சினிமா
கடந்த ஆண்டில் தமிழ், இந்தி படங்களுக்கு வரவேற்பு இல்லை, சாதனை படைத்த பாகுபலி
கடந்த ஆண்டில் தமிழ், இந்தி படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில், பாகுபலி படத்தால் தெலுங்கு திரையுலகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருந்தது என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அவை வருமாறு:-
இந்தி பட உலகம் 2017-ம் ஆண்டு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது கடந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 9 சதவீத வருமானம் குறைந்துள்ளது.
2013-ம் ஆண்டு இந்தி படங்களின் வசூல் ரூ.2,718 கோடி. 2014-ல் ரூ.2,745 கோடி. 2015-ல் ரூ.2,619 கோடியாக இருந்தது. 2016-ல் ரூ.2,780 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2017-ல் இந்தி பட வருமானம் ரூ.2,525 கோடியாக குறைந்துவிட்டது.
இதுபோல் தமிழ்பட உலகமும், சரிவையே சந்தித்து இருக்கிறது. 2016-ம் ஆண்டு தமிழ் படங்களின் மொத்த வசூல் ரூ.996 கோடி. 2017-ல் இந்த வருமானம் ரூ.946 கோடியாக குறைந்து விட்டது.
இதன்மூலம் தமிழ்ப்பட உலகம் 5 சதவீத சரிவை சந்தித்து இருக்கிறது. டிக்கெட் விலை உயர்வு, தியேட்டர் கட்டணம், ஆன்லைன் மூலம் புதுப்படங்கள் வெளியாவது போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திரை உலகினர் தெரிவித்தனர்.
தெலுங்கு பட உலகம் 2016-ம் ஆண்டை விட 2017-ம் ஆண்டு 47 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2016-ம் ஆண்டு தெலுங்கு படங்களின் மொத்த வசூல் ஆயிரத்து 42 கோடி ரூபாய். ஆனால் கடந்த ஆண்டு தெலுங்கு படங்களின் மூலம் கிடைத்த வருமானம் ஆயிரத்து 533 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
தெலுங்கில் தயாரான ‘பாகுபலி 2’ கடந்த ஆண்டில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த படம் மட்டும் ரூ.285 கோடி வசூலை குவித்தது. இது தெலுங்கு பட உலக வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதுபோல் ஆங்கில படங்களுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான ஆங்கில படங்களின் மொத்த வசூல் ரூ.795 கோடி. கடந்த ஆண்டு இது 801 கோடியாக அதிகரித்துள்ளது.