search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பக்தர்களுடன் தீபாவளி கொண்டாடும் பெருமாள்
    X

    பக்தர்களுடன் தீபாவளி கொண்டாடும் பெருமாள்

    • திருப்பதி ஏழுமலையான் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்.
    • அங்கு சாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும். இதை தரிசித்தாலே நமது துன்பங்கள் விலகும்.

    திருப்பதி ஏழுமலையான் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்.

    அதற்காக தீபாவளிக்கு முதல் நாள் பக்தர்களின் எண்ணைக் குளியலுக்கு வேண்டிய நல்ல எண்ணை, தேவ ஸ்தானத்தால் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    தீபாவளிக்கு முதல் நாள் இரவு எட்டு மணிக்கு, நான்கு மாட வீதிகள் வழியாக கோவில் அர்ச்சகர்கள் பெரிய "கேன்"களில் நல்லெண்ணையைக் கொண்டு வருவார்கள்.

    சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு நல்லெண்ணை வழங்கப்படுகிறது.

    வாங்காதவர்கள், தேவஸ்தான அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த எண்ணையை பக்தர்கள் தீபாவளி அன்று விடியற்காலை பூஜித்து தலையிலும் உடலிலும் தேய்த்து நீராடுவார்கள்.

    பக்தர்களுக்கு மட்டுமல்ல... கோவிலில் பணியாற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் இந்த நல்லெண்ணை பிரசாரம் வழங்கப்படுகிறது.

    தீபாவளி அன்று காலை... 7 மணி முதல் 9 மணி வரை, "கோவில் தங்க வாசல்" முன்பு உற்சவ மூர்த்தி ஸ்ரீமலையப்ப சாமி, வைரமுடியுடன், தங்க&வைர நகைகள், பட்டுப்பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீதேவி & பூதேவியுடன் எழுந்தருள்வார்.

    அங்கு சாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும். இதை தரிசித்தாலே நமது துன்பங்கள் விலகும்.

    திருமஞ்சன சேவை முடிந்ததும், மீண்டும் சாமிக்கு அலங்கார & ஆராதனைகள் நடைபெறும். அப்போது லட்டு, ஜிலேபி போன்ற பலகாரங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இரவு ஏழு மணிக்கு ஸ்ரீதேவி & பூதேவியுடன் மலையப்ப சாமி, மாட வீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள் புரிவார்.

    சாமி ஊர்வலத்துக்கு முன் மத்தாப்பூ, வண்ண வண்ண பூத்திரி ஆகியவற்றைக் கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடுவர். முன்பெல்லாம் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

    இப்போது, திருமலையில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளதால், மத்தாப்பூ கொளுத்தி சாமியுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பக்தர்களுடன் தீபாவளி கொண்டாடும் பெருமாளை அன்று தரிசிக்க, வாழ்வில் வசந்தம் வீசும்.

    Next Story
    ×