search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது
    X

    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது

    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
    திருச்சியை அடுத்த வயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை உற்சவர் முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து முத்துகுமாரசாமி கோவில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரங்கள் ஓதியபின் மயில்கொடி ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். தொடர்ந்து இரவு முத்துகுமாரசாமி வெள்ளி விமானத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் திருவீதி உலாவும், நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை இரவு 8 மணி அளவில் சிங்காரவேலர் அலங்காரத்தில் அன்னம், வெள்ளிமயில், ரிஷபம், யானை, சேஷம் போன்ற வாகனங்களிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

    16-ந் தேதி மாலை சிங்காரவேலர் அதவத்தூர் தைப்பூச மண்டபம் சென்று, பின்னர் அங்கிருந்து இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். 17-ந் தேதி காலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியசாமி அலங்காரத்தில் ரதாரோகணமும், மாலை 4.30 மணிக்கு மேல் வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.

    18-ந் தேதி நடராஜர் தரிசனம், விசாக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், பிறகு பால்காவடிகள், அபிஷேகங்கள் நடைபெறும். அன்று இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துகுமாரசாமி வெள்ளிகவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளித்தல் நிகழ்ச்சியும், அத்துடன் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 19-ந் தேதி மாலை சங்காபிஷேகமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 20-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறும். அத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவுபெறுகிறது. 
    Next Story
    ×