search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிறுநீரகம் செயலிழப்பு: நடிகர் திலீப்குமாருக்கு தீவிர சிகிச்சை
    X

    சிறுநீரகம் செயலிழப்பு: நடிகர் திலீப்குமாருக்கு தீவிர சிகிச்சை

    சிறுநீரகம் செயலிழப்பு: நடிகர் திலீப்குமாருக்கு தீவிர சிகிச்சை
    இந்தி திரை உலகில் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் திலீப்குமார். தற்போது அவருக்கு 94 வயதாகிறது. முதுமை காரணமாக அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.

    நீர்ச்சத்து குறைபாடுடன் நடிகர் திலீப்குமாருக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்றும் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை அவர் மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தேறி வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். என்றாலும் இன்று மூன்றாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நடிகர் திலீப்குமாருக்கு சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்து செயல் இழந்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.



    சிறுநீரகங்கள் செயல்படுவது குறைந்து விட்டதால் அவர் சிறுநீர் கழிக்க இயலாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார். உடனடியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையும் உள்ளது.

    திலீப்குமாருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை தொடங்கப்படவில்லை.

    “அவரது உடல்நிலை சீராக இல்லை. அதே சமயத்தில் அவர் மோசமான நிலையிலும் இல்லை. அவர் நல்ல நினைவுடன் இருக்கிறார். அவர் தாமாக சுவாசிக்கும் திறனுடன் உள்ளார்” என்று லீலாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திலீப்குமாரின் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த மும்பை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது சிறுநீரகங்கள் முழுமையாக செயல் இழந்துவிட்டால் அடுத்து அவரது இதயம் மற்றும் நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்தப்படி உள்ளனர்.



    இந்தி திரை உலகில் பல மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த திலீப்குமார் 65-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்தாஸ், ஆன், மதுமதி, தேவதாஸ், முகல்-இ-அசம், கங்கா ஜமுனா, கிராந்தி, கர்மா ஆகியவை அதில் முக்கியமானவை.

    1998-ம் ஆண்டு வரை அவர் படங்களில் நடித்து வந்தார். கடந்த 19 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

    அவரது திரைஉலக சேவையை பாராட்டி 1994-ம் ஆண்டு இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மவிபூ‌ஷண் விருது வழங்கி கவுரவித்தது.
    Next Story
    ×