என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ்"

    • ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சக்தி புகழ்வாணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவி சக்தி புகழ்வாணி அண்மையில் தான் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார். மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நாள்கள் நெருங்க, நெருங்க அதில் தம்மால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியுமா? என்ற அச்சமும், பதட்டமும் சக்தி புகழ்வாணிக்கு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, அதைத் தொடர்ந்து மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, நேற்று முன்நாள் வியாழக்கிழமை எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, நேற்று புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி என ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    ஒருபுறம் கடுமையான போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மூன்றாவதாக தாங்க முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதேபோல், பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும். மருத்துவமும் ஒரு பட்டப்படிப்பு தான்; அதில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதைத் தவிர்த்த ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும், அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக இருக்க வேண்டும். நீட்டுக்கு இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது.

    அதற்காக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. மாணவர்கொல்லி நீட் தேர்வை திணிப்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசோ, அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதனால் நீட் அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது.

    நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
    • மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல.

    மேகதாது அணைக்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகம் வலியுறுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த மாதம் 7-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் மத்திய அமைச்சரை கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சந்தித்திருப்பதைப் பார்க்க வேண்டும்.

    70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகைபாலைவனமாகிவிடும். அதைத் தடுக்க வேண்டியது அவசர, அவசியத் தேவையாகும்.

    மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று கூறி கடந்து சென்று விடுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது. இவற்றைப் பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.

    தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தீர்ப்பளித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்தத் தீர்ப்பை மீறித்தான் 2018-ஆம் ஆண்டில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது. வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, அணை கட்டவும் அனுமதி அளிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததன் காரணமாகத் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், இப்போதும் மேகதாது அணை கட்டப்படுவதற்கு தமிழக அரசின் அலட்சியம் காரணமாக இருந்து விடக் கூடாது.

    மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதி செல்லுபடியாகும் வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும். அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    • 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.

    திண்டிவனம்:

    திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும். கடந்த 3 மாதத்தில் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்னகவே 20 மீனவர்கள் இலங்கை சிறையில் கடும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது.

    இந்திய பிரதமர் இலங்கை சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசும்போது மீனவர்கள் முறைவைத்து மீன்பிடிப்பது, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி ராமேஸ்வரம் வரும்போது நல்ல செய்தியை பிரதமர் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக 1118.9 கிலோ மீட்டர் பாதை அமைக்க டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கியது சமூகநீதிக்கு பாதிப்பை உள்ளாக்கும்.

    இந்தியா முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பல்கலை கழகங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக சித்த நூல்களை ஆயுர்வேத நூலாக ஆயுஷ் மாற்றியுள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள் வட இந்தியர்கள் என சொல்லும் வாய்ப்புள்ளது.

    எனவே மே 7-ந் தேதிக்குள் தமிழக அரசு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும். "எம்புரான்" மலையாளப் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

    இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்க வேண்டும். தமிழகத்தில் தொடர் என்கவுண்டர் சம்பவங்களால் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது தெரிகிறது.

    வக்பு வாரிய திருத்த சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கவில்லை. அதனால்தான் தமிழக அரசின் தீர்மானத்தை பா.ம.க. உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.
    • இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.

    இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.இராசா அவர்கள் திறந்து வைத்தார்.

    இவ்வார் அவர் கூறியுள்ளார் 

    • இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை.
    • மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயர் பிரிவினரை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்தில் இருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓபிசி வகுப்பினரின் நலனுக்கான பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

    கிரீமிலேயர் வருமான வரம்பு சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக கிரிமீலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறை கூட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இப்போது பாராளுமன்ற நிலைக்குழுவே இது குறித்து பரிந்துரை செய்திருக்கும் நிலையில், அதை ஏற்று மாநில அரசுகளுடனும், ஓ.பி.சி. அமைப்புகளுடனும் பேச்சு நடத்தி கிரீமிலேயர் வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப் பாடமாகத் தேர்வுசெய்து பட்டப்படிப்பு (பி.ஏ), பட்ட மேற்படிப்பு (எம்.ஏ), இளம் முனைவர்(எம்.பில்), முனைவர் (பி.எச்டி) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எட்) பட்டமும் பெற்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியர் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்;

    தனியார் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; தமிழ்ப் படித்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன.
    • புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. தி.மு.க. அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து 15 மாதங்களாகின்றன. ஆனால், இதுவரை தமிழகத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

    இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


    உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும்.
    • அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2025-ம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. 1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும்.

    தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தி.மு.க. அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.

    அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கனகராஜ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
    • இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி வடக்கு தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    தமிழக அரசின் அலட்சியம் காரணமாக 1½ ஆண்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
    • நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? முப்போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக்க முடியும்.

    மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித்திட்டங்களுக்கு அரசே விளை நிலங்களை கையகப்படுத்துகிறது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்க கூடாது என்று நான் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளேன். இதனால் சாகுபடி பரப்பு 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவும், 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் உள்ளது.

    கேரளா போல தமிழகத்தில் இச்சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசில் அதிகநாள் நடைபெறும் கூட்டத்தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றது என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியதால் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடைபெறும் கொடூரக்கொலைகள் அதிகரித்துவருகிறது. நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடூரக்கொலை நடைபெற்றுள்ளது. எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே இதற்கு காரணமாகும்.

    இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு கொலைகார நாடாக மாறிவிடும். எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். தற்காலிக ஊழியர்களின் பணி நிலைப்பை உறுதிப்படுத்தவேண்டும். இவர்களை பணி நிலைப்பு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்படும் என அறிவித்தும் அதை செயல்படுத்தவில்லை.

    நகைக்கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. வட்டியை மட்டும் புதுபித்துகொள்ளும் நிலை இருந்தது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.

    புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது. வரவேற்கத்தக்கது. சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு வரவேற்கதக்கது.

    தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகமாக உள்ளது உண்மையிலும் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் தி.மு.க.வை போல பா.ம.க. கொடி கம்பங்களை அகற்ற ஆணையிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கவேண்டும். அதே நேரம் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. வெளிநாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. மாநாடு விளம்பரம் எழுதினால் மாநாடு முடிந்த பின் அக்கட்சியே இதை அழிக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளது. இதை தடை செய்ய வேண்டும் என்றார்.

    • சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.
    • இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதம் ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10 சதவீதம் ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தெலுங்கானாவில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூக நீதிப் புரட்சி தான்.

    சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மொழிக்கொள்கையில் உறுதியைக் காட்ட ‘ரூ’ தேவையில்லை.
    • தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான லட்சினையில் 'ரூ' அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தமிழை இந்த அரசு தேடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அணு குமுறையை வைத்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது.

    தமிழை பயிற்றுமொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தி.மு.க. அரசு 2006-ம் ஆண்டில் முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்து அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்தது. இன்று வரை அதன் தமிழ் துரோகம் தொடர்கிறது.

    தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வில்லை. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கையும் விரைவாக விசாரணைக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க எந்த நடவடிக்கையையும் இன்றைய அரசு மேற்கொள்ளவில்லை.

    உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×