என் மலர்
நீங்கள் தேடியது "were not happy"
- இதையொட்டி அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. அன்பழகன் ஆதங்கம்.
புதுச்சேரி:
புதுவையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவியேற்றார்.
ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் முடிந்து 3-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் சட்டசபையில் ரங்கசாமியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ரங்கசாமி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் கூட்டணி கட்சிதான் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. அப்போது ரங்கசாமி, எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம் என கூறினார். ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டு முடிவடைந்த நிலையிலும் இதுவரை புதுவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கப்படவில்லை.
இதனால் ஏற்கனவே ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கத்தில் உள்ளனர். அதேநேரத்தில் கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியடைந்த அ.தி.மு.க. நியமன எம்.எல்.ஏ.வை எதிர்பார்த்தது. ஆனால் சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதா நிரப்பிக்கொண்டது.
இதனால் நியமன எம்.எல்.ஏ. பதவி அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் வாரிய தலைவர் பதவியாவது கிடைக்கும் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் வாரியமும் கிடைக்காததால், விரக்தியில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது