சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிவிபி சினிமா

Published On 2016-05-28 07:12 GMT   |   Update On 2016-05-28 07:12 GMT
பிவிபி சினிமா நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டதாக செய்திகள் வெளியானது. இதை பிவிபி நிறுவனம் மறுத்துள்ளது.
‘நான் ஈ’, ‘விஸ்வரூபம்‘, ‘தோழா’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற வெற்றி படங்களை பிவிபி சினிமா நிறுவனம் தயாரித்தது. அண்மையில், பிவிபி நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறுகிறது போன்ற செய்திகள், ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தகவல் என்றும், இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிவிபி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து பிவிபி சினிமா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வதந்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடங்களில் பரவி கொண்டு வருகிறது. தோல்விகளை கண்டிறாத யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அந்த தோல்விகளை வெற்றி படிகளாக மாற்றுவதே உண்மையான வெற்றிக்கு பாதை வகுக்கும்.

ஏற்றங்களும், இறக்கங்களும் சமமாக இருக்கும் ஒரு துறை, சினிமா தான். அப்படி ஏற்பட்ட ஒரு சறுக்களுக்காக பாரம்பரியமிக்க எங்கள் நிறுவனம் ஒருபோதும் துவண்டுவிடாது. பிரபல ஹீரோ மற்றும் பிரபல இயக்குனரின் கூட்டணியில் உருவாகும் ஒரு படம் எங்களின் தயாரிப்பு வரிசையில் இருப்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.

அதுமட்டுமின்றி, பிவிபி சினிமா தொடர்ந்து மக்களுக்காக தரம் வாய்ந்த படங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளது" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News