search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி"

    • சரவணபாபுவை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் குட்செட் தெரு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம். பென்சன் பெற்று வந்த இவர் கடந்த 3.6.2020 அன்று இறந்து விட்டார்.

    இந்த நிலையில் இவரது மகன் சரவணபாபு (வயது41) தனது தந்தை இறந்ததை மாவட்ட கருவூல அலுவலரிடம் தெரியப்படுத்தாமல் 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 28 மாதங்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்து 774ஐ அவரது பென்சன் தொகையை ஏ.டி.எம். மூலம் எடுத்து வந்துள்ளார்.

    இது கருவூல அலுவலருக்கு தெரிய வந்ததையடுத்து சரவணபாபுவை நேரில் அழைத்து மோசடியாக எடுத்த பணத்தை கருவூலத்தில் திருப்பி ஒப்படைக்கு மாறு எச்சரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு ரூ.30 ஆயிரம் மட்டும் திரும்ப செலுத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலர் சேசன் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தார். உடனடியாக உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உத்தரவின் பேரில் தலைமறைவான சரவணபாபுவை பிடிக்க பி.1 போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவான சரவணபாபுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் நேற்று அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டின் அருகே தனிப்படை போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் தந்தையின் பென்சன் பணத்தை கையாடல் செய்ததை சரவணபாபு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் தனது தந்தை இறந்ததை மறைத்து பென்சன் பணத்தை கையாடல் செய்தது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தலையில் சிறிய ‘பிரஷ்’ மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்தார் சல்மான்.
    • சல்மான் நடத்திய முகாமில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட பலருக்கும் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டது.

    மீரட்:

    போர், பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம் என உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், இன்றைய வாலிபர்களை பெரிதும் வாட்டி வதைக்கும் விஷயம் முடி உதிர்தல் என்றால் அது மிகையாகாது.

    குறிப்பாக வழுக்கை தலையில் மீண்டும் முடியை வளர வைக்க எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் வாலிபர்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி பேர்வழிகள் நூதன முறைகளில் வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

    அப்படி ஒரு நூதன மோசடி உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் அரங்கேறியுள்ளது.

    சல்மான் என்பவர் தன்னிடம் உள்ள எண்ணெயை தேய்த்தால் வழுக்கை தலையில் விரைவாக முடி வளரும் என்றும், ஒரு முறை அந்த எண்ணெயை தேய்த்துக் கொள்ள வெறும் ரூ.20 மட்டுமே என்றும் செய்தித்தாளில் விளம்பரம் செய்தார். முகாம் நடைபெறும் முகவரியையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இதை நம்பி நூற்றுக்கணக்கான வாலிபர்கள் அங்கு குவிந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் திரண்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாலிபர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.20 பெற்றுக்கொண்டு அவர்களின் தலையில் சிறிய 'பிரஷ்' மூலம் எண்ணெயை தேய்த்து அனுப்பி வைத்தார் சல்மான்.

    இதில் வேடிக்கை என்னவெனில் வழுக்கை தலையில் முடி வளரும் எனக் கூறி வாலிபர்களின் தலையில் எண்ணெய் தேய்த்துவிட்ட சல்மானுக்கும் வழுக்கை தலை தான். ஆனால் முகாமுக்கு வந்திருந்த வாலிபர்கள் யாரும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை.

    இந்த நிலையில் சல்மான் நடத்திய முகாமில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட பலருக்கும் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டது. அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஷதாப் என்பவர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் வழுக்கை தலையில் முடி வளரும் என பொய்யான வாக்குறுதி அளித்து பணம் சுருட்டியது தெரியவந்தது. இதற்கு முன்னர் டெல்லி, உத்தரகாண்ட், அரியானா ஆகிய மாநிலங்களிலும் இதேபோல போலி முகாம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து சல்மான் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர்.
    • அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார்.

    வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று வரும் அழைப்பை நம்பி தினமும் பலர் ஏமாறுகின்றனர். ஆனால் சத்தீஸ்கரில் விவசாயிக்கு கடன் தருகிறேன் என கூறி வங்கி மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில் வங்கி மேனேஜர், விவசாயியிடம் ரூ.12 லட்சம் கடன் தருவதாக கூறி விவசாயியிடம் உள்ள மொத்தம் 900 கோழிகளையும் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார் வங்கி மேனேஜர்.

