search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
    X

    தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    பருவமழை பொய்த்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பெருமளவு குறைந்து விட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை உள்பட சில மாவட்டங்களில் பெண்கள் குடிநீர் எடுப்பதற்காக மைல் கணக்கில் நடக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்காக பொது மக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இது அந்தந்த தொகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்ப்பதற்காக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.


    குடிநீர் தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைப்பது பற்றி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. முக்கிய நகரங்களுக்கு அருகில் உள்ள விளை நிலங்களில் இருந்து குடிநீர் எடுப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    வரும் நாட்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. மசோதா பற்றியும் பேசப்பட்டது. ஜி.எஸ்.டி. மசோதா அமலுக்கு வரும் போது தமிழ்நாட்டிற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வது எப்படி என்பது பற்றியும் பேசப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன், காமராஜ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×