search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women child"

    செங்கம் அருகே 3-வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை குழந்தையை எரித்து கொலை செய்தார். இது குறிது போலீசார் அவரை கைது செய்தனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயி (31). இவரது மனைவி வேண்டா (28). இவர்களுக்கு, திவ்யா (10), அர்ச்சனா (6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    மீண்டும் கர்ப்பமடைந்த வேண்டாவுக்கு கடந்த 24-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் தம்பதியினர் விரக்தியில் இருந்தனர். வேண்டாவுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி டாக்டர்கள் ஒப்புதல் இல்லாமல் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சிவக்குமார் மற்றும் வேண்டா ஆகியோர் வெளியேறினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நர்சுகள், சிவக்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, சுகாதார துறையின் கவனத்துக்கு டாக்டர்கள் கொண்டு சென்றனர்.

    செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனா சங்கர் தலைமையிலான குழுவினர் பாச்சல் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை சிவக்குமார் எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

    3-வதும் பெண் குழந்தையாக பிறந்ததால், வறுமையின் காரணமாக பெண் குழந்தையை வளர்ப்பது கடினம் என நினைத்து பச்சிளங் குழந்தையை சிவக்குமார் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

    இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த டாக்டர் சிந்தனா சங்கர், பாச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே குழந்தை திருமணம் மற்றும் கருக்கலைப்பு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    தற்போது, பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை எரித்துக் கொன்றதை தகவலறிந்த கலெக்டர் கந்தசாமி பாச்சல் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார்.

    3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் கொன்று எரித்ததாக கூறுவது வேதனையானது. வறுமையின் காரணமாக வளர்க்க முடியாவிட்டால் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்திருக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசு கொலை அதிகளவில் நடக்கிறது. அதே போல் பாலினவன்முறை, மைனர் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதற்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

    இது தொடர்பாக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.#tamilnews
    ×