என் மலர்tooltip icon
    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது.

    இதற்கிடையே, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் வசமானது.

    இந்த ஆட்டத்தில் 48 ரன் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 504-ஆக உயர்ந்தது. அவர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (475 ரன்) ஆரஞ்சு தொப்பியை தட்டிப் பறித்துள்ளார்.

    இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று 54 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்சுக்குப் பிறகு இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரராக சாய் சுதர்சன் திகழ்கிறார்.

    இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 59 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்ததே அதிவேகமாக இருந்தது. அதனை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

    • பிலிப்பைன்சில் சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் வரிசையாக நின்றன.
    • அந்த வாகனங்கள் மீது ஒரு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ் முன்னால் வரிசையில் நின்ற ஒரு கார் மீது மோதியது.

    இந்த சங்கிலித் தொடர் விபத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது 2 பஸ்களுக்கு இடையில் ஒரு மினி வேன் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வேனில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதேபோல், நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு காருக்குள் இருந்த தம்பதியும் உடல் நசுங்கி பலியாகினர்.

    காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் வலியில் அலறி துடித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விபத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரி விதிப்பு தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
    • பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

    பீஜிங்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றதும் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். ஏப்ரல் 2-ம் தேதி இந்த பரஸ்பர வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தது.

    ஒவ்வொரு முறை அமெரிக்கா சீனா மீது வரி விதித்த போதும், பதிலடியாக, அமெரிக்கா மீது சீனா வரி விதித்தது. தற்போது சீனாவின் மீதான அமெரிக்க வரி 245 சதவீதத்தில் வந்து நின்றது.

    மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், 90 நாட்கள் பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார்.

    இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. 90 நாள் கெடு ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது என்றும், அது குறித்து பரிசீலித்து வருகிறோம் என சீனா தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் பலமுறை தொடர்புடைய தரப்பினர் மூலம் சீனாவிற்கு செய்திகளைத் தெரிவிக்க முயன்று வருவதால், சீனா மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகிறது. வரி விதிப்பு பிரச்சனைகள் குறித்து பீஜிங்குடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

    சீன அரசு செய்தி தொடர்பாளர், வரி மற்றும் வர்த்தகப் போர்கள் அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாகத் தொடங்கப்பட்டன. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். தவறான நடைமுறைகளை சரிசெய்தல், ஒருதலைபட்ச வரிகளை நீக்குதல் போன்ற பிரச்சனைகளில் தயாரிப்புகளைச் செய்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார்.
    • அவரை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

    சென்னை:

    தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மே 3-ம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளாா். அப்போது மாநில நிா்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தவுள்ளாா் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்தார். அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

    எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • இத்தாலி வீரர் முசெட்டி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய டிராபர் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஜாக் டிராபர், காஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
    • ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

    பெங்களூரு:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

    தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

    இந்நிலையில், ஆர்.சி.பி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் விராட் கோலி பங்கேற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் டிரெய்லர் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அந்த டிரெய்லரில் விராட் கோலி பேசியதாவது:

    ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

    எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்யவேண்டும்.

    அவர் என்னிடம் ஒருமுறை, 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, நீங்கள் (கோலி) இந்தியாவுக்காக விளையாடுவதை நான் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே தீங்கு விளைவிப்பீர்கள் என சொன்னார். என்னுடன் நடத்திய உரையாடல்களால் என்னை அவர் மிகவும் திகைக்க வைத்தார்.

    ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பை, எந்த வெள்ளிப் பாத்திரமோ அல்லது எந்தக் கோப்பையோ நெருங்க முடியாது என்று நினைக்கிறேன்

    எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. புதிய வீரர்கள் குழு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு நேரம் தேவை. அவர்களுக்கு பரிணமிக்க, அழுத்தத்தைக் கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட, உலகக் கோப்பை வரும்போது அவர்கள் தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாட 2 வருட சுழற்சி தேவை. இதைப் புரிந்துகொண்டே டி20 போட்டிகளை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.


    • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டில் வாபஸ் பெறப்பட்டன.
    • பக்ரம் விமானப்படை தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றார் அதிபர் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, அந்த விமானப்படை தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அதெரிவித்தார்.

    இந்நிலையில், சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா அணுகுண்டு செய்யும் இடத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள ஊர் பக்ரம். என தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த குஜராத் அணி 224 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

    சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்தார்.

    ஐதராபாத் சார்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் 41 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

    • திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
    • இந்த வாரம் ஓ.டி.டி.யில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம்.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன.

    திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    'பரமன்' (தமிழ்)

    முண்டாசுப்பட்டி', 'பரியேறும் பெருமாள்' 'ஜெய்பீம்' உட்பட பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம், 'பரமன்'. பழ கருப்பையா வில்லனாக நடிக்க, ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார்.

    மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த 'கால்ஸ்' படத்தை இயக்கிய சபரிஸ் இயக்கியுள்ள இப்படம் நேற்று (மே 1) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.

    'வருணன்' ( தமிழ்)

    கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார்.

    படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். இப்படம் நேற்று ( மே 1) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.

    இஎம்ஐ(தமிழ்)

    சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், 'இஎம்ஐ- மாதத் தவணை'. சாய் தான்யா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று ( மே 1) டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியானது.

    28 டிகிரி செல்சியஸ் ( தெலுங்கு)

    அணில் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் `28 டிகிரி செல்சியஸ்'. இப்படம் கடந்த மாதம் 29-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    முத்தய்யா (தெலுங்கு)

    திரையரங்குகளில் வெளியிடப்படாத முத்தையா திரைப்படத்தை பாஸ்கர் மவுரியா இயக்கியுள்ளார். கே. சுதாகர் ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் நேற்று ( மே 1) ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியானது.

    பிரோமன்ஸ் (மலையாளம்)

    'ஜோ அண்ட் ஜோ' , 'ஜர்னி ஆப் லவ் 18' பிளஸ் படங்களை இயக்கிய அருண் டி ஜோஸ் இயக்கிய படம் `பிரோமன்ஸ்'. இப்படம் நேற்று ( மே 1) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    காலபத்தர்(கன்னடம்)

    விக்கி வருண் இயக்குனராக அறிமுகமான இந்தப் படத்தில் தான்யா ராம்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று (மே 2) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    பிளாக் வைட் அண்ட் கிரே( இந்தி)

    புஷ்கர் சுனில் இயக்கியுள்ள வெப் தொடர் `பிளாக் வைட் அண்ட் கிரே'. இந்த வெப் தொடர் இன்று( மே 2) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    குல்:தி லெகசி ஆப் தி ரைசிங்க்ஸ் ( இந்தி)

    ஷாஹிர் ரஸா இயக்கியுள்ள சீரிஸ் `குல்:தி லெகசி ஆப் தி ரைசிங்க்ஸ்'. இப்படம் இன்று ( மே 2) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • நார்வே வீரர் காஸ்பர் ரூட் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டலோ உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய காஸ்பர் ரூட் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ×