search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் - நேரு பூங்கா இடையே அடுத்த வாரம் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்
    X

    திருமங்கலம் - நேரு பூங்கா இடையே அடுத்த வாரம் மெட்ரோ ரெயில் சேவை: அதிகாரிகள் தகவல்

    திருமங்கலம்-நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் அடுத்த வாரம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
    சென்னை:

    திருமங்கலம்-நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் அடுத்த வாரம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணியில் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலம் முதல் ஷெனாய் நகர் வரை 3.3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 சுரங்கப்பாதையிலும், ஷெனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை 4.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒரு வழி சுரங்கப்பாதையிலும் ஆய்வுப்பணி நடந்தது.

    இதற்காக பெங்களூரில் இருந்து கடந்த மாதம் சென்னை வந்த மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் இந்த பாதையில் ஆய்வு செய்தார். இதையடுத்து தற்போது இந்த பாதையில் பயணிகள் ரெயில் இயக்க அனுமதி வழங்கி உள்ளார்.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    திருமங்கலம்-நேரு பூங்கா இடையே நடந்த ஆய்வில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை, சிக்னல்கள், தகவல் தொடர்பு கருவிகள், தீ தடுப்பு கருவிகள் செயல்படும் விதம், ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி ஆணையர் ஆய்வு செய்தார்.

    அப்போது பாதுகாப்பு கருதி சில மாற்றங்களை செய்ய பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி அந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. திருமங்கலம்-நேரு பூங்கா இடையே 7.6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் பயணிகள் ரெயிலை இயக்க தற்போது அனுமதி கிடைத்து உள்ளது.

    மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் அடுத்த வாரத்தில் ரெயில் சேவையை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். சுரங்கப்பாதையில் எந்த தேதியில் ரெயில் இயக்கப்படும்?, கட்டணம் ஆகியவை குறித்து இப்போது பதிலளிக்க இயலாது. இதுகுறித்து மாநில அரசு தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 
    Next Story
    ×