search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uthukottai"

    ஊத்துக்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (38). இவர் பெரியபாளையம் அடுத்து உள்ள மஞ்சாங்காரணையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். லட்சிவாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் ஜானகிராமன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஊத்துக்கோட்டை அருகே கோடை வெயிலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஊத்துக்கோட்டை பகுதியில் தாங்க முடியாத அளவு வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பெண் ஒருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆலபாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சரோஜா (68). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 30-ந் தேதி காணாமல் போனார். உறவினர்கள் இவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சரோஜா தேவந்தவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வெயில் கொடுமை தாங்காமல் அவர் திடீர் என்று சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா உயிரிழந்தார்.

    குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட எடம்பேடு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு பேரிட்டி வாக்கத்தில் அமைத்துள்ள ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து எடம்பேடுவில் உள்ள உள்ள மேல்நிலை தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

    அங்கிருந்து குழாய் மூலம் எடம்பேடு கிராமத்துக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது பேரிட்டிவாக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றிவிட்டதால் எடம்பேடு கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கிராம பொது மக்கள் தூரத்தில் உள்ள வயல்களில் உள்ள பம்பு செட்களுக்கு சென்று குடங்களில் குடிநீரை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தும் தண்ணீர் வரவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடம் சென்று தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்தை நடத்தினார்கள்.

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசு நிதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை பகுதியில் மின்தடையால் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் உள்ள மின்வாரிய மின் பகிர்வு நிலையத்தில் இருந்து சுற்றியுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை, அந்தேரி, போந்தவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், சீத்தஞ்சேரி, பென்னாலூர்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் மின்தடை நீடித்து வந்தது.

    இந்த நிலையில் மின் தடையை கண்டித்தும் சீரான மின்சாரம் வழங்கக்கோரியும் ஊத்துக்கோட்டை, அந்தேரி உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மின் ஊழியர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக மின்தடையை கண்டிக்கும் விதமாக மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி மணல் குவாரி தொடங்கியது. இதில் 18,074 லாரிகளில் மணல் எடுக்க பொதுப் பணித்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

    மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல், சுற்றுசூழல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால் ஊத்துக்கோட்டை, அனந்தேதி, போந்தவாக்கம், நந்திமங்கலம், பேரிட்டிவாக்கம், கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம் உட்பட 10 கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் சாகுபடி செய்த பயிர்கள் கருகின. இதனை கண்டித்தும், மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தியும் பொது மக்கள் கடை அடைப்பு, உண்ணாவிரதம், மறியல் போன்ற தொடர் போராட்டம் நடத்தினர். மேலும் மணல் குவாரி மூடவேண்டும் என்று கோரி பொது மக்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரபட்டது.

    இது குறித்து மணல் குவாரியை ஆய்வு செய்ய கோர்ட் தொழில்நுட்ப குழுவை அமைத்தது. குழுவினர் ஆய்வு செய்து விதிகள் மீறப்பட்டுள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ததால் மணல் குவாரி மூடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரணி அற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்கப்பட்டது. மழை பொய்த்து போய் ஆரணி ஆறு முழுவதுமாக வற்றிவிட்ட நிலையில் மீண்டும் மணல் குவாரி தொடங்கி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து 10 கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், “ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உறுதி அளித்தார்.

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கன். இவரது மனைவி ராஜம்மாள் (70). இவர் நேற்று இரவு அங்கு உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு சாலை ஓரமாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சென்னையிலிருந்து ஆந்திராவை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு விசாரணை செய்தார். லாரி டிரைவர் தினகரன் (45) கைது செய்யப்பட்டார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர்.

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுறது.

    சுமார் 25 வருடங்குளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிட்டி வாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் சப்ளை சரியாக இல்லாதால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டையில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை கைது செய்த போலீசார் அவரை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாலை அவள் பள்ளி முடிந்து வீட்டுக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த விவசாயி ராமன், சிறுமியிடம் பேச்சு கொடுத்தார்.

