search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vikatan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விகடனின் இணையதளம் கடந்த 15-ந்தேதி முடக்கப்பட்டது.
    • இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது.

    இந்த கார்ட்டூன் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் கடந்த 15-ந்தேதி முடக்கப்பட்டது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது.

    ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் வாதிட்டார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

    • ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல.
    • எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு.

    விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. விகடன் தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை.

    கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விசுவாசிகளே நினைத்துப் பார்க்காத விஸ்வரூபம்.

    மக்கள் நீதி மய்யம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு. வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய இந்திய மணித்திருநாடு" என்று பதிவிட்டுள்ளார்.

    ×