     

    பாதிக்கப்பட்ட விவசாயி ரூப்சந்த் மன்ஹர், மஸ்தூரியில் நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி கடனுக்காக [ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா] வங்கியை அணுகினார். அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். இதை நம்பிய மன்ஹர் பணத்தை ஏற்பாடு செய்து மேனேஜருக்கு கொடுத்தார்.

    ஆனாலும் ஆசை அடங்காத மேனேஜர், கோழிக் கறி மீது தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமை மன்ஹரை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மன்ஹர் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.

     

    இருந்தும் வங்கி மேலாளர் கடன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹர் சம்பவத்தின் விவரங்களையும், தான் சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் போலீசிடம் சமர்ப்பித்து புகார் அளித்தார்.

    தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறி, மன்ஹர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவுக்கு மாப்பிளை தீபக் குமார் வந்துள்ளார்.
    • ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் சந்தித்த பெண்ணை திருமணம் செய்ய ஊர்வலமாக வந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி  அனைவரையும் திருப்பிப் பார்க்க வருகிறது.

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியலா கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார். துபாயில் பணிபுரிந்து வரும் தீபக் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பஞ்சாபை சேர்ந்த மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 3 வருடமாக நேரில் சந்திக்காமல் இன்ஸ்ட்டாகிராமிலேயே சாட்டிங் மூலம் இவர்கள் உறவு வளர்ந்துள்ளது.

    கடைசியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டாரும் போனிலேயே பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். மன்பிரீத் கவுர் ஊரான மோகாவில் ரோஸ் கார்டன் பேலஸ் மண்டபத்தில் வைத்து டிசம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. எனவே தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவுக்கு மாப்பிளை தீபக் குமார் வந்துள்ளார்.

     

    ரோஸ் கார்டன் பேலஸ்க்கு உங்களை கூட்டிவருவதற்காக ஆள் அனுப்பியுள்ளதாகப் பெண் வீட்டார் போனில் தெரிவித்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாக காத்திருந்தும் யாரும் வராததால் மாப்பிளை வீட்டார் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர்.

    அப்போது ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மணமகள் மன்பிரீத் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. எனவே நிலைமை என்ன என்பதை உணர்ந்த மாப்பிளை வீட்டார் போலீசுக்கு சென்றுள்ளனர்.

    கல்யாண செலவுக்காக பெண் வீட்டாருக்கு ரூ.60,000 கொடுத்ததாக மாப்பிள்ளை தீபக் போலீசில் தெரிவித்தார். தான் மணமகளை நேரில் பார்த்ததில்லை என்றும் போட்டோவில் மட்டுமே பார்த்துள்ளதாகவும் தீபக் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீஸ் செல்போன் எண்ணை வைத்து மணமகள் குரூப்பை தேடி வருகிறது. 

    • தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, ​​ தான் கடத்தப்பட்டதாக போலீசில் கூறினார்
    • உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தினர்

    நான் தான் சிறு வயதில் காணாமல் போன உங்களது மகன் என்று கூறி நபர் ஒருவர் பல குடும்பங்களில் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பீம் என்றும் இந்திரராஜ் பல பெயர்களால் அறியப்படும் ராஜு என்பவர் ராஜஸ்தானைச் சேர்த்தவர். 1993 இல், தனக்கு ஏழு வயதாக இருந்தபோது, தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை குடும்பத்துடன் சேர்த்துவைக்குமாறும் போலீசை அணுகியுள்ளார்.

    போலீசார் அவருக்கு ஒரு வாரத்திற்கு உணவு மற்றும் உடைகளை ஏற்பாடு செய்து சமூக ஊடகங்களில் அவரை பற்றய செய்தியை வெளியிட்டனர். அவர் தங்கள் காணாமல் போன பிள்ளைதான் என்று கூறி ஒரு குடும்பம் போலீசை அணுகி ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. இந்த செய்தியை ஊடகங்களும் நெகிழ்ச்சியான தருணமாக வெளியிட்டன.

