search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthayakumar"

    நாகர்கோவிலில் இன்று அதிகாலை தூத்துக்குடிக்கு புறப்பட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இச்சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    தூத்துக்குடியில் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பதட்டமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்காக குமரி மாவட்டத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி சென்றனர்.

    தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் நிறுவனருமான சுப. உதயகுமார் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை நாகர்கோவில், கோட்டார் இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அவர், தூத்துக்குடி செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார். அவரை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாக கூறினர்.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டார். இதுபோல பச்சை தமிழகம் அமைப்பின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியும் கைது செய்யப்பட்டார். ஆரல்வாய் மொழியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சங்கரபாண்டியை கைது செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
    ×