search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Club Volleyball Tournament"

    • உலக கைப்பந்து கிளப் சாம்பியன்ஷிப் போட்டி முதல் முறையாக இந்தியாவில் 2023, 2024 ஆண்டுகளில் நடைபெற உள்ளது.
    • கடந்த 20 ஆண்டுகளாக கைப்பந்து கிளப் உலக சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    சென்னை:

    8 அணிகள் பங்கேற்கும் 2-வது பிரைம் கைப்பந்து 'லீக்' போட்டி வருகிற 4-ந்தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் சென்னை பிளிட்ஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

    அணியின் உரிமையாளர்கள் விக்ராந்த் ரெட்டி, ஹனிமிரெட்டி, தலைமை செயல் அதிகாரி கிரண் குமார், தலைமை டெக்னிக்கல் அதிகாரி துளசி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு சீருடையையும், அணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.

    சென்னை அணியின் கேப்டனாக இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான நவீன் ராஜா ஜேக்கப் நியமிக்கப்பட்டு உள்ளார். பிரேசிலை சேர்ந்த ரெனடோ மெண்டஸ், கேமரூனை சேர்ந்த மோயோ ஆகியோர் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    அர்ஜென்டினாவை சேர்ந்த ருபென் வெலாக்கி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் உலக கைப்பந்து கிளப் சாம்பியன்ஷிப் போட்டி முதல் முறையாக இந்தியாவில் 2023, 2024 ஆண்டுகளில் நடைபெற உள்ளது. உலக வாலிபால் மற்றும் சர்வதேச கைப்பந்து சம்மேளனம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரைம் வாலிபால் 'லீக்'குடன் இணைந்து 2 ஆண்டுகள் உலக கைப்பந்து கிளப் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்துகிறோம். போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் பிரைம் வாலிபால் 'லீக்' சாம்பியனும் இதில் பங்கேற்க இயலும்.இத்தாலி, பிரேசில், ஈரான் போன்ற நாடுகளை சேர்ந்த கிளப் அணிகளுடன் மோத வேண்டி இருக்கும்.

    இந்த ஆண்டு டிசம்பர் 6, 10-ந்தேதிகளில் போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் நகரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    கடந்த 20 ஆண்டுகளாக கைப்பந்து கிளப் உலக சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. தலை சிறந்த தொழில் முறை வீரர்கள் நிறைந்த கிளப் அணிகள் இதில் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு உலக கிளப் சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த போட்டியின் பரிசு தொகை ரூ.2.86 கோடியாகும்.

    சர்வதேச கைப்பந்து சம்மேளன தலைவர் கிரகா கூறும் போது, 'இந்தியாவுக்கு சிறந்த கைப்பந்தை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த கிளப் அணிகள் கலந்து கொள்வது இந்திய வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் சிறந்த அனுபவமாகும்' என்றார்.

    பிரைம் வாலிபால் 'லீக்' அமைப்பை சேர்ந்த துஹின் மிஸ்ரா கூறும் போது, 'இந்திய கைப்பந்துக்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும். உலகின் சிறந்த கைப்பந்து வீரர்கள் இந்தியா வர உள்ளனர். அவர்களுடன் ஆடும் வாய்ப்பு இந்திய வீரர்களுக்கு கிடைக்கும்' என்றார். 

    ×