     

    ஒரு மகிழ்ச்சியான கிளைமாக்ஸ் போல தோன்றிய இது உண்மையில் மோசடி என்பது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜூவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்ற குடும்பதிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு ராஜுவுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ராஜுவின் குட்டு வெளிப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜுவிடம் நடந்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

     தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டில் ராஜு திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவரை கடந்த 2005 ஆம் ஆண்டே வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

    பின்னர் அவர் தனது அடையாளத்தை மறைத்து இதுவரை ஒன்பது வெவ்வேறு குடும்பங்களை மோசடி செய்துள்ளார். காணாமல் போன மகன் என கூறி ஒரு குடும்பத்துக்குள் செல்லும் ராஜு சிலகாலம் அங்கேயே தங்கி பின் அவர்களின் வீடுகளில் கொள்ளையடித்து, யாரிடமும் கூறாமல் அங்கிருந்து நழுவி அடுத்த குடும்பத்துக்குச் சென்றுள்ளார் . மேலும் அந்த குடும்பங்களிடம் என்ன சொத்து உள்ளது என்பதையும் அலசி ஆராய்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

     

    தனது தாயார் இறந்த பிறகு, உணவுக்காகவே மற்றவர்களின் வீடுகளில் இவ்வாறு வசித்து வந்ததாக போலீசாரிடம் ராஜு கூறியுள்ளார் . இதுவரை அவர் தனது போலி அடையாளத்துடன் இருந்த வீடுகளை தவிர்த்து மேலும் பல குடும்பங்களையும் ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவில் ஹிசார் மற்றும் சிர்சா ஆகிய இடங்களில் இவர் இந்த மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். 

    • ஒரு ஆண்டாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
    • நடிகையிடம் நகை பணங்களை வாங்கியதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கு சினிமா நடிகர் ஸ்ரீதேஜ் (வயது 38). இவர் பல்வேறு படங்களில் துணை நடிகர் மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் தன்னுடன் நடித்து வந்த 37 வயதுடைய துணை நடிகையுடன் ஸ்ரீதேஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு ஆண்டாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    அப்போது துணை நடிகையிடம் நகை பணங்களை வாங்கியதாக கூறப்படுகிறது.


    கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடிகையுடன் பேசுவது, பழகுவதை ஸ்ரீ தேஜ் தவிர்த்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி புறக்கணிப்பதை அறிந்த அவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர். மீண்டும் நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேஜ் மீது கற்பழிப்பு மற்றும் மோசடி குறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ஸ்ரீதேஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது
    • 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய தினம் மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

    அப்போது ஆன்லைன் யுபிஐ பணப் பரிவர்த்தனை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரை UPI பணப் பரிவர்த்தனையில், 6.32 லட்சம் மோசடிகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

    அறிக்கைபடி, மோசடிகளில் தொடர்புடைய தொகையின் மதிப்பு ₹458 கோடி ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது.

    இந்த ஆண்டில் செப்டம்பர் வரையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை விட 85 சதவீதம் மோசடிகள் அதிகம் பதிவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 

     

    UPI பரிவர்த்தனை மோசடிகள் உட்பட, பணம் செலுத்துதல் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆகியவற்றால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவற்றில், வாடிக்கையாளர்களின் மொபைல் எண் சரிபார்ப்பு, தினசரி பரிவர்த்தனை வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், NPCI மூலம் மோசடிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக எஸ்எம்எஸ், ரேடியோ பிரச்சாரம், விழிப்புணர்வு பிரச்சாரங்களை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.

    • விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி அரங்கேறியது.

    இதே போல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் கழுதை வளர்ப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கும்பல் என்று அசால்டாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது சந்தையில் கழுதை பாலுக்கு அதிக தேவை உள்ளது.

    ஒரு லிட்டர் கழுதைப்பால் 1600 ரூபாயில் இருந்து 1800 ரூபாய்க்கு வாங்குவதாக விளம்பரம் செய்தனர். யூடியூப் சேனல் வீடியோக்களில் தனக்கு அதிக ஆர்டர்கள் வருகின்றன, ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை.

    கழுதை பால் வியாபாரம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். எங்களிடம் உயர் ரக கழுதைகள் உள்ளன.

    இந்த கழுதைகளுக்கான பணத்தை நீங்கள் செலுத்தினால் மட்டும் போதும். நாங்கள் உங்களுக்கு கழுதை பராமரிப்பதற்கான கொட்டகை அமைக்க உதவி செய்கிறோம்.

    மேலும் ஒரு லிட்டர் கழுதை பாலை நாங்களே ரூ. 1500 கொடுத்து வாங்கிக் கொள்வோம் கழுதைக்கு நோய் வாய்ப்பட்டால் மருத்துவ செலவையும் நாங்களே ஏற்போம் என தெரிவித்தனர்.

    இதனை நம்பி ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்த கும்பல் தெரிவித்த ஆன்லைன் முகவரியை தேடி விண்ணப்பித்தனர்.

