என் மலர்
நீங்கள் தேடியது "Unemployed youngster"
- மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
திருப்பூர் :
வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத படித்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு இதுவரை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படும். பொதுமனுதாரர்களுக்கு காலாண்டிற்கு (மூன்று மாதம் ) ஒருமுறைவழங்கப்படும்.
10-ம்வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு(பொது) ரூ.200, மாற்றுத்திறனாளிக்கு ரூ.600 வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது -ரூ.300, மாற்றுத்திறனாளி ரூ.600 வழங்கப்படும்.
12-ம்வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வி தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது ரூ.400, மாற்றுத்திறனாளிக்கு ரூ.750 வழங்கப்படும். பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு பொது-ரூ.600, மாற்றுத்திறனாளி ரூ.1000 வழங்கப்படும்.
வயது வரம்பு (உதவித் தொகை பெறும் நாளில்)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 45 வயதிற்குள். இதர வகுப்பினர்- 40 வயதிற்குள் மாற்றுத் திறனாளிகள்- உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை (45 வயதுக்கு மேல் சுய சான்று வழங்க வேண்டும்) /மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்கவேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலை தூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து பொது மனுதாரர்கள் 5 வருடங்கள், மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று வேலையில்லாமல் காத்திருப்பவர் www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்திலிருந்தோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்விற்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வுமையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வேலைவாயப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் (2022-2023) இவ்வாண்டுக்கான சுயஉறுதி மொழி ஆவணத்தை 10 டிசம்பர் 2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக மேற்கண்டவாறு படிவங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.