search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்குலத்தோர் புலிப்படை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: ஜெயலலிதாவை சந்தித்த பிறகு நடிகர் கருணாஸ் பேட்டி
    X

    முக்குலத்தோர் புலிப்படை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு: ஜெயலலிதாவை சந்தித்த பிறகு நடிகர் கருணாஸ் பேட்டி

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நடிகர் கருணாஸ் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தன்னுடைய தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக நடிகர் சங்க துணைத்தலைவரும், முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் நிறுவனத்தலைவருமான நடிகர் கருணாஸ் நேற்று பகல் 11.45 மணியளவில் போயஸ் கார்டனுக்கு வந்தார். அவர் முன்பே அனுமதி பெற்றிருந்ததால் அவரது கார் போலீசாரால் வழி மறிக்கப்படவில்லை. முதல்-அமைச்சரின் இல்லத்திற்கு சென்ற அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தன்னுடைய தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், ‘முதல்-அமைச்சரை சந்தித்து வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு என்னுடைய அமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தேன். இதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். மக்களுக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார். எனவே 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்வார்’ என்றார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    16.5.2016 அன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனத்தலைவர் கருணாஸ் தலைமையில், அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை, துணைத்தலைவர் ஆ.சந்தனகுமார், பொருளாளர் முருகன், முக்குலத்தோர் முகவரி ஆசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.விற்கு, தங்களது அமைப்பின் முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமையில், அச்சங்கத்தின் தலைவர் சின்னச்சாமி, பொருளாளர் வேலுமணி, தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் பன்னீர்செல்வம், நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் தங்களது சங்கத்தின் முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இந்நிகழ்வின் போது, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
    Next Story
    ×