என் மலர்
நீங்கள் தேடியது "குப்பைத்தொட்டி"
- கொருக்குப்பேட்டை பெருமாள் தோட்டம் தெருவில் 500-க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏராளமான ஸ்டீல் பட்டறைகளும் உள்ளன.
- சாலையோரம் மற்றும் தெருக்களின் முன்பு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.
வடசென்னை என்றாலே நெரிசலான பகுதி. இந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் எவ்வளவு விழிப்புடன் செயல்பட வேண்டும்? ஆனால் சில நேரங்களில் சிலர் தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்து விடுகிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ளதுதான் இந்த அவலம்.
கொருக்குப்பேட்டை பெருமாள் தோட்டம் தெருவில் 500-க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏராளமான ஸ்டீல் பட்டறைகளும் உள்ளன.
பெருமாள் கோவில் தோட்டம், ஆர்.டி.ரங்கன் தெரு பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்து குப்பை கழிவுகளை கொட்டுவதற்காக இளைய தெருவில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த மாதிரி தொட்டிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தினமும் குப்பைகளை அகற்றுவது வழக்கம்.
இந்நிலையில் இளைய தெருவில் இருந்த குப்பை தொட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அகற்றப்பட்டன. இப்போது அந்த பகுதி மக்கள் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக சாலையோரம் மற்றும் தெருக்களின் முன்பு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.
பல நாட்களாக சாலை மற்றும் தெருக்களின் முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குவிந்து கிடக்கும் குப்பைகளை கால்நடைகள் மற்றும் நாய்கள் இழுத்து சாலை வரை போடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி தான் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
சாலையில் செல்பவர்கள் குப்பைகளை மிதித்துக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. குப்பைகள் கொட்டப்படும் இடத்தின் அருகிலேயே மின்சார பெட்டிகள் மற்றும் டிரான்ஸ்பார்மர் உள்ளன. மின்சாரம் பாயும் ஆபத்தும் உள்ளது.
இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான எழுத்தாளர் லதா சரவணனும் ஆதங்கப்பட்டார்.
குப்பை தொட்டி இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அதை தினமும் லாரிகள் மூலம் முறையாக அகற்றுவதும் இல்லை என்கிறார் அந்த பகுதி வியாபாரி வினோத்.
ரோட்டோரத்தில் இருக்கும் மின்சார பெட்டிகளை சுற்றிலும் குப்பைகள் கிடப்பதால் மழை நேரத்தில் சொத சொத என்றாகி விடுகிறது. மின் கசிவு நிகழ்ந்தால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது.
கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடாதீர்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. குப்பை தொட்டியை கண்ணில் கண்டால்தானே அதில் போடுவார்கள். ஒரு குப்பை தொட்டியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமா? இல்லையா?
தெருக்களில் குப்பைகளை கொட்டுகிறார்கள். நகரின் அழகையே கெடுக்கிறார்கள் என்று ஒட்டு மொத்தமாக மக்களை மட்டும் குறை சொன்னால் எப்படி?
தங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் திருத்திக் கொள்ள வேண்டும்.