search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaniambadi"

    வாணியம்பாடி அருகே மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #Leopard

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே உள்ள நாகலேரி வட்ட பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை புகுந்தது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியது.

    நேற்று காலை அலமேலு என்ற பெண் மாட்டுக்கு தீவனம் எடுக்க கரும்புத் தோட்டத்துக்கு சென்றார். அப்போது சிறுத்தை சத்தமிட்டது. இதனால் திடுக்கிட்ட அந்த பெண் ஊருக்குள் சென்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கரும்புத்தோட்டத்துக்கு சென்றனர். பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து 3 பேரை தாக்கியது. பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதில் சிலர் சிறுத்தைப்புலி இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர்.

    இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தியது.

    அப்போது சிறுத்தை தாக்கியதில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுமக்கள் கலைந்து ஓடியதால் சிறுத்தை மறுபடியும் நாகலேரி முட்புதரில் புகுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் வனத்துறை அதிகாரி சோழராஜன், வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தாசில்தார் கிருஷ்ணவேனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைக்கப்பட்டது.

    மேலும் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கபட்டனர்.

    வனத்துறையினர் மயக்க ஊசியுடன் இரவு முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. இன்று காலை கரும்பு தோட்டம், முள்புதர்களில் சிறுத்தையை தேடினர். அங்கு அது இல்லை அங்கிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. சிறுத்தை காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது.

    அதனை பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் சிறுத்தையை பார்த்தால் அதை தாக்க முயற்சி செய்யவேண்டாம். அந்த இடத்தில் இருந்து வெளியேறி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். #Leopard

    ×