    இதில் விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். அதில் கழுதை வளர்ப்பு முறைகள் மற்றும் எப்படியெல்லாம் பால் தேவைப்படுகிறது.

    அவற்றை நாங்கள் எப்படி சேகரித்து வருகிறோம் என்பது பற்றி விளக்கமாக பல மணி நேரம் பேசி நம்ப வைத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் கழுதைகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஒரு கழுதை ரூ.20 ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளன என அறிவிப்பு செய்தனர்.

    இதனை நம்பிய விவசாயிகள் பலர் கழுதைகளை வாங்க லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர்.

    சதுரங்க வேட்டை சினிமா பாணியில் கழுதை கருத்தரங்குகள் நடத்தி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மாநிலங்களைச் சேர்ந்த பலரையும் சிக்க வைத்தனர்.

    இது ஒரு புறம் இருக்க கழுதைப் பாலை வீட்டிலேயே சேமித்து வைக்க தங்களிடம் பிரத்யேகமான எந்திரம் உள்ளது.

    இந்த எந்திரம் ரூ.75,000 முதல் விற்பனைக்கு உள்ளது எனவும் தெரிவித்தனர். அதற்கும் பலர் பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர்.

    கழுதைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டரைக் காட்டி உறுப்பினர் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ.25 லட்சம் வசூலித்தனர்.

    விவசாயிகளுக்கு கழுதை பராமரிப்புக்கான கொட்டகை அமைக்க ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையிலான வங்கி காசோலைகளை கொடுத்தனர். அவற்றை எழுதி வங்கியில் போட்டபோது அவை பணம் இல்லாமல் திரும்பி வந்தன.

    மேலும் கடந்த 18 மாதங்களாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பால் பணம், பராமரிப்பு செலவு கொட்டகை கட்டுதல், பணியாளர் சம்பளம், கால்நடை சிகிச்சை செலவுகள் வழங்கப்படவில்லை.

    அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பணம் கட்டியவர்கள் தெரிந்து கொண்டனர். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இந்த கும்பல் ரூ. 100 கோடி வரை அசால்டாக கொள்ளையடித்துள்ளனர்.

    இது ஒரு பெரிய மோசடி என்னை தெரிந்து கொண்ட விவசாயிகள் இது குறித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போலீஸ்களில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பெயரையும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அந்த பெயர்கள் உண்மையானதா? அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் அண்மையில் வெளியானது.
    • ஜெகதீஷ் சிங் பதானியிடம் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

    பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வருபவர் திஷா பதானி. அண்மையில் இவர் நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    இந்நிலையில், திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானியிடம் உத்தரபிரதேச அரசில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

    உ.பி. அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் அரசாங்க கமிஷனில் உயர் பதவி வாங்கு தருவதாக சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சிங் பதானியிடம் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதை உண்மை என நம்பிய ஜெகதீஷ் சிங் பதானி, ரூ.20 லட்சத்தை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதோடு, ரூ.5 லட்சம் ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்.

    ரூ.25 லட்சம் பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாததால் மோசடி கும்பலிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது ஜெகதீஷ் சிங் பதானியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர்.

    இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி இது தொடர்பாக போலிசீடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜன். இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு துறையூர் சார் நிலை கருவூலம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்துள்ளார்.

    ரெங்கராஜனின் வாரிசுகளான மனைவி ஜெயக்கொடி மற்றும் மகன் ஜெயதேவன் ஆகிய 2 பேரும், அவரின் இறப்பு குறித்து சார்நிலை கருவூலத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். மேலும் கருவூலம் மற்றும் கணக்கு துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளனரா? என்பதை அறிய நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு வர இயலாதவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து ஓய்வூதிய உயிர் வாழ் சான்று பெற்று சார்நிலை கருவூலத்தில் அளிப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வூதியர்கள் அளிக்கும் உயிர்வாழ் சான்றினை இறந்த ரெங்கராஜனின் வாரிசுகள் பல்வேறு முறைகளில் மோசடியாக அளித்து, ரெங்கராஜனின் ஓய்வூதியம் அவரது வங்கி கணக்கிற்கு தொடர்ந்து வருமாறு செய்துள்ளனர்.

