search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vigilance police"

    • பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி காமராஜர் நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நகராட்சி தலைவராக இருந்துவந்தார். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம். இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அப்போது கமிஷனராக இருந்த பெருமாள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.

    இதனைத்தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை பண்ருட்டி சென்றனர். பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் வீடு, பண்ருட்டி 4 முனை சந்திப்பில் உள்ள பன்னீர்செல்வம் அலுவலகம், சென்னையில் உள்ள முன்னாள் கமிஷனர் பெருமாள் வீடு உள்ளிட்ட 5 இடங்களில், காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் பண்ருட்டி கந்தன் பாளையத்தில் உள்ள முன்னாள் ஒன்றிய செயலாளர் மலா பெருமாள் வீட்டிலும், பத்திர எழுத்தர் செந்தில்முருகா, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் மோகன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. மாலா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆவார். மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது வீட்டில் இருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.

    சோதனை நடைபெறும் தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். முன்னாள் நகராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய விவகாரம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
    • திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.

    காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.

    அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.

    இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.

    திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.

    மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இன்று இரவு முதல் தொடங்குகிறது. தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 102 போலீஸ் நிலையங்களிலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதால் இடையூறாக இருப்பதாக யாராவது புகார் செய்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • சோதனையின் முடிவில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் எப்படி வந்தது? என சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர்.

    விருத்தாசலம்:

    கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் துணை சாா்பதிவாளராக சங்கீதா பணிபுரிந்து வருகிறார்.

    இவர் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாகவும், அதனை 'ஜி-பே', 'போன்-பே ' மூலமாகவும், நேரடியாகவும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், திருவேங்கடம், ஆய்வுக்குழு தலைவர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.30 மணிக்கு விருத்தாசலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்கள் இரவு வரை அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் எப்படி வந்தது? என சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வீட்டுமனை விற்பனை நிறுவனத்தில் 10 மனைகள் வாங்குவதற்கு ரூ.45 லட்சம் முன்தொகை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அவர் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகளும் சிக்கியது.

    இதையடுத்து சங்கீதாவையும், அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் உதயகுமாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    நள்ளிரவு 1 மணி வரை அவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர் அவர்களை கடலூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.
    • சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

    இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
    • கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டபோது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கடந்த 19-1-2022 தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 20-1-2022 தேதி அன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழனுக்கு சொந்தமான தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரேகோடஅள்ளியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடங்கள், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என மொத்தம் 58 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரொக்கம் மற்றும் தங்க நகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    மேலும், கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கே.பி. அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு தாக்கல் செய்தனர். அதில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த காலங்களில் ரூ.45 கோடி வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று பினாமி பெயரில் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மகள் வைஷ்னவி, மருமகள்கள், உறவினர்கள் உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சி அதிகாரியின் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் பணம் சிக்கியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

    நேற்று இரவும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 9 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் மாடசாமி (வயது 48) திடீரென தனது காரில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தார்.

    அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரது காரை சோதனை செய்தனர். காரில் 3 லட்சத்து 52 ஆயிரமும், மாடசாமி சுந்தர ராஜின் சட்டைப்பையில் ரூ.18 ஆயிரமும் இருந்தது. காரில் இருந்த பை ஒன்றை சோதனை செய்தபோது அதில், ரூ.39 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மாடசாமி சுந்தரராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முறையான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்களையும் காட்டவில்லை.

    நள்ளிரவு 1.30 மணி வரை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் விசாரணைக்கு பிறகு அடுத்த விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று கூறி மாடசாமி சுந்தரராஜை அனுப்பி வைத்தனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய மாடசாமி சுந்தரராஜின் சொந்த ஊர் நெல்லை வண்ணார்ப்பேட்டை ஆகும். தினமும் ஊரில் இருந்து தான் பணிக்கு வந்து சென்றுள்ளார்.

    மாடசாமி சுந்தரராஜிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிகிறது. அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போதுசெயல் அலுவலர் மேஜை டிராயரில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ரவுடியிடம் ரூ.5 லட்சம் கேட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை அண்ணாநகரில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை உதவி கமி‌ஷனராக கடந்த ஆண்டு பணிபுரிந்தவர் முத்தழகு. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பணியில் சேர்ந்த அவர் கடந்த ஆண்டு மே மாதம் வரையில் உதவி கமி‌ஷனராக பணியாற்றினார்.

    தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராமபுரம் சமஸ்தான வாரிசான கார்த்திக் சேதுபதி என்பவரை கடத்தி சொத்தை அபகரிக்க ரவுடிகள் சிலர் முயற்சி செய்தனர்.

    இதுதொடர்பான குற்றச்சாட்டை உதவி கமி‌ஷனர் முத்தழகு விசாரித்தார். அப்போது ரவுடிகள் ஒருவனை கைது செய்யாமல் இருக்க அவர் ரூ.5 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக ரவுடியின் சகோதரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இறுதியில் ரூ.3½ லட்சம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    உதவிகமி‌ஷனர் முத்தழகு பேசியதாக கூறப்படும் ஆடியோ வாட்ஸ்அப்- பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட முத்தழகு பின்னர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படையில் பணி அமர்த்தப்பட்டார்.

