என் மலர்
நீங்கள் தேடியது "Tuticorin riot"
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.
இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் போராட்டத்தை தூண்டும் வகையில் செயல் படுபவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏராளமானோர் போலீஸ் பிடியில் சிக்கினர். சிலர் விசாரணைக்கு பின் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
அவர்களில் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைப்பாளர் இசக்கிதுரை, குமரெட்டியாபுரம் கிராமத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வந்த மகேஷ் மற்றும் பண்டாரம்பட்டி பால்ராஜ், பாண்டி உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tuticorinfiring #naamtamilarkatchi
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக நடக்கும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அமைதியாக போராடி கொண்டு இருந்த மக்களிடையே மிகப்பெரிய கலவர சூழ்நிலை உருவாகி 13 உயிர்கள் பறிபோய்விட்டது. மத்திய அரசு துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கியதாக பொய்யான பிரசாரங்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம்.

ஸ்டெர்லைட் ஆலையை பா.ஜனதா அப்போதே எதிர்த்தது. அந்த ஆலைக்கு எதிராக 95-96-ம் ஆண்டுகளில் பல போராட்டங்களை நடத்தினேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டேன். இந்த ஆலையை கொண்டு வர முழு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் தான்.
ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ். மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஆகியோரும் இதற்கு அனுமதி வழங்கியதில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சொல்லி நடந்ததாக ராகுல்காந்தி கூறுகிறார். சோனியாகாந்தி காலத்தில் இருந்தே தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் நடந்த துரோகங்கள் எண்ணில் அடங்காது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்து உள்ளன.
கடந்த 99 நாட்களாக நடந்த போராட்டங்களில் எந்த சம்பவமும் நடக்காமல், 100-வது நாளில் கலவரம் எப்படி நடந்தது. இதில் பங்கேற்ற தீய சக்திகள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்துக்கு எந்த திட்டமும் வரக்கூடாது என்று சில கூட்டம் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக கூறிய போதும், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.
ஆஷ்துரைக்கு வீரவணக்கம் என்று ஆங்கிலேயருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆள்வதற்கு தமிழக அரசுக்கு தகுதி இருக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #ThoothukudiShooting