மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர்... போலீசாரிடம் கோரிக்கை வைத்த ரோகித் சர்மா- வீடியோ வைரல்
- ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
- இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 5-ந்தேதி நியூயார்க்கில் சந்திக்கிறது.
இதையொட்டி இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நியூயார்க்கில் நேற்று சந்தித்தது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் புகுந்தனர்.
2-வது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் (1 ரன்) ஷோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத்தொடந்து ரிஷப் பண்ட், ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஷிவம் துபே (14 ரன், 16 பந்து, ஒரு சிக்சர்) நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்னில் (18 பந்து, 4 பவுண்டரி), தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களுடனும் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், மக்முதுல்லா, தன்விர் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக மக்முதுல்லா 40 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ஐந்து அமெரிக்க போலீசார் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். அதில் இருவர் அந்த ரசிகரை தரையில் சாய்த்து, அவர் மீது அமர்ந்தனர். ரசிகரின் இரண்டு கைகளையும் பின்புறமாக மடக்கினர். பின்பு அவரை தரையோடு இருக்குமாறு எச்சரித்தனர். அவர் லேசாக அசைந்ததால் அவர் மீது முழு எடையையும் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சியை பார்த்த அனைவருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் இது போன்று அத்துமீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The fan who breached the field and hugged Rohit Sharma was taken down by the USA police.
— ARVIND SINGH RAJPUROHIT (@avrajpurohit108) June 1, 2024
- Rohit requested the officers to go easy on them.#T20WorldCup#INDvsBAN pic.twitter.com/bWJULv9iur