சினிமா செய்திகள்

சைஃப் அலி கான் மீது தாக்குதல்: வங்கதேச ஆசாமியை தட்டித் தூக்கிய போலீஸ் - நடுவில் நடந்த ட்விஸ்ட்

Published On 2025-01-19 11:54 IST   |   Update On 2025-01-19 11:56:00 IST
  • சைஃப் அலி கானை 6 இடங்களில் கத்தியால் குத்தியவர் இன்று பிடிபட்டார்
  • இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக் கொண்டார்.

பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மர்மநபர் கத்தியால் குத்தியதில் சைஃப் அலிகானின் கழுத்து, கை உள்ளிட்ட 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த சைஃப் அலிகான் லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது உடல்நலம் தேறி வரும் அவரும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சைஃப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

13 மாடிகள் கொண்ட வீட்டில் 4-வது மாடியில் சைஃப் அலிகான் வசித்து வந்தார். மர்மநபர் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? என்பது புரியாத புதிராக இருந்தது. மேலும் வீட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிராக்கள் இருந்ததும், அதில் மர்மநபரின் உருவம் தெள்ளத்தெளிவாக பதிவாகாததும் மர்மநபரை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்தது.

இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வாலிபர் ரெயிலில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தப்பிச்செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மும்பை போலீசார் சத்தீஸ்கரில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சந்தேக நபரான ஆகாஷ் கனோஜியா என்பவரை மடக்கி பிடித்தனர்.

இவர் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் என முதலில் தகவல் பரவியது. ஆனால் போலீசார் அதனை மறுத்தனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

சைஃப்  அலிகான் வீட்டில் இருந்த சில சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாக இருந்த காட்சிகளின் பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

இதனடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய முகமது என்பவரை இன்று அதிகாலை போலீசார் தானேவில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதான முகமது தானேவில் உள்ள ஒரு மதுபாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.  போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை சேகரித்து மும்பையில் பல்வேறு இடங்களிலும் ஒட்டி தீவிரமாக தன்னை தேடுவதை அறிந்த முகமதை தானேவிலேயே பதுங்கி இருக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தானேவில் உள்ள ஹிராநந்தினி தோட்டத்தில் உள்ள மெட்ரோ கட்டுமான பகுதிக்கு அருகே உள்ள தொழிலாளர் முகாமில் தங்கி உள்ளார். இரவு நேரத்தில் அங்குள்ள முட்புதர்களுக்குள் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

போலீசார் அவரை சுற்றி வளைத்ததும், முதலில் தனது பெயர் விஜய் தாஸ் என கூறியுள்ளார். பின்னர் பிஜோய் தாஸ் எனவும், அதன் பிறகு முகமது சஜித் எனவும் கூறியுள்ளார்.

இறுதியாக விஜய் தாஸ் என பெயரை மாற்றிக்கூறி போலீசை ஏமாற்றி உள்ளார். எனினும் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் பணிப்பெண்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட முகமதை போலீசார் மும்பை பாந்த்ராவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் தீக் ஷித் குமார் நிருபர்களிடம் கூறியதாவது,

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தை சேர்ந்த அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத். கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார். அவரிடம் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் எதுவுமில்லை.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் மும்பை வந்துள்ளார். இங்குள்ள வீட்டு வேலை பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபிறகு போலீஸ் விசாரணைக்கு எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News