search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில்  25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து

    விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய

    25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.

    இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.

    நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்
    அமர்க்களப்படும்.

    நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

    ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.

    இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?

    அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.

    அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-

    இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.

    ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.

    "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.

    ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.

    அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.

    அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.

    அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''

    அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது.
    ×