    இவ்வாறு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஓய்வூதியத்தை ஜெயக்கொடி மற்றும் ஜெயதேவன் ஆகிய இருவரும் பல்வேறு தவணைகளில், பல்வேறு காசோலைகள் வாயிலாக கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.49 லட்சத்து 69 ஆயிரத்து 279 வரையிலான தொகையினை அரசினை ஏமாற்றி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நேர்காணலுக்கு ரெங்கராஜன் வராததால், சந்தேகமடைந்த கருவூல அதிகாரிகள் ரெங்கராஜனின் இருப்பிட முகவரிக்கு நேரில் சென்று விசாரணை செய்த போது, ரெங்கராஜன் கடந்த 2015ம் ஆண்டே இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கடந்த வருடம் அளித்த ஓய்வூதிய உயிர் வாழ் சான்றினை ஆய்வு செய்ததில், 2015 ஆம் ஆண்டு இறந்த ரெங்கராஜனுக்கு மாராடி கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா என்பவர் 26.9.2022 அன்று ரெங்கராஜன் உயிருடன் இருப்பதாக கூறி, உயிர் வாழ் உறுதி சான்று அளித்ததை அறிந்து அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக துறையூர் உதவி கருவூல அலுவலர் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் மோசடி நடைபெற்ற விதம், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அருகே இறந்தவரின் இறப்பை மறைத்து மோசடியாக ஓய்வூதியம் பெற்று வந்து, தற்சமயம் வெளியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி பரிசளித்துள்ளார்.
    • குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.

    உலகம் போகும் வேகத்தில் ஒரு திருமணம் செய்து வாழ்க்கை நடத்தவே அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சீன நபர் ஒருவர் மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே காம்பவுண்டுகள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடிவைத்து 4 வருடங்களாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஜியாஜூன் என்ற அந்த நபர் வடகிழக்கு சீனாவில் உள்ள ஜீலின் மாகாணத்தை சேர்ந்தவர்.

    பண வசதி இல்லாததால் உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர் ஜியாஜூன். ஆனால் தான் மிகவும் பணம் படைத்த குடும்பத்தை சேர்த்தவர் என்று ஏமாற்றி  ஜியாஜியா என்ற பெண்ணை காதலித்துள்ளார். விலையுயர்ந்த பொருட்களைப் போன்ற போலி தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கி ஜியாஜுவுக்கு பரிசளித்து ஏமாற்றியுள்ளார். ஜியாஜியா கர்ப்பமான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    ஆனால் ஜியாஜுன் பணக்காரர் இல்லை என்று சில காலங்களிலேயே மனைவிக்கு தெரியவந்தது. ஆனால் கணவனை விவகாரத்து செய்யாமல் குழந்தையை தானே வளர்க்க மனைவி முடிவெடுத்துள்ளார். கணவனையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தொடர்ந்து ஜியாஜுன் ஆன்லைன் மூலம் ஜியாஜாங் என்று மற்றொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

    அவரிடம் இருந்து பணம் பெற்று தனது மனைவி வாழும் வீடு உள்ள காம்பவுண்டிலேயே வீடு ஒன்றை எடுத்து அங்கு ஜியாஜாங் உடன் இருந்துள்ளார். மேலும் இதுமட்டுமின்றி பல்கலைக் கழக மாணவிகள் ஜியாமின், ஜியாசின் மற்றும் நர்ஸ் வேலை பார்க்கும் ஜியாலான் ஆகிய மூவரையும்  காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அனைவரிடமிருந்தும் அவ்வப்போது பணம் பறித்தும் வந்துள்ளார்.

     

    மொத்தமாக சுமார் 247 லட்சம் வரை அவர்களிடம் இருந்து ஜியாஜுன் கரந்துள்ளார் . இவர்கள் அனைவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள கட்டடங்களில் உள்ள வீட்டில் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக ஜியாஜூன் மனைவி வாழ்ந்த கட்டடத்திலேயே ஒரு காதலி இருந்துள்ளார்.

    ஆக மனைவி மற்றும் 4 காதலிகளை ஒரே காம்பவுண்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஜியாஜுன் கடந்த 4 வருடமாக மெயின்டேன் செய்து வந்துள்ளார். கடைசியில் ஜியாஜுன் காதலிகளில் ஒருவர் அவர் மீது சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்த பின்னர் ஜியாஜுன் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    • சம்பந்தப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் வெளியாகி அவமானமாகி விடும் என்று அச்சப்படுகின்றனர்.
    • மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேரள காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    ஒரு தனிப்பட்ட நபருக்கு சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஆசையை தூண்டி, அவரை பற்றிய ரகசியங்களை அறிந்தும், அது தொடர்பான விவரங்களை கூறியும் மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவதே "ஹனி டிராப்" மோசடி ஆகும்.

    செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்பாடு அதிகமுள்ள தற்போதைய காலக் கட்டத்தில், "ஹனி டிராப்" மோசடியும் அதிகமாக நடந்து வருகிறது. இந்த மோசடி கும்பலிடம் வாலிபர்கள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு வயதினரும் சிக்கிவிடுகிறார்கள்.

    இதுபோன்ற மோசடி கும்பலிடம் வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் வெளியாகி அவமானமாகி விடும் என்று அச்சப்படுகின்றனர்.

    அவர்களது அந்த மனநிலையை பயன்படுத்தி தங்களிடம் சிக்கும் நபர்களை மோசடி கும்பல் தைரியமாக மிரட்டி பணம் பறிக்கிறது. "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி பணத்தை இழக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த போதிலும், மோசடி கும்பலிடம் பலர் சிக்குவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    சர்வதேச சுற்றுலா தலங்கள் நிறைந்த கேரள மாநிலத்தில் "ஹனி டிராப்" மோசடி சம்பவங்கள் அதிகளவில் நடந்துவருகிறது. இந்நிலையில் அங்கு மேலும் ஒரு "ஹனி டிராப்" மோசடி நடந்திருக்கிறது. திருச்சூர் பூங்குன்றம் பகுதியை சேர்ந்த முதியவரான தொழிலதிபர் ஒருவருக்கு, சமூக வலைதளங்களின் மூலமாக கொல்லம் அஞ்சலம்மூடு பகுதியை சேர்ந்த ஷெமி (வயது38) என்ற இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார்.

    தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி அறிமுகமான ஷெமி, அந்த தொழிலதிபருக்கு செல்போனில் வீடியோ காலில் வந்து தனது நிர்வாண உடலை காண்பிப்பது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு அவருடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார்.

    அவ்வாறு வீடியோ காலில் நிர்வாண போஸ் காண்பித்து தொழிலதிபரிடமிருந்து பணமும் பெற்றபடி இருந்துள்ளார். அது மட்டுமுன்றி நகைகள் மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டார். இவ்வாறாக அந்த தொழிலதிபரிடம் ரூ.2.5கோடி வரை பணத்தை பறித்துக் கொண்டார்.

    இருந்தபோதிலும் தொழிலதிபரை ஷெமி விடுவதாக இல்லை. தொடர்ந்து மிரட்டி பணம் கேட்டபடி இருந்திருக்கிறார். இதனால் அந்த தொழிலதிபர், ஷெமி மீது திருச்சூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஷெமியை கைது செய்தனர்.

    மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கணவர் சோஜன்(32) என்பவரும் கைது செய்யப்பட்டார். தொழிலதிபரிடம் இருந்து பறித்த பணத்தை வைத்து தேவையான பொருட்களை வாங்கி பங்களா, சொகுசு கார்கள் என வாங்கி மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். அவர்களிடமிருந்து 60 பவுன் தங்க நகைகள், 3 சொகுசு கார்கள், ஒரு ஜீப் மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

    கேரளாவை பொறுத்தவரை தொழிலதிபர்கள், வியாபாரிகள் என வசதி படைத்தவர்களே அதிகளவில் "ஹனி டிராப்" மோசடியில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். அவர்களை குறி வைத்தே மோசடி கும்பலும் வலை விரிக்கிறது. அந்த கும்பல் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான ஆபாசம் கலந்த விளம்பரங்களை வெளியிடுகிறது.

    சபலம் காரணமாக அதில் சிலர் சிக்கிவிடுகின்றனர். அவ்வாறு சிக்குபவர்களை மோசடி கும்பல் பிடித்துக் கொள்கிறது. அவர்களுக்கு தகுந்தாற் போல் பேசத் தொடங்கி, பின்பு அவர்களது விருப்பங்களை தெரிந்துகொண்டு தங்களது இடத்துக்கு வரவழைத்துவிடுகிறார்கள்.

    தேன் ஒழுக பேசும் மோசடி பெண்களின் வார்த்தைகளை உண்மை என நம்பி அவர்களுடன் பழகுகிறார்கள். அதன் பிறகே மோசடி கும்பல் தனது வேலையை காட்ட தொடங்குகிறது. தங்களது வலையில் சிக்கும் நபர்களின் அந்தரங்க விஷயங்களை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதையே "ஹனி டிராப்" மோசடி கும்பல் இலக்காக வைத்து செயல்படுகிறது.

    இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேரள காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

    ×