search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tree cutting"

    கொடைக்கானல் கீழ்மலையில் கஜா புயலை காரணம் காட்டி மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    தமிழகத்தை சுருட்டி வாரிய கஜாபுயல் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.

    மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக இருளில் தவித்தனர். தற்போது குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்காக வனத்துறையினரிடம் அனுமதிபெற தாமதமாவதால் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவுப்படி தனி தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ கையொப்பமிட்ட அனுமதிசீட்டுடன் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் சாய்ந்த மரங்களுடன் நன்றாக இருக்கும் மரங்களையும் வெட்டி கடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    புயலால் சாய்ந்த மரங்களை வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இருந்தபோதும் லாரிகளில் அதிகளவு மரங்கள் கொண்டு செல்வது வாடிக்கையாகி உள்ளது. சித்தரேவு சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகள் அவ்வழியே வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மணலூர், கே.சி.பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் இருந்து புயலால் சாய்ந்த மரங்களை ஏற்றி வருவதாக கூறினர்.

    ஆனால் அந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் விலை உயர்ந்த சில்வர்ஓக், தீக்குச்சி செய்ய பயன்படுத்தும் மலைமுருங்கை மரங்கள் இருந்ததால் லாரிகளை சோதனைச்சாவடியில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற உரிய அனுமதிவாங்கி மரங்களை வெட்டினார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். உரிய அனுமதி சீட்டு இருந்தால் லாரிகள் அனுமதிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ×