.

    அவை வைக்கப்பட்டு பல மாதங்களை கடந்ததாலும், முறையாக பராமரிக்காததாலும் வழிகாட்டி பலகைகளில் குறிப்பிடப்பட்டு இருந்த சுற்றுலா தலங்கள், அவற்றுக்கு செல்லும் தூரம்(கிலோ மீட்டரில்) குறித்த விவரங்கள் அழிய தொடங்கி விட்டன. மேலும் இரும்பு பலகைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்தன. இதையடுத்து வழிகாட்டு பலகைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்ட வரைபடத்துடன் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் ஊட்டியில் வைக்கப்பட்டு உள்ளன. ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரில், சேரிங்கிராஸ், ஊட்டி படகு இல்லம், பிங்கர்போஸ்ட், தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி ஏரி, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, கர்நாடகா பூங்கா, அரசு அருங்காட்சியகம், வேலிவியூ, தொட்டபெட்டா மலைச்சிகரம், காமராஜ் சாகர் அணை, கல்லட்டி நீர்வீழ்ச்சி, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, அப்பர்பவானி, கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து தொரப்பள்ளி தொங்கு பாலம், ஊசிமலை காட்சிமுனை, தவளைமலை காட்சிமுனை, தெப்பக்காடு, சேரம்பாடி, கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து நேரு பூங்கா, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சிமுனை, குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து சிம்ஸ் பார்க், லேம்ஸ் ராக், காட்டேரி நீர்வீழ்ச்சி, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல எத்தனை கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஊட்டியின் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க உதவியாக புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவற்றில் சில சுற்றுலா தலங்களுக்கு செல்லும் கிலோ மீட்டர் தூரம் குறைவாகவும், கூடுதலாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு 23 கிலோ மீட்டர் எனவும், பைக்காரா படகு இல்லத்துக்கு 21 கிலோ மீட்டர் எனவும் இருக்கிறது. பைக்காரா நீர்வீழ்ச்சியை அடுத்து தான் பைக்காரா படகு இல்லம் இருக்கிறது. எனவே குழப்பம் அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே தவறாக இடம்பெற்றுள்ள தூர விவரத்தை சரியாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    ×