சினிமா செய்திகள்

அஸ்திரம் படத்தின் திரைவிமர்சனம்

Published On 2025-03-21 19:45 IST   |   Update On 2025-03-21 19:45:00 IST
  • தற்கொலை செய்து கொள்ளும் பின்னணியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை .

கதைக்கரு 

தற்கொலை செய்து கொள்ளும் பின்னணியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை.

கதைக்களம்

கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஷாம். கொள்ளையன் ஒருவனை ஷாம் பிடிக்க போகும் போது, அவரது தோள்பட்டையில் குண்டு காயம் அடைந்து வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவரது போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பூங்காவில் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் திடீரென வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்கிறார். பல ஊர்களில் இது போன்று தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது. மர்மமான இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து ஷாம் விசாரிக்க தொடங்குகிறார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.

இறுதியில் பலரின் தற்கொலைக்கு பின்னணியில் இருப்பதை ஷாம் கண்டுபிடித்தாரா? தற்கொலை சம்பவங்கள் ஏன் நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ஷாம், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கையில் கட்டுடன் இவர் விசாரணை நடத்தும் தோரணை வியக்க வைக்கிறது. இவருக்கு பக்கபலமாக நடித்து இருக்கிறார் நாயகி மீரா.

ஷாமுடன் இணைந்து துப்பறியும் காட்சிகளில் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் சுமந்த் நடிப்பு கூடுதல் பலம். மனநல மருத்துவராக நிழல்கள் ரவி மற்றும் போலீஸ் அதிகாரியாக அருள்ஜோதி, கொடூர சைக்கோ கொலையாளியாக விதேஷ் மற்றும் ஜீவா ரவி ஆகியோர் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இயக்கம்

ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடி தோல்வி அடைந்தவர்களை வயிற்றில் குத்தி தற்கொலை செய்ய வைத்த கதை களத்தை 'அஸ்திரம்' படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால். படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை மாறுபட்ட கதை களத்தை காலத்திற்கேற்றவாறு திரில்லர் படமாக கொண்டு வந்துள்ளது பாராட்ட வைக்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

ஒளிப்பதிவு & இசை

கே.எஸ்.சுந்தரமூர்த்தி பின்னணி இசை, கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

தயாரிப்பு

Best Movies நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Tags:    

Similar News