search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் ஓணம் வாழ்த்து
    X

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் ஓணம் வாழ்த்து

    ஓணத் திருநாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ஓணம் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய பண்டிகையான திருவோணப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி, அந்த சக்கரவர்த்தியின் தலையில் தனது காலை வைத்து பாதாள உலகிற்கு தள்ளும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை பூலோகம் வந்து தன்னுடைய அன்பு மக்களை காண வேண்டுமென்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் தினத்தை திருவோணத் திருநாளாக மலையாள மொழி பேசும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் வீடுகளின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலங்களிட்டு, புத்தாடை உடுத்தி, குடும்பத்தினருடன் கூடி அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

    சாதி, சமய பேதமின்றி, அனைத்து தரப்பு மக்களாலும் சமத்துவத்துடன் ஒற்றுமையாக கொண்டாடப்படும் ஓணத் திருநாளில், உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் உயர்ந்து தழைக்க வேண்டுமென்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள ஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ஓணம் பண்டிகை மகாபலி மன்னன் வருகையையும், செழிப்பான அறுவடையையும் குறிக்கிறது.

    அறுவடை திருவிழா வேற்றுமைகளை ஒதுக்கி ஒன்றாக இணைந்து முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட நினைவூட்டுகிறது. ஓணம் பண்டிகை சகோதரத்துவத்தை தேச ஒருங்கிணைப்பு, கடின உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கட்டும். மேலும் இந்தியா அனைத்து துறையிலும் முதன்மை தீர்வாக அமையட்டும்

    இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் மலையாள சகோதர, சகோதரிகளுக்கு எனது ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    தமிழகத்தில் எவ்வித பேதமின்றி மலையாள மொழியை பேசுகிற லட்சக்கணக்கான கேரள மாநில மக்கள் தொழில் நடத்தி வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களும் மலையாள மக்களும் சகோதர உணர்வோடு நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

    தமிழகத்தில் வாழ்கிற கேரள மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    Next Story
    ×