    பின்னர் அவர், சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியபடி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுபற்றி அவள் பெற்றோரிடம் கூறி கதறினார்.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுராதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தார். அவரை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    ஊத்துக்கோட்டை அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி கடந்த 4-ந் தேதி ஆட்டோ ஒன்று புறப்பட்டு சென்றது.

    சீதஞ்சேரி அருகே உள்ள ஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நரேஷ் ஆட்டோவை ஓட்டினார். இதில் ஒதப்பை கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் என்பவரது மனைவி காட்டம்மாள் (45) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் வந்த போது திருவள்ளூர் நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.

    இதே போல் கார் மோதிய வேகத்தில் ஆட்டோவும் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிரைவர் நரேஷ், ஆட்டோவில் இருந்த காட்டம்மாள், நதியா, இவரது மகள் ஹர்‌ஷவர்தினி, தாஸ், நாகசுந்தரி உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் பயணம் செய்த 2 பேரும் காயம் அடைந்தனர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    காட்டம்மாளை மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காட்டம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த தொம்பரம்பேடு பைரவர் கோவில் தெருவில் வசித்து வருபவர் முனுசாமி. அவரது மனைவி பானு. நேற்று இரவு அவர்கள் வீட்டை பூட்டி விட்டு தூங்கினர். உடன் முனுசாமியின்தாய் பூங்காவனம், பானுவின் தாய் வள்ளி ஆகியோரும் இருந்தனர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் பானு அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பானு மற்றும் குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

    உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் உடல் முழுவதும் கருப்பு மையை பூசியிருந்தனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணமுடியவில்லை.

    அதே பகுதியில் வசித்து வருபவர் கனாகம்பாள். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு அதே ஊரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இவரது வீட்டுக்குள்ளும் புகுந்தமர்ம கும்பல் பீரோவை உடைத்தனர். அதில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியிருப்பது தெரிய வந்தது.

    2 வீடுகளுக்குள்ளும் புகுந்தது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்கள் ஆந்திரா அல்லது வடநாட்டு கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊத்துக்கோட்டையில் 12.4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. #Rain

    திருவள்ளூர்:

    வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டியது. அதிகபட்சமாக 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    இந்த நிலையில் இன்று காலை சென்னை புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், புழல் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    இதேபோல மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, ஊத்துக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. அதிக பட்சமாக ஊத்துக்கோட்டையில் 12.4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பெரியபாளையம் அருகே ராஜபாளையம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கனமழையால் இதன் அருகே உள்ள மாற்றுப்பாதை சேறும் சகதியாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ஆவடியில் இருந்து மெய்யூர் நோக்கி வந்த மாநகர பஸ் இந்த சேற்றில் சிக்கிக் கொண்டது.

    இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும் வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் கிராம மக்கள் டிராக்டர் மூலம் பஸ்சை இழுத்து மீட்டனர். இதன் பிறகு அப்பகுதியில் போக்கு வரத்து சீரானது.

    பொன்னேரி பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி கிடக்கிறது.

    தடப்பெரும்பாக்கத்தில் விவேகானந்தர் தெரு. ராஜீவ் காந்தி தெரு, அம்பேத்கர் தெருக்களில் சுமார் 50 வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் பொன்னேரி என்.ஜி.ஓ. காலனி, பள்ளம், வேன்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

    சென்னையில் இன்று காலை சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. #Rain

    ஊத்துக்கோட்டை அருகே விபத்தில் சென்னை என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை கிண்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தவர் கணேஷ் குமார் (வயது 29). இவரது சொந்த ஊர் கமுதி ஆகும்.

    இவர் உடன் வேலை பார்க்கும் என்ஜினீயர் விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையை அடுத்த கோனே பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு சென்றார். அங்குள்ள அருவியில் இருவரும் குளித்து விட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீர் என்று மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

    இதில் கணேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். விக்னேஷ் லேசான காயத்து டன் உயிர் தப்பினார்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×