    அங்கு உதவி கமாண்டராக பணியில் உள்ளார். ஆடியோ வெளியானதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்தழகு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர். ஆடியோவில் இருப்பது முத்தழகுவின் குரல்தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவருக்கு குரல் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாநகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உதவிகமி‌ஷனர் முத்தழகு 1987-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

    பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி கமி‌ஷனர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சென்னை போலீஸ் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமான அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது சக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ராயபுரம் மற்றும் திருவண்ணாமலை பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #vigilanceraid

    ராயபுரம்:

    ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, திருமண பதிவு மற்றும் கம்பெனி பதிவு ஆகியவற்றுக்காக தினமும் மக்கள் கூட்டம் அலை மோதும்.

    இதனால் இந்த அலவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. கந்தசாமி தலைமையில் 20 பேர் கொண்ட போலீசார் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்களை வெளியில் செல்லவிடாமல் அலுவலகத்தை பூட்டி சோதனை நடத்தினார்கள்.

    பீரோ, மேஜை என ஒவ்வொரு இடத்திலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    மாலையில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றவர்கள் இரவுவரை வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு பொதுமக்களை மட்டும் அலுவலகத்தில் இருந்து போலீசார் வெளியே அனுப்பினார்கள்.

    இச்சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

     


    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

    பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் போலீசார் அலுவலகத்திற்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பத்திரப்பதிவு இணை பதிவாளர் உள்பட அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் பத்திரம் பதிவுக்காக வந்தவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களை அப்படியே உள்ளேயே வைத்து கதவை பூட்டிக் கொண்டு விசாரணை நடத்தினர்.

    மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நீலகண்டன் பணியாற்றி வருகிறார். இவர், டாஸ்மாக் பார்களில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். மாலையில் இருந்து இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.

    அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    மேலும் டிரைவர் சுரேஷ் மற்றும் மதுவிலக்கு போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றனர். #vigilanceraid

    பாரிமுனையில் உள்ள குறளகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பேரூராட்சி இயக்குனரக அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் சிக்கியது. #kuralagam
    சென்னை:

    தீபாவளியையொட்டி மாநில அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்களும், லஞ்ச பணமும் கைமாறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தீபாவளிக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பரிசு பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாரிமுனையில் உள்ள குறளகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறளகம் கட்டிடத்தில் காதி கிராப்ட் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கட்டிடத்தின் 4-வது மாடியில் பேரூராட்சி இயக்குனரக அலுவலகம் உள்ளது.

    அங்கு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனையில் ரூ.2½ லட்சம் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. நள்ளிரவு வரையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

    பாரிமுனை சந்திப்பில் உள்ள குறளகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அங்கு எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஒருசில அரசு அலுவலகங்களில் இரவு 8 மணிக்கு பிறகும் பணிகள் நடைபெறுவதுண்டு. இதுபோன்ற ஒரு சூழலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை குறளகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #kuralagam
    மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    மதுரை:

    தீபாவளி நெருங்குவதையொட்டி அரசு அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் பரிசு பொருட்கள், இனிப்புகள், பட்டாசு உள்ளிட்டவைகளை இனாமாக வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டும் பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று அதிகாரிகள் பெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை மாநகராட்சி அலுவலகத்திலும் உயர் அதிகாரிகள் தீபாவளி பரிசு பொருட்கள் பெருவதாக கிடைத்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் 20 போலீசார் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது மாநகராட்சி 2-வது மாடியில் உள்ள நகர பொறியாளர் அறைக்கு பல ஒப்பந்ததாரர்கள் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நகர பொறியாளர் அறைக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து நகர பொறியாளர் அரசு மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அங்கிருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.3 லட்சம் ரொக்கம், தலா 10 கிராம எடை கொண்ட 12 வெள்ளி காசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள், 2 வெள்ளி டம்ளர், பட்டாசு பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சுமார் 3 மணி நேரம் அதிகாரி அரசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்து பட்டியலிடப்பட்டு அதிகாரியிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.

    இந்த நிலையில் நகர பொறியாளர் அறையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக அதிகாரி அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஒரு சஸ்பெண்டு அதிகாரி பின்புலமாக இருந்ததாகவும் மாநகராட்சி அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    நேற்று காலை முதல் மாலை வரை நகர பொறியாளர் அரசு மாநகராட்சி பணிகளில் ஈடுபட்டார். சரியாக 7.30 மணிக்கு அலுவலகத்துக்கு சென்றார். அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஏற்கனவே இதே பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்படதாகவும் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews
    தீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூல் செய்த போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பட்டாசுகள், புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. #Diwali #Vigilancepolice

    விழுப்புரம்:

    தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 1-ந்தேதி சென்னை உள்பட 24 இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.44 லட்சம் சிக்கியது. நேற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அதிரடி சோதனை நீடித்தது.

    உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீஸ்காரர்கள் பணியில் இருந்தனர். சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் தங்கி இருந்த வீட்டுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அங்கு குவியல் குவியலாக பட்டாசு பாக்ஸ் மற்றும் புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 120 பட்டாசு பெட்டிகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அவற்றை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.


    அதனை தொடர்ந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோசை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் இந்த நடவடிக்கையை வரவேற்று திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியில் உள்ள மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை செய்தனர்.

    சோதனையின்போது அலுவலகத்தின் நாற்காலிகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.80,200 பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணம் என்று தெரியவந்தது.

    விசாரணை நடந்து கொண்டு இருந்த போது அலுவலக மஸ்தூர் பணியாளர் வெளியே சென்றார். அவரை மீண்டும் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்தனர். #Diwali #Vigilancepolice

    ×