search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valli kumbi dance"

    • வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
    • பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பிறந்தவர் பத்ரப்பன். வள்ளி கும்மியாட்ட கலைஞராக உள்ளார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பத்ரப்பன், சிறுவயது முதலே கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்க ளில் வள்ளி கும்மி என்னும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

    இதுதவிர 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள மாணவ, மாணவிகள் 170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்தார். மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்துள்ளார்.

    வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

    கிராமிய கலையான வள்ளி கும்மி கலையில் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஈடுபட்டு வந்த நிலையில், அதை மாற்றி பெண்களும் அதிகளவில் பங்கேற்கவும், அவர்களுக்கு பயிற்சியும் அளித்த பெருமைக்குரியவர் பத்ரப்பன்.

    அந்த கலையின் வாயிலாக தேசப்பற்று, வரலாறு ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    தொடர்ந்து வள்ளி கும்மி கலைக்கு சேவையாற்றி வரும் இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.

    இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும், நக்கீரன் என்ற மகனும், முத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியும், மகனும் இறந்துவிட்டதால் தனது மகள் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்து விவசாயம் பார்த்து வருகிறார். முத்தம்மாளின் கணவர் ரங்கசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.


    பத்மஸ்ரீவிருது குறித்து பத்ரப்பன் கூறியதாவது:-

    நாட்டுப்புற கலை என்பது இயல்பாகவே நம் மண்ணில் உருவானது. இந்த கலைவடிவம் மூலம் தான் மற்ற தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். நான் 20 வயதில் இருந்தே வள்ளி கும்மி நடனம் ஆடி வருகிறேன்.

    இக்கலை என்னோடு அழிந்து விடாமல் இருப்பதற்காக மேட்டு ப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

    அவர்கள் தற்போது பல பேருக்கு கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளி கும்மி கலை உள்ளது. இதன்மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். பாரம்பரிய கலை, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கத்தை தர முடியும்.

    பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும். 87 வயதில் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத்துறைகளிலும் உள்ளவர்கள் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது துணை புரியும். எனக்கு விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறனே். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை நான் எனக்காக கருதாமல் ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களுக்கு கிடை க்கும் பரிசாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன்.

    நான் ஏற்கனவே தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைமுதுமணி விருதுகளை பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ள பத்ரப்பனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து எல் முருகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதவாது

    ஒயிலாட்ட நாட்டுப்புற கலைகளின் முன்னோடியான, அய்யா பத்ரப்பன் அவர்களுக்கு, மத்திய அரசு "பத்மஶ்ரீ" விருது அறிவித்ததை அடுத்து உடனடியாக அவர்களது இல்லதிற்கு சென்று ஐயா அவர்களை நேரில் சந்தி்த்து மிகுந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்.

    வள்ளிக்கும்மி எனும் நாட்டுப்புற நடனத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம், தெய்வங்களின் வரலாறு, தேச வரலாறு மற்றும் சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து பேசுபவர்.

    ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கலையில், பெண்களுக்கும் சமமான அதிகாரமளித்து பயிற்சி கொடுத்த முன்னோடி.

    தொடர்ந்து 66 ஆண்டு காலமாக தான் நேசித்து செய்யும் இக்கலையின் மூலம், 150-க்கும் மேற்பட்ட தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி, குருவாக்கியுள்ளார். 300-க்கும் அதிகமான "கும்மி" நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×