என் மலர்
நீங்கள் தேடியது "Ugadi festival"
- பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.
பெங்களூரு:
தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.
சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.
பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
- தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.
- தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் யுகாதி திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது கழக அரசு. யுகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டாலும் 2006-ம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆவார்.
தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், பாராளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.
இன்று தென்மாநிலங்கள் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப்போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது யுகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.
அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
- பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஸ்ரீ காளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பு உகாதியை முன்னிட்டு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்கார மண்டபத்தில் உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

முன்னதாக வேதப்பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பால், தயிர். பஞ்சாமிர்தம், தேன், நெய், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி கோவில் சார்பில், பக்த கண்ணப்பர் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் தேவஸ்தானம் சார்பில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு, தாரக சீனிவாசுலு மற்றும் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் தலைமீது சுமந்து கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர் வீதியில் உள்ள பக்தக் கண்ணப்பர் கோவில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.
இதில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, சீனிவாசலு, சிறப்பு அழைப்பாளர்கள் சிந்தாமணி பாண்டு, உதய்குமார், சுரேஷ், தேவஸ்தான தலைமை அர்ச்சகர்கள், தேவஸ்தான உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
யுகாதி திருநாளான தெலுங்கு வருடப்பிறப்பு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2 டன் பூக்கள் மற்றும் மலர் மாலைகள் லாரி மூலம் அனுப்பப் பட்டது.
கோயம்பேடு மலர் அங்காடி வியாபாரிகள் சார்பில் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி திருநாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 4 டன் பூக்கள், மாலைகள் லாரி மூலம் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படுகிறது.
இந்த ஆண்டும் கோயம்பேடு மொத்த பூ வியாபாரிகள் 20 பேர் மார்க்கெட்டில் பணம் வசூல் செய்து அதன் மூலம் 2 டன் பூக்கள் மற்றும் மலர் மாலைகள் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு லாரி மூலம் அனுப்பி உள்ளனர்.
அதில் 8 வகையான பூக்கள் அனுப்பப்பட்டுள்ளது. ரோஜா, லில்லி உள்ளிட்ட பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாலைகள் கண்ணை கவரும் வகை யில் அமைந்து இருந்தன.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரி ஏ.எஸ்.மணி கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூர், கடப்பா, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.
இந்த ஆண்டு கடும் வறட்சி மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் பூக்கள் உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவிலுக்கு யுகாதி திருநாளையொட்டி கோயம்பேட்டில் இருந்து 4 டன் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டு வறட்சி காரணமாக 2 டன் பூக்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எந்தவித தடையும் இல்லாமல் திருப்பதி கோவிலுக்கு பூக்கள் அனுப்புவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.