search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்
    X

    ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதால், காலா ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்க கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. #Kaala #Vishwaroopam2 #2point0
    கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை விஸ்வரூபம் தயாரான 2013-ம் ஆண்டிலேயே படமாக்கி விட்டனர். முதல் பாகத்துக்கு எதிர்ப்பு கிளம்பி வெளிமாநிலங்களிலும் தமிழ் நாட்டிலும் வெவ்வேறு தேதிகளில் வெளியானதால் இரண்டாம் பாகம் பட வேலைகள் முடங்கின.

    சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் நிதி நெருக்கடியால் மீண்டும் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பு பொறுப்பை கமல்ஹாசனே ஏற்று இறுதி கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்தார். தற்போது இந்த படத்துக்கான ரீரிக்கார்டிங், டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது.

    விஸ்வரூபம்-2 படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்தின் 2.0 படம் ஏப்ரலில் வெளியாகும் என்றும் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் கழித்து காலா படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.



    ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் 2.0 தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக காலா படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. அந்த படத்துடன் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 மோத இருக்கிறது. இந்த படத்தில் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். கமல்ஹாசன் டைரக்டு செய்து உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

    முதல் பாகத்தில் அமெரிக்காவில் குண்டு வெடிப்பு நாச வேலைகளை நடத்த திட்டமிடும் தீவிரவாதிகளின் சதியை கமல்ஹாசன் முறியடிப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. கிளைமாக்சில் கமல்ஹாசனிடம் சிக்காமல் பயங்கரவாதிகளின் தலைவன் விமானத்தில் தப்பி செல்வதுபோல் கதை முடிந்தது.

    அந்த தலைவன் மீண்டும் சதிவேலைகள் செய்வது போன்றும் அதை கமல்ஹாசன் தடுத்து பயங்கரவாதிகளை எப்படி அழிக்கிறார் என்பதும் இரண்டாம் பாகத்தின் கதை. இந்த படத்தை விரைவில் தணிக்கை குழுவுக்கு அனுப்பி சான்றிதழ் பெற ஏற்பாடுகள் நடக்கின்றன. #Kaala #Vishwaroopam2 #2point0
    Next Story
    ×